8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Refutations

Called "Madkhali" for Speaking the Truth – Slanders and Replies (Part 1)சத்தியத்தை பறைசாற்றினால் “மத்கலீ” என்று அழைப்பது. அவதூறுகளும் அதற்கான பதில்களும் பகுதி – 1

This article is in Tamil.
On this page5

‘கமேனியின் மரணமும் உணர்ச்சிவசப்படும் அழைப்பாளர்களும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை 1 சென்றவாரம் வெளியிட்டிருந்தோம் அல்ஹம்துலில்லாஹ். இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை விவரிக்கும் இத்தகைய எழுத்துக்கள் நம் முஸ்லிம்களிடம் சென்றடைந்து, அவர்களுக்கு மார்க்க ரீதியான தெளிவை ஏற்படுத்த எல்லாம் வல்ல அகிலத்தின் ரப்பிடம் துஆ செய்து கொள்கிறேன்.

இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் வழக்கம் போல் சத்தியத்தின் பக்கம் வர மறுப்பவர்களும், அசத்தியத்தின் ஆழத்தை அறியாதவர்களும் அவதூறுகளை அள்ளி வீசத் தொடங்கிவிட்டனர். ஆட்சியாளர்கள் விஷயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, இதற்கு முன்னரே குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் மிக விரிவான விளக்கங்களை நாம் முன்வைத்திருக்கிறோம் 2. நபிவழியின் நிலைப்பாட்டையும், உலமாக்களின் தெளிவான ஃபத்வாக்களையும், ஆதாரங்களுடன் தொகுத்து வழங்கிய பிறகும், இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் இப்போதும் தங்கள் அசத்தியக் கோட்பாட்டிலேயே பிடிவாதமாக நிற்பது கவலைக்குரியது.

சத்தியவாதிகள் மீது பட்டப்பெயர் சூட்டுவது — புதிதல்ல

இன்று ஆட்சியாளர்கள் குறித்த மார்க்கத்தின் உண்மையான நிலைப்பாட்டை நாம் உரக்கச் சொன்னால், இவர்கள் உடனடியாக நம்மை ‘மத்கலிகள்’ என்றும் ‘ஜாமிகள்’ என்றும் அடையாளப்படுத்துகிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல; வரலாற்றில் சத்தியத்தை ஏந்தியவர்கள் எப்போதும் இத்தகைய ஏளனங்களை கடந்தே வந்திருக்கிறார்கள்.

அல்லாஹ் தன் திருமறையில் தன் நபியை பற்றி கூறுகிறான்:

وَكَذَٰلِكَ مَا أَتَى ٱلَّذِينَ مِن قَبْلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُوا سَاحِرٌ أَوْ مَجْنُونٌ

“இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் தூதர் எவர் வந்தபோதும், அவர்கள் ‘இவர் ஒரு சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர்’ என்று கூறாமல் இருந்ததில்லை.”

(அல்குர்ஆன் – ஸூரத்துத் தாரியாத் 51:52)

இந்த இறைவசனம் உணர்த்துவது போல, காலந்தோறும் சத்தியத்தை ஏந்தியவர்கள் மீது அநீதியான பட்டங்களைச் சூட்டுவது அசத்தியவாதிகளின் வாடிக்கையாகவே இருந்துள்ளது.

இருநூற்றைம்பது (250) வருடத்திற்கு முன்னர் அல்-இமாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தூய தவ்ஹீதைப் பிரச்சாரம் செய்தபோது, அவர்களை முடக்க நினைத்தவர்கள் ‘வஹாபி’ என்று பட்டம் சூட்டினார்கள். அவருக்கு முன்னால் வாழ்ந்த மாபெரும் அறிஞர் ஹிஜ்ரி 728 மரணித்த ஷய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களையும், அவர்களின் குடும்பத்தாரையும் அன்றைய வழிகேடர்கள் ‘மகாதிஸா’ என்று அழைத்து இழிவுபடுத்த முயன்றார்கள்.

எனவே, இன்றும் இவ்வாறு சுமத்தப்படும் இந்த வீண் பழிகளும், அவதூறுகளும் காலங்காலமாக அறிஞர்கள் மீது சுமத்தப்படும் அநீதியின் தொடர்ச்சிதான் என்பதை நாம் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம். குறிப்பாக, இன்றைய தமிழகச் சூழலில் இத்தகைய மலிவான விமர்சனங்கள் பெருகி வரும் நிலையில், நாம் எத்தகைய உறுதியுடன் இந்த சத்தியப் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

சத்திய வேடத்தில் வரும் அரசியல் கலப்பு: சுரூரிய்யாக்களின் அடையாளம்

இப்போது அறங்கேரிக்கொண்டிருக்கும் இந்த ஃபித்னாவில், இணைவைப்பிலும், தெளிவான வழிகேட்டிலும் இருப்பவர்களிடமிருந்து வரும் எதிர்ப்புகளை விடவும், தங்களை ‘அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்’ என்றும், ‘ஸலஃபிகள்’ என்றும், சஹாபாக்களின் வழியைப் பின்பற்றுபவர்கள் என்றும் அடையாளப்படுத்திக் கொள்பவர்களிடமிருந்து வரும் எதிர்ப்பு தான் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. இவர்கள் தவ்ஹீதைப் பேசுவார்கள், சுன்னாவைப் பற்றிப் பேசுவார்கள், ஆனால் இவர்களின் அடிப்படை எங்கே சிதைந்து போகிறது என்றால், தூய ஸலஃபீ மன்ஹஜை (கொள்கை நடைமுறையை) அரசியல் புரட்சிவாத இக்வானிஸ சிந்தனைகளோடு கலக்கும்போதுதான்.

இந்த இடத்தில் நாம் மிக முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு கூட்டம் தான் ‘சுரூரிய்யா’. ஒன்பது வருடத்திற்கு முன்னால் ஹிஜ்ரி 1438 ல் மரணித்த முஹம்மது சுரூர் ஸைனுல் ஆபிதீன் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்தச் சிந்தனைப் போக்கு, பெயரளவில் ஸலஃபீ அகீதாவைப் பேசுவது போலக் காட்டிக் கொண்டாலும், உண்மையில் ‘இக்வானுல் முஸ்லிமீன்’ 3 போன்ற அமைப்புகளின் அரசியல் கிளர்ச்சிப் போக்கையும், ஆட்சியாளர்களுக்கு எதிரான புரட்சிவாதச் சிந்தனைகளையும் தூய ஸலஃபீ கொள்கைக்குள் திணிக்க முயற்ச்சித்தவர்கள் என்றே அறிஞர்கள் அடையாளம் காட்டுகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், ஸலஃபீ அகீதாவிற்கும் அரசியல்வாதக் கோட்பாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக இவர்கள் செயல்படுகிறார்கள்.

குறிப்பு: இன்ஷா அல்லாஹ், ‘சுரூரிய்யா’ கூட்டத்தைப் பற்றியும், அவர்களின் ஆபத்தான நிலைப்பாடுகள் குறித்தும் மிக விரிவான ஒரு கட்டுரையை மற்றுமொரு தருணத்தில் எழுத முயற்சிக்கிறேன், இன் ஷா அல்லாஹ்.

நாம் எப்போதெல்லாம் ஆட்சியாளர்கள் விஷயத்தில் நபிவழியின் நிலைப்பாட்டைத் தெளிவாகவும், ஆதாரப்பூர்வமாகவும் முன்வைக்கின்றோமோ, அப்போதெல்லாம் நமக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைப்பதும், ‘மத்கலிகள்’, ‘ஜாமிகள்’ என்று முத்திரை குத்துவதும் இந்த சுரூரிய்யாக்கள்தான். குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் நாம் முன்வைக்கும் தெளிவான ஆதாரங்களுக்குப் பதிலளிக்க முடியாமல், உணர்ச்சிவசப்படும் இளைஞர்களைக் கவர்வதற்காக இத்தகைய அவதூறுப் பெயர்களை இவர்கள் ஏவுகிறார்கள்.

இவர்களுடைய இந்த வீணான விமர்சனங்களுக்கும், இவர்கள் பரப்பும் குழப்பங்களுக்கும் மார்க்க ரீதியான தகுந்த பதிலைத் தருவதே இந்தக் கட்டுரையின் முக்கிய நோக்கமாகும். அல்லாஹ்வே நேர்வழியில் செலுத்துபவன்.

சத்தியத்தை பறைசாற்றினால் “மத்கலீ” என்று அழைப்பது

முதல் பிரதான குற்றச்சாட்டு, சலஃபி மார்க்க அறிஞர்களை “மத்கலீ சலஃபி” என்று முத்திரை குத்துவதும், அவர்கள் சவூதி அரேபியா என்ன செய்தாலும் அதற்கு கண்மூடித்தனமாக முட்டுக் கொடுக்கிறார்கள் என்பதுமாகும். இந்தப் பெயர் எங்கிருந்து வந்தது, இதன் பின்னணி என்ன என்பதை வரலாற்று ரீதியாக பார்க்க வேண்டியது அவசியமாகும்.

“மத்கலீ” அல்லது “ஜாமியா” போன்ற பெயர்கள் எந்தவொரு தனிப்பட்ட இஸ்லாமியக் கொள்கையையும் குறிக்கும் சொற்கள் அல்ல. மாறாக, இவை அரசியல் இஸ்லாமிய அமைப்புகளால் தங்களுக்கு முரணான நிலைப்பாட்டைக் கொண்ட அஹ்லுஸ் ஸுன்னாவின் அறிஞர்களை இழிவுபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட பட்டப்பெயர்களாகும். வரலாற்று ரீதியாகப் பார்த்தால், தவ்ஹீத் (ஏகத்துவக்கொள்கை) மற்றும் சுன்னாவை நிலைநாட்ட வந்த அறிஞர்களை மக்கள் மன்றத்தில் கொச்சைப்படுத்துவதற்காக “வஹாபி” என்ற பெயர் எவ்வாறு பயன்படுத்தப்பட்டதோ, அதே உத்தியே தற்போதும் கையாளப்படுகிறது.

அடிப்படையற்ற இந்தப் பட்டப்பெயர்களை உருவாக்குவதன் நோக்கம், பொதுமக்களிடம் அறிஞர்கள் மீதான நம்பகத்தன்மையைக் குலைப்பதேயாகும் . ஷைக் முஹம்மது அமான் அல்-ஜாமி 4. மற்றும் ஷைக் ரபீஃ பின் ஹாதி அல்-மத்கலீ 5 ஆகிய அறிஞர்கள், உணர்ச்சிப்பூர்வமான புரட்சிகர அமைப்புகளின் வழிகேடுகளை ஆதாரப்பூர்வமாக தோலுரித்துக் காட்டியதால், அந்த அமைப்புகள் அவர்களைக் குறிவைத்து இந்தப் பெயர்களை சூட்டின. ஷைக் ரபீஃ அல்-மத்கலீ அவர்கள் இஸ்லாமிய கொள்கைக்குப் புறம்பான இக்வானிஸ சிந்தனைகளை எதிர்த்துப் பல நூல்களை எழுதியுள்ளார்.

4. அஷ்ஷய்க் முஹம்மத் அமான் அல்-ஜாமீ (ரஹிமஹுல்லாஹ்) (ம: ஹி 1416 / 1996) எத்தியோப்பியாவிலிருந்து வந்து மதினாவில் வாழ்ந்து மரணித்த அறிஞர். கொள்கைக்கு பெரும் முக்கியத்துவத்தை வலியுறித்தினவர். வழிகெட்ட இயக்கங்களுக்கு எதிராகக் கடுமையாகப் பிரச்சாரம் செய்தவர் ↩
5. அஷ்ஷய்க் ரபீஃ பின் ஹாதி அல்-மத்கலீ (எட்டு மாதங்களுக்கு முன்னர் தங்களின் 96வது வயதில் வஃபாத்தாகிவிட்டார்கள்). (ரஹிமஹுல்லாஹ்). அல்-மத்கலி’ என்பது சவூதி அரேபியாவின் புகழ்பெற்ற ‘பனூ ஷபீல்’ என்ற பெரிய கோத்திரத்தின் ஒரு கிளைக் குலமாகும். இவர்கள் சவூதியின் தெற்குப் பகுதியில் உள்ள ஜாஸான் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இந்தப் பகுதி மற்றும் இவர்களுடைய மத்கலீ குடும்பம் கல்விக்கும், மார்க்கப் பற்றுக்கும் மிகவும் பெயர் பெற்றது. இவர்களது குடும்பத்தில் பல நீதிபதிகளும் கல்விமான்களும் உருவாகி இருக்கிறார்கள். அதுபோல்தான் அஷ்ஷய்க் ரபீ அவர்களும் மதீனா பல்கலைக்கழகத்தின் சுன்னா துறைத் தலைமை ஆசிரியராக இருந்தவர். வழிகெட்ட இயக்கங்களின் கொள்கைகளை குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் தோலுரித்துக் காட்டுவதில் பெரும் கல்வியை பெற்றவர். மவ்தூதி மற்றும் ஸய்யித் குத்ப் போன்றோர்களின் வழிகேடுகளை ஆரம்ப காலங்களில் வெளிச்சம்போட்டு காட்டிய பிராதான அறிஞர்களில் இவரும் ஒருவர் ↩
எனவே, குர்ஆன் ஸுன்னா அடிப்படையிலான மார்க்க சத்தியத்தை மக்கள்மன்றத்தில் தெளிவுபடுத்தும் அறிஞர்களில் ஒருவரான அஷ்ஷய்க் ரபீ அல்-மத்கலீ போன்ற ஆலிம்களை பின்பற்றும் அனைவர்களையும் “மத்கலீகள்” என்று முத்திரையிடப்படுவது ஒரு அநீதியான அவதூரின் வெளிப்பாடே தவிர, அதில் எந்த மார்க்க அடிப்படையும் இல்லை
என, எம் முஸ்லிம் சகோதர சகோதரிகள் நன்கு புரிந்துக்கொள்ள வேண்டும். இது எந்தளவிற்கு போய்விட்டதென்றால் முஸ்லிம் ஆட்சியாளர்கள் விஷயத்தில் நபிவழியை பின்பற்றச் சொல்லும் அனைவரையும் “மத்கலீகள்” என்று சாடுகிறார்கள்.

அஷ்ஷய்க் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் அவர்களின் ஃபத்வா

சவூதி அரபியாவின் தலைமை முஃப்தியும் அஷ்-ஷய்க் ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் அல்-ஃபவ்ஸான் (அல்லாஹ் அவரைப் பாதுகாக்கட்டும்) அவர்கள், வழிகெட்ட இயக்கங்கள் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் மீது சுமத்தும் “ஜாமி”, “மத்கலீ” போன்ற பட்டப்பெயர்களை மிகத் தெளிவாகக் கண்டித்துள்ளார்கள். அறிஞர்கள் மீது நம்பிக்கை இழக்கச் செய்வது ஒரு பெரும் சூழ்ச்சி என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதோ அவர்களின் ஃபத்வா:

கேள்வி: கண்ணியத்திற்குரிய எமது ஷய்க் அவர்களே, சமீப காலங்களில் கல்வி பயிலும் சில மாணவர்களிடையே பரவி வரும் ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் எச்சரிக்கை செய்யுமாறு வேண்டுகிறோம்.

அதாவது, சில கண்ணியத்திற்குரிய அறிஞர்களையும், அவர்களின் உரைகளைக் கேட்பவர்களையும் “ஜாமிக்கள்” என்றும், “மத்கலிகள்” என்றும் பட்டப்பெயர் சூட்டி இழிவுபடுத்துகிறார்கள். இதன் மூலம் அவர்கள் அறிஞர் முஹம்மத் அமான் அல்-ஜாமீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களையும், எமது கண்ணியத்திற்குரிய ஷய்க் ரபீஃ பின் ஹாதி அல்-மத்கலீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களையும் குறிவைக்கிறார்கள். எமது நபி முஹம்மது ﷺ அவர்கள் மீது அல்லாஹ்வின் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாகட்டும்.

அஷ்-ஷய்க் அவர்களின் பதில்: “இது நான் சற்று முன்புதான் கூறி முடித்த அதே பதிலுக்குள் அடங்குகிறது. இத்தகைய விஷயங்களையும், இந்தப் பூசல்களையும் விட்டுவிடுங்கள். ஒருவருக்கொருவர் பட்டப்பெயர் சூட்டி இழிவுபடுத்திக் கொள்ளாதீர்கள்.

அல்லாஹ் (ஜல்ல வஅலா) உங்களுக்குக் கூறுகிறான்:

وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ ۖ

“பட்டப்பெயர் சூட்டி ஒருவரை ஒருவர் இழிவுபடுத்தாதீர்கள்.”

(அல்குர்ஆன் – ஸூரத்துல் ஹுஜுராத் 49:11)

நீங்கள் அனைவரும் சகோதரர்கள்; அனைவரும் ஒரே மார்க்கத்தைச் சார்ந்தவர்கள்; அல்ஹம்துலில்லாஹ், நீங்கள் அனைவரும் சக தோழர்கள். இத்தகைய விஷயங்களை விட்டுவிடுங்கள். அறிஞர்கள் மதிக்கப்பட வேண்டும்; யார் அறிஞர்களை மதிக்கவில்லையோ, அவர் அவர்களின் கல்வியிலிருந்தும், அவர்களிடமிருந்து பயன் பெறுவதிலிருந்தும் தடுக்கப்பட்டு விடுவார்.

எனவே, உங்களுக்கு இடையிலான இந்தப் பட்டப்பெயர் சூட்டும் பழக்கத்தையும், சிறப்புகளைப் பெற்ற மற்றும் அல்லாஹ் வழங்கிய அந்தஸ்தைப் பெற்ற அறிஞர்களைக் குறை கூறுவதையும் விட்டுவிடுங்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:

یَرْفَعِ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ؕ

உங்களில் ஈமான் கொண்டவர்களை அல்லாஹ் உயர்த்துகிறான், மற்றும் கல்வி வழங்கப்பட்டவர்களுக்கு (அறிஞர்களுக்கு) அல்லாஹ் அந்தஸ்துகளை உயர்த்துகிறான்.
(அல்குர்ஆன் – ஸூரத்துல் முஜாதிலா 58:11)

அறிஞர்களுக்கு என்று ஒரு தனி இடமும், மதிப்பும், மரியாதையும் உண்டு. அறிஞர்கள் மீது நம்பிக்கை வைக்கப்படாவிட்டால், மக்கள் யாரிடம் செல்வார்கள்? அறிஞர்கள் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டால், மக்கள் யாரிடம் திரும்புவார்கள்? இது (சதி செய்பவர்களால்) மக்களிடையே விதைக்கப்படும் ஒரு சூழ்ச்சி என்பதில் சந்தேகமில்லை. இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்; இதனை விட்டுத் தவிர்ந்து கொள்ள வேண்டும்; மேலும் இதனைத் தடுக்கவும் வேண்டும். ஆம் 6.” ஷய்க் அவர்களின் பேச்சு முடிவுற்றது.

6. ஷய்க் அவர்களின் அசல் பேச்சு:

↩

முடிவுரை

எனவே அன்பார்ந்த அல்லாஹ்வின் அடியார்களே! வழிகெட்ட இயக்கங்கள், அறிஞர்களை மக்களிடமிருந்து பிரிக்க ‘ஜாமி’, ‘மத்கலி’ போன்ற பட்டப்பெயர்களை ஆயுதமாகப் பயன்படுத்துவதை அஷ்ஷய்க் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் (ஹஃபிதஹுல்லாஹ்) விளக்கியது போல, இது அறிஞர்கள் மீதான நம்பிக்கையைச் சிதைக்கும் ஒரு பெரும் சூழ்ச்சியாகும்.

அறிஞர்கள் இல்லாமல் ஆகும்போது ஏற்படும் விபரீதம் குறித்து நபி ﷺ அவர்கள் எச்சரித்துள்ளார்கள்:

حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا، اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالاً فَسُئِلُوا، فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ، فَضَلُّوا وَأَضَلُّوا ‏

அறிஞர்கள் எவரும் மிஞ்சாத நிலை ஏற்படும்போது, மக்கள் அறிவற்றவர்களைத் தங்களுக்குத் தலைவர்களாக ஆக்கிக் கொள்வார்கள் . அவர்களிடம் மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) கேட்கப்படும்போது, அவர்கள் அறிவின்றித் தீர்ப்பு வழங்குவார்கள். அதன் மூலம் அவர்களும் வழிகெட்டு, மற்றவர்களையும் வழிகெடுப்பார்கள்.
(ஸஹீஹ் அல்-புகாரி: 100, ஸஹீஹ் முஸ்லிம்: 2673)

அதன் நோக்கம் அறிஞர்கள் மீதான நம்பகத்தன்மையை அழிப்பது. அவ்வாறு அறிஞர்கள் புறக்கணிக்கப்பட்டால், சமுதாயம் வழிகாட்டல் இன்றி இந்த ஹதீஸில் சொல்லப்பட்டது போல அறிவற்றவர்களிடம் சிக்கி சீரழியும்.

எனவே, மார்க்கத்தை தெளிவாக விளக்கின அஷ்ஷய்க் முஹம்மத் அமான் அல்-ஜாமி (ரஹிமஹுல்லாஹ்) மற்றும் அஷ்ஷய்க் ரபீ இப்னு ஹாதீ அல்-மத்கலீ (ரஹிமஹுல்லாஹ்) போன்றோரை வைத்து பேசப்படும் இத்தகைய சொற்களை முற்றிலும் புறக்கணிப்போம். சத்தியத்தில் நிலைத்திருக்க மூத்த அறிஞர்களைப் பற்றிப் பிடிப்பதே நமக்குப் பாதுகாப்பான வழியாகும்.

இன்ஷா அல்லாஹ், இது போன்ற அனைத்து அவதூறுகள் மற்றும் விமர்சனங்களுக்கும் வருங்காலங்களில் ஒவ்வொன்றாகத் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கங்கள் அளிக்கப்படும். சத்தியத்தை நிலைநாட்ட அல்லாஹ் ஒருவனே நமக்கு உதவப் போதுமானவன்.

وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين


If this article benefited you, please share it.