8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Adhkar

Saying the Tahlil Ten Times After Maghrib and Fajrமஃக்ரிப் மற்றும் ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் பத்து முறை தஹ்லீல் (لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير) ஓதலாமா?

This article is in Tamil.

மஃரிப் மற்றும் ஃபஜ்ர் தொழுகைகளுக்குப் பிறகு பத்து முறை ஓதப்படும் தஹ்லீல் ( லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து, யுஹ்யீ வ யுமீத்து வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்) – தொடர்பான முதன்மைக் கூற்று முஆத் இப்னு ஜபல் (ரதியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்து வந்துருக்கிறது.


இதனை அன்-நஸாஈ தனது அமல் அல்-யவ்மி வ’ல்-லைலா (ப. 195) நூலிலும்,
இப்னு அஸ்-ஸுன்னீ தனது அமல் அல்-யவ்மி வ’ல்-லைலா (ப. 73) நூலிலும்,
மேலும் அல்-மா’மரிக் தனது அமல் அல்-யவ்ம் நூலிலும் பதிவு செய்துள்ளனர் (இதனை இப்னு ஹஜர் தனது நதாஇஜ் அல்-அஃப்கார் (2/307) நூலில் குறிப்பிட்டுள்ளார்).
அல்இமாம் அல்-புகாரீ கூட இதனை அத்-தாரீக் அல்-கபீர் (3/11) நூலில் குறிப்பிட்டதுடன், அல்-ஹாஃபித் அல்-மிஸ்ஸீ இதனை தஹ்தீப் அல்-கமால் (ப. 300/1/) நூலில் பதிவு செய்துள்ளார்.


இக்கூற்று பல வழிகளில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதன் பலவீனம் (தயீஃப்) மற்றும் முரண்பாடு (முத்தரிப்) காரணமாக இதை ஹதீஸை ஆதாரப்பூர்வமாக எடுக்க இயலாது. அஷ்-ஷய்க் அரஃபாத் அல்-முஹம்மதீ (ஹஃபிதஹுல்லாஹ்) உட்பட பல அறிஞர்களால் தயீஃப் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது, மேலும் அது கடும் முரண்பாடுடையதாக (முத்தரிப்) ஆக இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அல்லாஹ்வின் அடியார்களே ஷய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா -ரஹிமஹுல்லாஹ்– கூறுகிறார்கள்: ” ஸஹீஹ் ஹதீஸ்கள் அல்லது (அதைவிட தரத்தில் குறைந்த) ஹஸன் ஹதீஸ்கள் (இவை இரண்டும்) அல்லாமல் இருக்கும் பலவீனமான (தயீஃப்) ஹதீஸ்களை, ஷரீஅத்தின் (மார்க்க ) சட்டங்களுக்கு ஆதாரமாகக் எடுத்துக் கொள்வதற்கு அனுமதி இல்லை “. “மஜ்மூஉல் ஃபதாவா” (1/ 250)

மேலும் இது பற்றி அதாவது “லா இலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வ யுமீத்து வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்” என்ற திக்ரை ஃபஜ்ர் மற்றும் மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு பத்து தடவை ஓதுவது பற்றி அஷ்-ஷய்க் அரஃபாத் அல்-முஹம்மதீ அவர்களிடம் கேட்கப்பட்டபோது

ஷய்க் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்: இது ஸஹீஹான ஹதீஸல்ல, இந்த ஹதீஸ் பலவீனமானது, மேலும் இத்திராப் (குழப்பம்) நிறைந்தது. இது (எப்பொழுது ஓத வேண்டுமென்றால்) காலை நேரங்களிலும் (ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிப்பதற்குமுன் வரை), மாலை நேரங்களிலும் (அஸ்ர் தொழுகைக்குப் பிறகிலிருந்து சூரியன் மறைவதற்குமுன் வரை), ஓத வேண்டிய துதிச் சொற்கள் (அத்கார்) ஆகும். ஆனால், ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகும் மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகும் பத்து முறை ஓதுவது என்ற இந்த குறிப்பிட்ட ஹதீஸ் பலவீனமானது.

சில அறிஞர்கள் இந்த ஹதீஸை ஸஹீஹ் என்று கூறியிருக்கிறார்கள். ஆகவே மற்ற அறிஞர்கள் இதை சஹீஹாக அறிவித்ததை ஏற்றுக்கொண்டு, அதன்படி நீங்கள் அமல் செய்தால், அச்செயலை தடுக்கவேண்டியதில்லை (அது தவறு என்று கூறப்படாது).

ஆனால், ஆழமாக ஆய்வு செய்து, அறிவிப்பாளர் தொடர்களைப் பார்க்கும்போது, இந்த ஹதீஸ் குழப்பம் (இத்திராப்) நிறைந்தது. இதற்கு ஷஹர் பின் ஹவ்ஷப் என்ற அறிவிப்பாளரே இந்தக் குழப்பத்திற்குக் காரணம்.” ஷய்க் அவர்களின் பதில் முடிவுற்றது.

https://t.me/Arafatbinhassan/12849

ஏனெனில் இதன் முக்கிய அறிவிப்பாளரான ஷஹ்ர் இப்னு ஹவ்ஷப், தவறுகள் மற்றும் முரண்பாடுகளுக்காக அறியப்பட்டவர். இதனால்தான் அல்-இமாம் நசாஈ – ரஹிமஹுல்லாஹ் – “அமலு யவ்மி வல்லய்லா”/ “பகல் மற்றும் இரவில் செய்யப்படும் அமல்கள்” என்ற தங்கள் நூலில் இந்த ஹதீஸை பதிவுசெய்த பின்னர் இவ்வாறு கூறுகிறார்கள்: ஷஹர் பின் ஹவ்ஷப் ஒரு பலவீனமான (அறிவிப்பாளர்). (ஹதீஸ் இமாம்களில் ஒருவரான) இப்னு அவ்னிடம், ஷஹர் பின் ஹவ்ஷப் அறிவித்த ஹதீஸ் பற்றிக் கேட்கப்பட்டபோது, ‘நிச்சயமாக ஷஹ்ரை அறிஞர்கள் குறை கூறினா,’ என்று பதிலளித்தார். அல்-இமாம் ஷுஃபா அவரைப் பற்றி (அவரின் அறிவுப்புகள் சார்ந்த விஷயங்கள் பற்றி) மோசமான அபிப்பிராயம் கொண்டிருந்தார், மேலும் யஹ்யா அல்-கத்தான் அவரை (ஒரு அறிவிப்பாளராக) ஏற்காமல் விட்டுவிட்டார். பார்க்க: “அமலு யவ்மி வல்லய்லா (126)“.

இந்த அறிவிப்பை, பிற ஹதீஸ்களின் மூலம் வலுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டன. ஏனெனில், அவை ஒன்று பொதுவான காலை மற்றும் மாலை அத்கார்களைப் பற்றி மட்டுமே பேசுகின்றன, அல்லது மிகவும் பலவீனமான அறிவிப்பாளர் தொடர்களை அடிப்படையாகக் கொண்டவை.

எனவே பலவீனமான ஹதீஸ்கள் வணக்க வழிபாடுகளுக்கு அடிப்படையாக அமைய முடியாது என்ற நிறுவப்பட்ட கொள்கையின் அடிப்படையில், இந்த ஹதீஸ் ஆதாரமாக பயன்படுத்தத் தகுந்தது அல்ல. மாறாக, முஸ்லிம் ஒருவர் நபி (ﷺ) அவர்கள் தொடர்ந்து கற்றுத் தந்த, நன்கு அங்கீகரிக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளுக்குப் பிறகுள்ள ஸஹீஹான (ஆதாரப்பூர்வமான) அத்கார்களை கடைப்பிடிப்பதே சிறந்ததாகும். அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

இதனால்தான் நாம் ஏற்கனவே தொகுத்த “ஐவேளை கடமையான தொழுகை ஸலாம் கொடுத்ததற்குப் பிறகு சொல்ல வேண்டிய துதிச் சொற்கள் (அத்’கார்)” என்ற தொகுப்பில் இந்த திக்ரை சேர்க்கவில்லை.

ஐவேளை கடமையான தொழுகை ஸலாம் கொடுத்ததற்குப் பிறகு சொல்ல வேண்டிய துதிச் சொற்களான அத்’காருகளை கற்றுக்க்கொள்ள இதைப்பார்க்கவும்:

If this article benefited you, please share it.