
On this page3
அநீதியான அல்லது குறைபாடுள்ள ஆட்சியாளர்கள் இருக்கும்போதும், அவர்களுக்குக் கீழ்ப்படிதல் மற்றும் பொறுமையின் முக்கியத்துவத்தை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதைத்தான் திருக்குர்ஆன் வசனங்களும், பல நபிமொழித் தொகுப்புகளும் (ஹதீஸ்களும்) நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பகிரங்க விமர்சனம், கிளர்ச்சி மற்றும் வெறுப்பைத் தூண்டுதல் ஆகியவற்றை இஸ்லாம் எதிர்க்கிறது.
அதற்குப் பதிலாக, அவர்களின் வழிகாட்டுதலுக்காகப் பிரார்த்தனை செய்வதையும், அவர்களின் முன்னேற்றத்திற்காகத் தனிப்பட்ட முறையில் அறிவுரை கூறுவதையும் இஸ்லாம் ஆதரிக்கிறது. இதுவே சத்திய அஹ்லுஸ் ஸுன்னாவின் வழிமுறை. மேலும், இந்த அணுகுமுறையே முஸ்லிம் சமூகத்தின் நல்வாழ்வுக்கும் ஒற்றுமைக்கும் மிக முக்கியம் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சியை ஊக்குவிக்கும் காரிஜி (கவாரிஜ்) கொள்கைகளுக்கு எதிராக மார்க்கம் எச்சரிக்கை விடுக்கிறது.
கவாரிஜ் என்பது இஸ்லாமிய தொடக்கக் காலத்தில் தோன்றிய ஒரு வழிகேட்டுப் பிரிவினர். அவர்களின் வழிகேட்டின் அடிப்படை அம்சம் முஸ்லிம்களை அநியாயமாக வரம்புமீறி தக்ஃபீர் செய்வதாகும் (காஃபீர்களாக்குவதாகும்). அவர்கள் பாவங்களினால் முஸ்லிம்களை காஃபிராக்கி, பாவமல்லாதவற்றையும் பாவமாகக் கருதினர். இதன் அடிப்படையில் முஸ்லிம்களின் இரத்தங்களையும் செல்வங்களையும் ஹலாலாக ஆக்கினர், அதிலும் முக்கியமாக முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக வாள் எடுத்து கிளர்ச்சி செய்ய வேண்டும் என்று நம்பினர். இந்தக் கிளர்ச்சியானது, நல்வழி பெற்ற கலீஃபாக்களுக்கு எதிராக ஸஹாபாக்களின் காலங்களில் நடந்திருந்தாலும் அல்லது அவர்களுக்குப் பிறகு ஒவ்வொரு காலத்திலும் உள்ள ஆட்சியாளர்களுக்கும் எதிராக நடந்திருந்தாலும் இவர்களுக்கு இப்பெயர் பொருந்தும்.
🔍 பார்க்க
அல்-ஃபர்கு பய்னல் ஃபிரக் (பக்கம்:56), அல்-ஃபஸ்லு ஃபில் மிலல் வல்-அஹ்வா வந்-நிஹல் (2/90), மகாலாதுல் ஃபிரக் (பக்கம்:85)
இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கை முறையாகும். இதை அல்லாஹ் தனது தூதரின் (ﷺ) மூலம் வழிகாட்டியுள்ளான். நபித்தோழர்கள் (ஸஹாபாக்கள்), தாபியீன்கள், தபா-தாபியீன்கள் மற்றும் அறிஞர்கள் இந்த வழிகாட்டுதலைச் சரியாகப் பின்பற்றி வாழ்ந்தனர். சமுதாயத்திற்கு வழிகாட்டுவதிலும், ஆட்சி செய்வதிலும் முஸ்லிம் ஆட்சியாளர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இந்தியா போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் உட்பட, அனைத்து முஸ்லிம்களும் இஸ்லாமியக் கோட்பாடுகளின்படி ஆட்சியாளர்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என்று மார்க்கம் வலியுறுத்துகிறது.
கீழ்ப்படிதல் அடிப்படைக் கொள்கை:
ஆட்சியாளர்களுக்குக் கீழ்ப்படிவது இஸ்லாத்தின் அடிப்படைப் கொள்கைகளில் ஒன்றாகும். இது, அல்லாஹ், அவனது தூதர், மற்றும் ‘உங்களில் அதிகாரம் உள்ளவர்களுக்குக்’ கீழ்ப்படிய வேண்டும் என்ற அல்லாஹ்வின் கட்டளையில் வேரூன்றியுள்ளது.
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ وَأُو۟لِى ٱلْأَمْرِ مِنكُمْ ۖ فَإِن تَنَـٰزَعْتُمْ فِى شَىْءٍۢ فَرُدُّوهُ إِلَى ٱللَّهِ وَٱلرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ ۚ ذَٰلِكَ خَيْرٌۭ وَأَحْسَنُ تَأْوِيلًا
“நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் கீழ்படியுங்கள்; உங்கள் ஆட்சியாளர்களுக்கும் கீழ்படியுங்கள். நீங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால், அதை அல்லாஹ்விடமும், (அவனுடைய) தூதரிடமும் திருப்பி விடுங்கள் – நீங்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் உண்மையிலேயே நம்புபவர்களாக இருந்தால். இதுவே சிறந்ததும், மிக அழகான முடிவும் ஆகும்.”
சூரா அன்னிஸா (4:59)
நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் கூறினார்கள்:
من أطاعني فقد أطاع اللّه ، ومن عصاني فقد عصى اللّه ، ومن أطاع أميري فقد أطاعَنِي ، ومن عصى أميري فقد عصاني
“யார் எனக்குக் கீழ்ப்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிகிறார். யார் எனக்கு மாறு செய்கிறாரோ, அவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்கிறார். யார் என் தலைவருக்குக் கீழ்ப்படிகிறாரோ, அவர் எனக்குக் கீழ்ப்படிகிறார். யார் என் தலைவருக்கு மாறு செய்கிறாரோ, அவர் எனக்கு மாறு செய்கிறார்.”
(புகாரி 2957, முஸ்லிம் 1835)
ஆட்சியாளர்களுக்குக் கீழ்ப்படியும் விஷயத்தில், அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்திற்கு முரணான ஒரு பாவத்தை கட்டளையிடும்போது அப்போது அவர்களுக்கு கட்டுப்படுவது கூடாது. அத்தகைய சூழ்நிலைகளில், ஒரு முஸ்லிம் அக்குறிப்பிட்ட செயலை செய்வதிலிருந்து விலகிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார். அதற்கு கீழ்படியக் கூடாது. ஏனெனில், “படைத்தவனுக்கு மாறுசெய்யும் விஷயத்தில் எந்தவொரு படைப்பினத்திற்கும் கீழ்ப்படிதல் இல்லை”. இருப்பினும், ஒரு பாவமான கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுப்பது ஆட்சியாளர்களுக்கு கலகம் செய்யவோ அல்லது அவர்களை பொதுவில் விமர்சிக்கவோ ஒரு முஸ்லிமுக்கு உரிமையை வழங்காது.
நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் கூறினார்கள்:
يَكُونُ بَعْدِي أَئِمَّةٌ لَا يَهْتَدُونَ بِهُدَايَ ، وَلَا يَسْتَنُّونَ بِسُنَّتِي ، وَسَيَقُومُ فِيهِمْ رِجَالٌ قُلُوبُهُمْ قُلُوبُ الشَّيَاطِينِ فِي جُثْمَانِ إِنْسٍ.
“எனக்குப்பின் சில இமாம்கள் வருவார்கள். அவர்கள் நான் கொண்டுவந்த நேர்வழியின்பால் நடக்க மாட்டார்கள், எனது வழிமுறையையும் (ஸுன்னாவை) பின்பற்ற மாட்டார்கள். அந்த ஆட்சியாளர்களுள் சிலர் தோன்றுவார்கள்; அவர்களின் உள்ளங்கள் ஷைத்தான்களின் உள்ளங்களாகும். (ஆனால்) மனித உடம்பில் இருப்பார்கள்.”
قَالَ: قُلْتُ: كَيْفَ أَصْنَعُ يَا رَسُولَ اللهِ إِنْ أَدْرَكْتُ ذَلِكَ؟
நான் கேட்டேன்: “அந்த நிலையை (அப்படிப்பட்ட ஆட்சியாளர்கள் இருக்கும் காலத்தை) நான் அடைந்தால் என்ன செய்ய வேண்டும்?”
قَالَ: تَسْمَعُ وَتُطِيعُ لِلْأَمِيرِ ، وَإِنْ ضَرَبَ ظَهْرَكَ وَأَخَذَ مَالَكَ ، فَاسْمَعْ وَأَطِعْ.
அதற்கு நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் அந்தத் தலைவருக்குச் செவிமடுத்துக் கீழ்ப்படியுங்கள். அவர்கள் உமது முதுகில் குத்தினாலும், உமது செல்வத்தைப் பறித்தாலும் (அவர்களுக்கு) செவிமடுத்துக் கீழ்ப்படியுங்கள்.”
(முஸ்லிம் 1847)
நமது மார்க்கம், மக்களின் மார்க்க மற்றும் உலக விவகாரங்களுக்கான நலன்களை ஒழுங்குபடுத்தியுள்ளது. மேலும், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் அனைத்தையும் அக்கரையுடன் வலியுறுத்துகிறது. அதே நேரத்தில், பாதுகாப்பைக் குலைத்து, பிளவுகளை உருவாக்கும் அனைத்தையும் எச்சரித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் அமைதி இருந்தால் மட்டுமே மார்க்கம் நிலைபெறும், இஸ்லாம் பரவும். இது, ஆட்சியாளர்களுக்கும், இமாம்களுக்கும் கீழ்ப்படிவதன் மூலமே சாத்தியமாகும்.
இமாம் அஹ்மத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:
“நன்மை செய்பவராக இருந்தாலும், பாவம் செய்பவராக இருந்தாலும், இமாம்களுக்கும், முஃமின்களின் அமீருக்கும் செவிமடுத்துக் கீழ்ப்படிவது அவசியம். மேலும், கலீஃபாவாகப் பொறுப்பேற்று, மக்கள் அவரை ஏற்றுக்கொண்டு, அவரை திருப்தியடைந்தால் அவருக்குக் கீழ்ப்படிவது அவசியம், அது அவர் வாளின் மூலம் கலீஃபாவாக ஆனாலும், சரி, முஃமின்களின் அமீர் என்று அழைக்கப்பட்டாலும் சரி அவருக்குக் கீழ்ப்படிவது அவசியம்.”
(ஷர்ஹ் உசூல் இ’திகாத் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத், லாலகாயி, 1/180)
பொது விமர்சனமும் கலகமும் தடைசெய்யப்பட்டுள்ளன:
முஸ்லிம் ஆட்சியாளர்களை பகிரங்கமாக விமர்சிப்பதையும், திட்டுவதையும், அவமதிப்பதையும் அல்லது அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும்படி மற்றவர்களை தூண்டுவதையும் மார்க்கம் கடுமையாக கண்டிக்கிறது. நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் அத்தகைய செயல்களைத் தடைசெய்துள்ளார்கள். பொது விமர்சனம் சுன்னாவுக்கு (நபிவழிக்கு) எதிரானதாகும். மேலும், இது வரலாற்று ரீதியாக அளவற்ற துன்பம், இரத்தம் சிந்துதல், முஸ்லிம்களின் உயிர்களை இழப்பது, மற்றும் முஸ்லிம் நிலங்களை அழிப்பது போன்றவற்றுக்கு வழிவகுத்துள்ளது. இது உஸ்மான் மற்றும் அலி (ரதியல்லாஹு அன்ஹும்) போன்ற ஸஹாபாக்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த கவாரிஜ்களின் கொள்கைகளுடன் தொடர்புடையது.
நீதியற்ற ஆட்சியாளர்களுடன் பொறுமை:
ஆட்சியாளர்கள் கொடுங்கோலர்களாக, நீதியற்றவர்களாக, மக்களின் செல்வத்தை அநியாயமாக பிடுங்குபவர்களாக இருப்பினும், முஸ்லிம்கள் பொறுமையாக இருக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு செவிசாய்த்து கீழ்ப்படியுமாறு கட்டளையிடப்பட்டுள்ளார்கள். நபிகள் நாயகம் ﷺ அவர்கள், ஒரு ஆட்சியாளர் முதுகில் அடித்தாலோ அல்லது செல்வத்தை எடுத்தாலோ கூட, அவர்கள் வெளிப்படையான இறைநிராகரிப்பை (குஃப்ர்) செய்யாத வரை, முஸ்லிம்கள் அவர்களுக்குக் கீழ்ப்படியுமாறு அறிவுறுத்தினார்கள்.
சலமா பின் யசீத் அல்-ஜூஃபி ரதியல்லாஹு அன்ஹு, நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் கேட்டார்:
سأل سلمة بن يزيد الجعفي رسول اللّه: “أرأيت إن قامت علينا أمراء يسالونا حقهم ويمنعونا حقنا فما تأمرنا؟” فقال رسول اللّه ﷺ: “اسْمَعُوا وَأَطِيعُوا، فَإِنَّمَا عَلَيْهِمْ مَا حُمِّلُوا ، وَعَلَيْكُمْ مَا حُمِّلْتُمْ.”
“அல்லாஹ்வின் தூதரே, எம்மீது சில ஆட்சியாளர்கள் ஆட்சி புரிந்து, எங்களின் உரிமைகளை மறுத்து, அவர்களின் உரிமைகளை மட்டும் கேட்பார்களாயின், அப்போது எங்களுக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்?” அதற்கு நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் செவிமடுத்துக் கீழ்ப்படியுங்கள். ஏனெனில், அவர்களுக்குரிய பொறுப்பு அவர்கள் மீதுள்ளது, உங்களுக்குரிய பொறுப்பு உங்கள் மீதுள்ளது.”
(முஸ்லிம் 1846)
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:
مَن أرادَ أن يَنصَحَ لِذي سُلطانِ فلا يُبدِهِ عَلانية ولَكِن يأخِذُ بيَدِه فيخلوا بهِ فإن قبلَ منهُ فذاكَ وإلَّا كانَ قَد أدَّى الَّذي عليهِ صححه الشيخ الألباني في ظلال الجنة
“யார் ஒரு ஆட்சியாளருக்கு நல்லுபதேசம் செய்ய விரும்புகிறாரோ, அவர் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டாம். மாறாக, அவரது கையைப் பிடித்து தனியாக அழைத்துச் சென்று (உபதேசம்) செய்ய வேண்டும். அவர் அதை ஏற்றுக் கொண்டால் அது நல்லது. இல்லையெனில், (உபதேசம் செய்த) அவர் தன் கடமையை நிறைவேற்றி விட்டார்.”
இதை அபூ உபைத் தனது “அல்-அம்வால்” (செல்வங்கள்) என்ற நூலில் (113), அத்தபரானி தனது “முஸ்னது அஷ்-ஷாமியீன்” (ஷாம் நாட்டவர்களின் ஹதீஸ் தொகுப்பு) என்ற நூலில் (977), மற்றும் அபூ நுஐம் தனது “மஃரிபது அஸ்-சஹாபா” (நபித்தோழர்களை அறிதல்) என்ற நூலில் (5425) ஒரு நீண்ட ஹதீஸ் தொடராக பதிவு செய்துள்ளனர். (அல்-அல்பானி இதனை ஸஹீஹ் எனக் தரப்படுத்தியுள்ளார்.)
அவ்ஃப் இப்னு மாலிக் ரதியல்லாஹு அன்ஹு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்:
«خِيَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُحِبُّونَهُمْ وَيُحِبُّونَكُمْ، وَيُصَلُّونَ عَلَيْكُمْ وَتُصَلُّونَ عَلَيْهِمْ- أَيْ: يَدْعُونَ لَكُمْ وَتَدْعُونَ لَهُمْ- وَشِرَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُبْغِضُونَهُمْ وَيُبْغِضُونَكُمْ، وَتَلْعَنُونَهُمْ وَيَلْعَنُونَكُمْ». قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَفَلَا نُنَابِذُهُمْ بِالسَّيْفِ؟ فَقَالَ: «لَا، مَا أَقَامُوا فِيكُمُ الصَّلَاةَ، وَإِذَا رَأَيْتُمْ مِنْ وُلَاتِكُمْ شَيْئًا تَكْرَهُونَهُ فَاكْرَهُوا عَمَلَهُ وَلَا تَنْزِعُوا يَدًا مِنْ طَاعَةٍ».
“உங்கள் ஆட்சியாளர்களில் சிறந்தவர்கள் (எப்படி இருப்பார்களெனில்), நீங்கள் அவர்களை நேசிப்பீர்கள், அவர்கள் உங்களை நேசிப்பார்கள். அவர்கள் உங்களுக்காகவும், நீங்கள் அவர்களுக்காகவும் துஆ செய்து கொள்வீர்கள். உங்கள் ஆட்சியாளர்களில் தீயவர்கள் (எப்படி இருப்பார்களெனில்), நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள், அவர்கள் உங்களை வெறுப்பார்கள். நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள், அவர்களும் உங்களைச் சபிப்பார்கள்.” ‘அல்லாஹ்வின் தூதரே! அப்போது வாளைக் கொண்டு அவர்களை தூக்கி எரியலாமா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்: “இல்லை”, அவர்கள் உங்களுக்கு மத்தியில் தொழுகையை நிலைநிறுத்தும் வரை (இஸ்லாத்தில் அவர்கள் இருக்கும்வரை செய்வது கூடாது). மேலும், உங்கள் ஆட்சியாளர்களிடமிருந்து நீங்கள் வெறுக்கக்கூடிய ஒரு விஷயத்தைக் கண்டால், அவர்களின் செயலை வெறுத்துக் கொள்ளுங்கள். ஆனால், கீழ்ப்படிவதிலிருந்து உங்கள் கையை எடுத்துவிட வேண்டாம்.”
(முஸ்லிம் 1855)
இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹுமா) அறிவிக்கிறார்கள்: நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:
مَنْ رَأَى مِنْ أَمِيرِهِ شَيْئًا فَكَرِهَهُ فَلْيَصْبِرْ؛ فَإِنَّهُ لَيْسَ أَحَدٌ يُفَارِقُ الجَمَاعَةَ شِبْرًا فَيَمُوتُ، إِلَّا مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً»
“யார் தன் தலைவரிடம் இருந்து ஒரு விஷயத்தைக் கண்டு மற்றும் அதை வெறுக்கிறாரோ, அவர் (ஸப்ராக) பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், யாராவது ஒரு ஜாண் அளவு ஜமாஅத்தை விட்டும் பிரிந்து மரணித்தால், அவர் அறியாமையின் மரணத்தில் மரணிக்கிறார்.”
(புகாரி, முஸ்லிம்)
அதிய் இப்னு ஹாத்திம் ரதியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ لَا نَسْأَلُكَ عَنْ طَاعَةِ مَنِ اتَّقَى وَلَكِنْ مَنْ فَعَلَ وَفَعَلَ فَذَكَرَ الشَّرَّ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّقُوا اللَّهَ وَاسْمَعُوا وَأَطِيعُوا
நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! இறை அச்சத்துடன் உள்ள ஆட்சியாளருக்கு கட்டுப்படுதல் பற்றி நாங்கள் உங்களிடம் கேட்கவில்லை. மாறாக, இந்தந்த (தீய) செயல்களைச் செய்யும் (ஆட்சியாளர்களுக்கு கட்டுப்படுவது) பற்றி கேட்கிறோம்” என்று கூறினோம். அப்போது, (நபி ﷺ) அவர்களிடம் தீய செயல்களை குறிப்பிட்டனர், அதற்கு நபி (ﷺ) கூறினார்கள்: “அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (ஆட்சியாளர்களின் கட்டளையை) செவியேற்று, கட்டுப்படுங்கள்” என்று கூறினார்கள்.
இப்னு அபீ ஆஸிமின் ‘அஸ்-சுன்னா’ ஹதீஸ் நூல் (1069)‘. இமாம் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் இந்த “ஸிலாலுல் ஜன்னா” நூலில் இதனை ஸஹீஹ் என்று தரப்படுத்தியுள்ளார்.
உபாதா இப்னு அஸ்ஸாமித் ரதியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
عَنْ عُبَادَة بْن الصَّامِتِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْمَعْ وَأَطِعْ فِي عُسْرِكَ وَيُسْرِكَ وَمَكْرَهِكَ وَأَثَرَةٍ عَلَيْكَ وَإِنْ أَكَلُوا مَالَكَ وَضَرَبُوا ظَهْرَكَ إِلَّا أَنْ تَكُونَ مَعْصِيَةً لِلَّهِ بَوَاحًا
“(ஆட்சியாளர்களுக்கு) உங்கள் கஷ்டமான மற்றும் இலகுவான சூழ்நிலைகளிலும், உங்களுக்குப் பிடிக்காத சூழ்நிலையிலும், மேலும் உங்களுக்கு எதிராக பாரபட்சமாக நடந்துகொண்டாலும் செவிமடுத்துக் கீழ்ப்படியுங்கள். அவர்கள் உங்கள் செல்வத்தை அபகரித்து, உங்கள் முதுகில் குத்தினாலும் கூட, வெளிப்படையான பாவத்தைச் செய்யும்படி அவர்கள் உத்தரவிட்டால் மட்டுமே (கீழ்ப்படிய வேண்டாம்).”
(ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 4566)
இமாம் நவவி அவர்கள் கூறுகிறார்கள்:
“ஆட்சியாளருக்கு எதிராகப் புரட்சி செய்வதையும், அவருடன் சண்டையிடுவதையும் பொறுத்தவரை, அது முஸ்லிம்களின் ஒருமித்த கருத்தின்படி ஹராம் ஆகும். அவர் பாவியாகவும் அநியாயக்காரராகவும் இருந்தாலும் கூட. நாம் குறிப்பிட்ட இக்கருத்தை உறுதிப்படுத்தும் பல நபிமொழிகள் உள்ளன (அந்த ஆதாரங்களைதான் நாம் ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம்). மேலும், ஒரு ஆட்சியாளர் பாவம் செய்வதன் மூலம் பதவியை விட்டு நீக்கப்படமாட்டார் என்பதில் அஹ்லுஸ் சுன்னாவின் மக்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர்… மார்க்கம் அநியாயக்கார ஆட்சியாளரை பதவியிலிருந்து நீக்குவதையும், அவருக்கு எதிராகப் புரட்சி செய்வதையும் ஏன் ஹராம் ஆக்குகிறது என்றால், அதனால் ஏற்படும் குழப்பங்கள், இரத்த இழப்புகள் மற்றும் பிளவுகளின் ஆபத்தை தடுக்கவே ஆகும். ஆகவே, ஒரு ஆட்சியாளரை நீக்குவதால் ஏற்படும் தீங்கானது, அவர் பதவியில் நீடிப்பதால் ஏற்படும் தீங்கை விட அதிகமாகும்.”
ஆதாரம்: ஷர்ஹ் ஸஹீஹ் முஸ்லிம் 12/229.
கலகத்தின் விளைவுகள் (ஃபித்னா):
ஒரு ஆட்சியாளருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதால் ஏற்படும் தீமை, ஒரு கொடுங்கோல் ஆட்சியாளரின் தீமையை விட மிக மோசமானது என்று மார்க்கம் தெளிவுபடுத்துகிறது. கலகம் நன்மையை விட அதிக தீமையைக் கொண்டு வருகிறது, இது ஒற்றுமையின்மைக்கும் முஸ்லிம் சமூகத்தை பலவீனப்படுத்துவதற்கும் வழிவகுக்கிறது.- பாவத்தை நிராகரிப்பதற்கும் கலகத்திற்கும் உள்ள வேறுபாடு: ஒரு ஆட்சியாளர் பாவமான செயல்களை கட்டளையிட்டால் முஸ்லிம்கள் அதை வெறுக்க வேண்டும், அதை செய்யக் கூடாது. ஆனால் இதன் பொருள் அவர்கள் தங்கள் கீழ்ப்படிதலை நிறுத்திவிட வேண்டும் என்பதோ அல்லது கலகம் செய்ய வேண்டும் என்பதோ அல்ல. ஒரு ஆட்சியாளர் ஒரு பாவத்தை கட்டளையிட்டால், அப்பாவத்தைச் செய்யக்கூடாது, ஆனால் பொதுவான கீழ்ப்படிதலையும் ஒற்றுமையையும் பேண வேண்டும்.
- ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறுதல் (ஜிஹாத்): பொது விமர்சனம் தடைசெய்யப்பட்டிருந்தாலும், ஒரு கொடுங்கோல் ஆட்சியாளரிடம் நேரடியாக சத்தியத்தைச் சொல்லுதல் சிறந்த ஜிஹாத் என்று மார்க்கம் கூறுகிறது. அபூ ஸயீத் அல்-குத்ரி (ரதியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: “அநீதி இழைக்கக்கூடிய ஆட்சியாளரிடமோ (சுல்தான்) அல்லது அநீதி இழைக்கக்கூடிய தலைவரிடமோ (அமீர்) நீதியான ஒரு வார்த்தையைக் கூறுவதுதான் ஜிஹாதுகளில் மிகவும் சிறந்தது ஆகும். ஸுனன் அபூ தாவூத் (4344) ஸுனன் இப்னு மாஜா (4012) இமாம் அல்-அல்பானீ ரஹிமஹுல்லாஹ் இந்த ஹதீஸை “ஸஹீஹ்” என்று தரப்படுத்தியுள்ளார்கள். “அல்லாஹ்வின் அடியார்களே இது நேரடியாக ஆட்சியாளர் முன் இருக்கும்போது செய்யப்பட் வேண்டிய ஒரு விஷயம்; சமூக ஊடகங்கள் மூலம் அவர்களை ஏசிப் பேசி ஏளனம் செய்வதன் மூலம் அல்ல. அது உம்மத்திற்கு எந்த பயனையும் அளிக்காது என்பதை நாம் மேலே தெளிவாக பார்த்தோம். எனவே தவறைக் கண்டால், தனியாக அறிவுரை கூறி, அவரின் நல்வழிக்கு துஆ செய்ய வேண்டும். இதுதான் சத்திய அஹ்லுஸ் ஸுன்னாவின் வழிமுறையாகும்.
சுருக்கமாக, முஸ்லிம் ஆட்சியாளர்கள் விடயத்தில் பொறுமை, கீழ்ப்படிதல், மற்றும் அவர்களுக்காக துஆ செய்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. அவர்கள் நீதியற்றவர்களாக இருக்கும்போது கூட, பொது விமர்சனம், அவமானங்கள், மற்றும் ஆயுதம் தாங்கிய கலகம் ஆகியவற்றை கடுமையாக கண்டிக்கிறது. மேலும், பல நபி மொழிகளை இதைத்தான் மேற்கோள் காட்டுகின்றது, கவாரிஜ்களின் செயல்களின் கடுமையான எதிர்மறையான விளைவுகளை முஸ்லிம் சமூகத்திற்கு மார்க்கம் வலியுறுத்துகிறது.
என் அன்புச் சகோதரர்களே, பாவங்கள், வெளிப்படையான வரம்பு மீறல்கள் அல்லது மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் பொதுவெளியில் நடப்பதைக் காணும்போது நாம் அனைவரும் வேதனையடைகிறோம். இந்த வேதனைதான் ‘கீரத்’ மார்க்கத்தை பாதுகாக்க வேண்டும் என்ற பற்றாகும். இது, சுன்னாவின் (நபிவழியின்) வரம்புகளுக்குள் இருக்கும்போது பாராட்டுக்குரியதே.
அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரதியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ﷺ) கூறினார்கள்
مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ
“உங்களில் எவரேனும் ஒரு பாவத்தைக் கண்டால், அவர் அதைத் தமது கையால் மாற்றட்டும். அவரால் முடியாவிட்டால், தமது நாவால் (மாற்றட்டும்). அதற்கும் அவரால் முடியாவிட்டால், தமது உள்ளத்தால் (அதனை வெறுத்து) மாற்றட்டும். அது ஈமானின் மிகவும் பலவீனமான நிலையாகும்.”
(ஸஹீஹ் முஸ்லிம் 49)
தீமையை வெறுத்து நிராகரிப்பது ஈமானின் (நம்பிக்கையின்) ஒரு பகுதி என்று நமக்கு மார்க்கம் கற்பிக்கிறது. மேலும் மார்க்கம் அனுமதித்த வழிகளில் அதை மாற்ற முடியாவிட்டால், தமது உள்ளத்தில் அதை வெறுக்க வேண்டும். ஆயினும், இந்த வெறுப்பு சுன்னாவின் (நபிகளாரின் வழிமுறையின்) எல்லைகளுக்குள் இருக்க வேண்டும். அது ஒருவரை மற்றொரு பாவத்திற்குள் தள்ளிவிடக் கூடாது. உதாரணமாக, ஆட்சியாளர்களைப் பற்றி அவதூறாகப் பேசுவது போன்றவை நபிகளாரின் வழிமுறைக்கு முரண்படுவது ஆகிவிடும். ஏனெனில், தீமையை வெறுக்கச் சொன்ன அதே நபியவர்கள் (ﷺ) தான், நமது ஆட்சியாளர்களிடம் பொறுமையாக இருக்கவும், மதிக்கவும் நமக்குக் கட்டளையிட்டார்கள்.
எனவே, உண்மையான நடுநிலை என்பது, அல்லாஹ்வுக்காகத் தீமையை வெறுப்பதுடன், அநீதி, கலகம் அல்லது அவதூறில் இருந்து நாக்கைக் கட்டுப்படுத்துவதுமாகும். இதுவே நேர்மையான ஈமானின் அடையாளம் உணர்ச்சிகள் மார்க்க அறிவால் கட்டுப்படுத்தப்பட்டு, சுன்னாவால் வழிநடத்தப்படுவதே ஆகும்.
நபி ﷺ கூறினார்கள்:
” அவர் உங்களின் செல்வத்தை அபகரித்து, உங்கள் முதுகில் அடித்தாலும் (கடினமாக நடந்துகொண்டாலும்), நீங்கள் ஆட்சியாளருக்குச் செவிசாய்த்து கட்டுப்பட வேண்டும்.”
(ஸஹீஹ் முஸ்லிம் 1847)
மேலுள்ள ஹதீஸ்கள் யாவும் மிகவும் முக்கியமானதாகும், இந்த அடிப்படைகள் யாவும் அல்லாஹ்விடமிருந்து வந்த ஒரு அருட்கொடையாகும். ஏனெனில், இது முஸ்லிம்களின் இரத்தம் சிந்தப்படுவதிலிருந்தும், உம்மத்தின் (சமூகத்தின்) ஒற்றுமை சிதைவதிலிருந்தும் தடுக்கிறது.
ஆனால் என் சகோதரர்களே, இந்த விமர்சனங்களால் என்ன பயன் விளையப்போகிறது? இது பாவத்தைத் தடுத்து நிறுத்திவிடுமா? இது ஆட்சியாளர்களை இவ்விஷயத்தில் திருத்திவிடுமா? மாறாக, இது நபிவழிக்கு முரணானவர்களாய் நம்மை ஆக்குகிறது; மக்களின் இதயங்களில் ஆட்சியாளர்கள் மீது வெறுப்பைப் பரப்புகிறது; மேலும், நபி (ﷺ) அவர்கள் கடுமையாகத் தடுத்த கிளர்ச்சியின் விதையை விதைக்கிறது.
எனவே எனக்கும் உங்களுக்கும் என்னுடைய அறிவுரை இதுதான்:
அல்லாஹ்விற்காக பாவங்களை வெறுக்க வேண்டும்.
நீங்கள் ஹராமானதைக் காணும்போது ‘கீரத்‘ (மார்க்கப் பற்று) கொள்ளவும்.
ஆனால், அந்த ‘கீரத்’ (மார்க்கப் பற்று) உங்களை, நபி (ﷺ) அவர்கள் எச்சரித்த ஒரு பாதையில் தள்ளிவிட அனுமதிக்காதீர்கள். மாறாக, அந்தக் கோபத்தை இரவில் செய்யும் துஆவாக (பிரார்த்தனையாக) மாற்றுங்கள்: “யா அல்லாஹ்! எங்கள் ஆட்சியாளர்களுக்கு நீ வழிகாட்டுவாயாக! சுன்னாவை அவர்கள் நேசிக்கும்படி ஆக்குவாயாக! சத்தியத்திற்கு உதவும் தலைவர்களாக அவர்களை ஆக்குவாயாக!”
ஏனெனில், ஓர் அநியாயக்கார ஆட்சியாளன் மீது பொறுமையாக இருப்பது என்பது பலவீனம் அல்ல. அது அல்லாஹ்வின் தூதருக்கு (ﷺ) கட்டுப்படுவதாகும். மேலும், நாம் இப்போது காண்பதை விட மிக மோசமான ஒன்றிலிருந்து உம்மத்தை (சமூகத்தை) அது பாதுகாக்கிறது.
நினைவில் கொள்ளுங்கள்: சலஃபுகள் (முன்னோர்கள்) இவ்வாறு கூறினார்கள்: “எனக்கு ஒரே ஒரு துஆ ஏற்றுக்கொள்ளப்படும் என்ற வாய்ப்பு இருந்தால், அதை நான் ஆட்சியாளருக்காகவே செய்வேன்.” ஏனெனில், ஆட்சியாளர் நேர்வழி பெற்றால், மக்களும் நேர்வழி பெறுவார்கள்.
எனவே, நமது ‘கீரத்தை’ (மார்க்கப் பற்றை) பயனுள்ள வழியில் திருப்புவோம்: ஆட்சியாளர்களுக்காக துஆச் செய்தல், மக்களுக்கு (சரியான அறிவைப்) போதித்தல், மற்றும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதில் நம்மை நாமே பலப்படுத்திக் கொள்ளுதல்.
இதுவே நபி (ﷺ) அவர்களின் வழிமுறையும், ஸஹாபாக்களின் வழிமுறையும் ஆகும். இதைத் தவிர வேறு எந்த வழியும் ❌ ஃபித்னாக்களையும் (குழப்பங்களையும்) வருத்தத்தையுமே கொண்டு வரும்.
அஹ்லுஸ் ஸுன்னா வழிமுறையில் இருக்கிறோம் அல்லது சலஃபியத்திலே இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் உமர் ஷரீஃப் காசிமி போன்றோர்களுக்கு இந்த நபிமொழி ஆதாரங்கள் அனைத்திற்குப் பிறகும், முஸ்லிம் ஆட்சியாளர்களை ஏசிப் பேசி விமர்சனம் செய்து உணர்ச்சிகளைத் தூண்டி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை அசத்தியத்தின் பக்கம் வழிநடுத்துவதில் மபிடிவாதம் கொண்டிருந்தால், பிரச்சினை மேலும் ஆழமானது: அது இவர்கள் போன்றோர் இஸ்லாத்தை புரிந்துகொள்ளும் விதத்திலேயே மாறுபடுகிறது.
அவருடைய இஸ்லாம், தவ்ஹீதுல் இபாதா (வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்கு மட்டும் உரித்தாக்குதல்) மற்றும் அமல்கள், பாவங்கள், கப்ரில் கேள்வி, தீர்ப்பு நாள், சுவனம் நரகம் என்று மறுமையை நோக்கிய இஸ்லாமாக உள்ளதா ?
அல்லது, அது ‘தஃப்சீர் ஸியாஸீ’ (இஸ்லாத்தை அரசியல்மயமாக்கிப் புரிந்துகொள்ளுதல்) அதாவது இவ்வுலகமே இலக்கு, இவ்வுலகமே வாழ்க்கை, என்ற வழிகெட்ட கொள்கைக்கு தெரிந்தோ தெரியாமலோ துணைபோகிறார்களா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
இதுபோன்ற சிந்தனை உடையோருக்கு அல்லாஹ் நேர்வழியை வழங்குவானாக
கோமீனியின் ஷீஆக் கோட்பாடு முதல் ஹஸன் அல்-பன்னா, மவ்தூதி மற்றும் சையத் குதுப் ஆகியோரின் கொள்கைகள் வரை—இந்தக் கருத்துக்கள் இஸ்லாத்தை அணிந்துகொண்டன. ஆனால், அவை கிளர்ச்சி, பயங்கரவாதம் மற்றும் முஸ்லிம்களுக்கு அவமானத்தையே (இழிவையே) கொண்டு வந்தன.
எனவே, என் சகோதரர்களே, இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. இது கொள்கை மற்றும் மன்ஹஜ் (வழிமுறை) பற்றியது; நீங்கள் இந்த மார்க்கத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்பது பற்றியது.
நீங்கள் தவ்ஹீதை (ஏகத்துவத்தை) விட அரசியலை முதன்மைப்படுத்தினால், மற்றும் வஹீயை (இறை அறிவிப்பை) விட உணர்ச்சிகளை முதன்மைப்படுத்தினால், நீங்கள் தவிர்க்க முடியாமல் நபி (ﷺ) அவர்களின் சுன்னாவிற்கு எதிராக நிற்பீர்கள்.
அதன் காரணமாகவே, இன் ஷா அல்லாஹ், இந்தச் சிக்கல்களைத் தெளிவுபடுத்தும் ஒரு விரிவான தொடரை எழுத மகத்துவமிக்கவனான அல்லாஹ் எனக்கு உதவி செய்வானாக. ஆமீன். இதன் மூலம், அஹ்லுஸ் சுன்னாவின் ஒளியையும் நவீன அரசியல் இஸ்லாத்தின் இருளையும் மக்கள் வேறுபடுத்திப் பார்க்க முடியும்.
இது பற்றிய ஜுமுஆ குத்பா உரையையும் பார்க்கவும்.
இது பற்றி கேள்விகள் ஏதேனும் இருந்தால் கமண்ட்ஸில் (பின்னூட்டத்தில்) கேட்கவும் 👇
Comments (3)
சலபி குஆன் ஹதீஸ் ஆதாரம்
அல்ஹம்துலில்லாஹ் நல்ல விளக்கம்..உமர் ஷரீஃப் காசிமி முஸ்லிம் ஆட்சியாளர்களை பற்றி விமர்சித்த வீடியோக்கள் இருக்கிறதா? அவர் ஹதீஸை பற்றி நிறைய பேசியிருக்கிறார் அதனால்தான் அவர் ஏசி பேசியதாவது வீடியோ ஆதாரங்கள் உங்களிடம் இருக்கிறது என்று கேட்கிறேன்.. தெரிந்துகொள்ள
ஒருவருக்கு வழிகேடான கருத்துக்களைப் படிக்குமாறு நாம் ஒருபோதும் பரிந்துரைப்பதில்லை. இருப்பினும், உண்மை நிலையை நீங்களே நேரிடையாக அறிய விரும்புவதால் இந்தத் தகவலைப் பகிர்கிறோம்.
அவருடைய அதிகாரப்பூர்வ முகநூல் (Facebook) பக்கத்தில் கடந்த மூன்று ஆண்டு காலப் பதிவுகளைச் சாதாரணமாகக் கவனித்தாலே உண்மை நிலை உங்களுக்குப் புலப்படும். பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளக் கணக்குகளின் வாயிலாக அவர் ஆட்சியாளர்களைப் பற்றிப் பேசியுள்ள விமர்சனங்களும், அஹ்லுஸ் சுன்னா அறிஞர்கள் மீது அவர் சுமத்தியுள்ள அவதூறுகளும் அங்கே சான்றுகளாகப் பதிவாகியுள்ளன. சத்தியத்தைச் சொன்ன அறிஞர்களை அவர் எப்படியெல்லாம் வஞ்சித்திருக்கிறார் என்பதை ஒரு நடுநிலையாளரால் அங்கே எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
எங்கள் நோக்கம் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதல்ல. அல்லாஹ் அவருக்கு நேர்வழி காட்டி, அரசியல் கலந்த இந்த ‘ஸூரூரிய்யா’ கொள்கையின் பிடியிலிருந்து அவரையும், அவரைப் பின்பற்றும் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதே எமது உண்மையான ஆவல். அவர் மீண்டும் தூய்மையான தவ்ஹீத் மற்றும் சுன்னாவின் கொள்கையைத் தெளிவாக மக்களுக்குச் சொல்ல வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழியைத் தருவானாக!