
அஷ்-ஷய்க் அல்-அல்லாமா ரபீ இப்னு ஹாதி உமைர் அல்-மத்கலீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் வசிய்யத் (இறுதி உபதேசம்)
(ஹிஜ்ரி 1447, முஹர்ரம் மாதம் 15 ஆம் தேதி, வியாழக்கிழமை இரவன்று ஷய்க் அவர்கள் மரணமடைந்தார்.)
(அவருக்காக மஸ்ஜிதுன் நபவியில் வியாழன் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு தொழுகை நடத்தப்பட்டது.)
(அவர் பகீஃ கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார். அல்லாஹ் அவருக்கு கருணை காட்டுவானாக, மேலும் தனது விசாலமான சுவனத்தில் அவரை குடியமர்த்துவானாக.)
ஷய்க் அவர்களின் வசிய்யத்:
நிச்சயமாக, எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடமே உதவி தேடுகிறோம்; அவனிடமே பாவமன்னிப்பு கோருகிறோம். நம் ஆத்மாக்களின் தீங்குகளிலிருந்தும், நம் தீய செயல்களிலிருந்தும் அல்லாஹ்விடம் நாம் பாதுகாப்புத் தேடுகிறோம். அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவனை எவரும் வழிதவறச் செய்ய முடியாது. அல்லாஹ் யாரை வழிதவறச் செய்கிறானோ, அவனை எவரும் நேர்வழியில் செலுத்த முடியாது. மேலும், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும், அவனுக்கு யாதொரு இணை இல்லை என்றும் நான் சாட்சி பகர்கிறேன். மேலும், முஹம்மத் ﷺ அவர்கள் அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள் என்றும் நான் சாட்சி பகர்கிறேன்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும், நீங்கள் முஸ்லிம்களாக இருந்தாலன்றி மரணிக்காதீர்கள்.
[ஆல இம்ரான் 3:102]
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு அஞ்சி வாழுங்கள்; அவன் உங்களை ஒரே ஒரு ஆத்மாவிலிருந்து படைத்து; அவரிலிருந்து அவருடைய துணையைப் படைத்தான்; அவ்விருவரிலிருந்தும் அநேக ஆண்களையும் பெண்களையும் பரப்பினான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரால் நீங்கள் ஒருவரிடம் ஒருவர் (உங்களின் பரஸ்பர உரிமைகளைக்) கேட்கிறீர்களோ அந்த அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழுங்கள்; இரத்த உறவுகளையும் (முறித்து விடாமல்) பேணுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களை எந்நேரமும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
[அந்-நிஸா 4:1]
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள். மேலும், நேர்மையான கூற்றையே கூறுங்கள். அவன் உங்களுக்காக உங்கள் செயல்களை சீர்படுத்துவான். உங்களுடைய பாவங்களையும் மன்னிப்பான். மேலும், எவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிந்தாரோ, அவர் மகத்தான பெரும் வெற்றியை அடைந்துவிட்டார்.
[அல்-அஹ்ஸாப் 33:70-71]
அம்மா பஃது (பிறகு),
நிச்சயமாக, பேச்சுகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். மேலும், வழிகாட்டலில் சிறந்தது முஹம்மத் (ﷺ) அவர்களின் வழிகாட்டலாகும். காரியங்களில் மிகக் கெட்டவை (மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்படுபவையாகும். புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொன்றும் பித்அத்தாகும் (புதுமையாகும்). ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்.
பிறகு: இது (இந்த வஸிய்யத்), விரைவில் இந்த உலகைப் பிரிந்து மறுமையை எதிர்நோக்கியிருக்கும் ஒரு பலவீனமான அடியான் – அனைத்து முஸ்லிம்களுக்கும் செய்யும் உபதேசமாகும். அவர்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்ச வேண்டும். அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாகப் பற்றிப் பிடிக்க வேண்டும். பிரிந்துவிடக் கூடாது; தங்கள் மார்க்கத்தைப் பிரித்துவிடக் கூடாது.
ஏனெனில், அல்லாஹ்வை அஞ்சுவதிலும், அவனுடைய கயிற்றை – அதாவது குர்ஆன் மற்றும் சுன்னாவை – உறுதியாகப் பற்றிப் பிடிப்பதிலும்தான், இவ்வுலகிலும் மறுமையிலும் அவர்களின் மகிழ்ச்சியும், மதிப்பும் உயர்வும் அடங்கியுள்ளன. பிரிவினையிலும் கருத்து வேறுபாட்டிலும்தான் அவர்களின் இழிவும், சிறுமையும் பொதிந்துள்ளன.
அவர்களின் ஒற்றுமையும், அவர்களின் வரிசை ஒரே வரிசையாக அமைவதும், அல்லாஹ்வின் வேதத்தின் மீதும், அவனுடைய தூதர் (ﷺ) அவர்களின் சுன்னாவின் அடிப்படையின் மீதும் அமையாமல் ஒருபோதும் சாத்தியமாகாது. எனவே, அவர்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் இந்த மகத்தான காரணத்தை (ஒற்றுமையை) பற்றிக் கொள்ள வேண்டும். மேலும், இதற்கு முரணாகவும், இவ்வுலகிலும் மறுமையிலும் கஷ்டத்திற்கும் இழிவுக்கும் காரணமாக இருக்கும் பிரிவினையிலிருந்தும் கருத்து வேறுபாட்டிலிருந்தும் விலகி இருக்க வேண்டும்.
மேலும், அவர்களில் (முஸ்லிம்களில்) சலஃபிகளுக்கு நான் உபதேசம் செய்கிறேன். அவர்கள் குர்ஆன் மற்றும் சுன்னாவை உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்பதாலும், அதன்பால் அழைப்பு விடுப்பதாலும் தனித்துவம் பெற்றவர்கள். சலஃபிகள் முஸ்லிம்களின் நிலைகளை சீர்திருத்துவதில் தங்கள் முயற்சிகளை இருமடங்காக்க வேண்டும். கொள்கை, வணக்க வழிபாடு, அரசியல், பொருளாதாரம், சமூக கட்டமைப்பு மற்றும் இதுமட்டுமல்லாத அவர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனைத்து காரியங்களும் அல்லாஹ்வின் வேதத்தையும் அவனுடைய தூதர் (ﷺ) அவர்களின் சுன்னாவையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் இதை அனைத்து முஸ்லிம்களுக்கும் தெளிவாக விளக்க வேண்டும்.
சலஃபிகள் தங்கள் நல்ல நோக்கங்களையும் குறிக்கோள்களையும் அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) வெளிப்படுத்த வேண்டும். இந்த உம்மத்திற்கு நன்மைகளைத் தவிர வேறு எதையும் அவர்கள் விரும்புவதில்லை என்பதையும், குர்ஆன் மற்றும் சுன்னாவை உறுதியாகப் பற்றிக்கொள்ளாததன் விளைவாக இந்த உம்மத்திற்கு ஏற்பட்ட அனைத்து தீங்குகளையும், வெறுக்கத்தக்கவற்றையும் நீக்குவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் விரும்புவதில்லை என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும், பல்வேறு பிரிவுகளில் பயணிக்கும் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் அறிஞர்கள் அனைவரும் தங்கள் உம்மத்தின் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சுமாறு நான் உபதேசம் செய்கிறேன். இந்த உம்மத்தின் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சுங்கள். அல்லாஹ்வின் வேதத்தின் மீதும், அவனுடைய தூதர் (ﷺ) அவர்களின் சுன்னாவின் மீதும், ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் (முன் சென்ற சான்றோர்கள்) கொண்டிருந்த கொள்கை (அகீதா), வணக்க வழிபாடு (இபாதத்), அரசியல் (சியாஸத்), சமூக கட்டமைப்பு (இஜ்திமாஅ), மற்றும் ஒழுக்கம் (அக்லாக்) ஆகியவற்றின்பால் இந்த உம்மத்தை மீட்டெடுத்திட அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்து முயற்சி செய்ய வேண்டும்.
மேலும் அவர்கள் மனோ இச்சையை பின்பற்றுதலிருந்தும் (ஹவா), பிளவு மற்றும் வேறுபாடுகளுக்கான காரணங்களிலிருந்தும் முழுவதுமாக விலகி இருக்க வேண்டும். இவைகள்தான் இந்த உம்மத்திற்கு பேரழிவுகளை ஏற்படுத்தியது. இந்த உன்னத இலக்குகளை அடையவும், முஸ்லிம்களை பலவீனத்திலும் இழிவிலும் தள்ளிவிடும் அனைத்திலிருந்தும் அவர்களை விலக்கிக் கொள்ள இவர்களுக்கு நேரம் வந்துவிட்டது.
“இந்த உம்மத்தின் பிந்தைய பகுதி, அதன் ஆரம்பப் பகுதி எதனால் சீரடைந்ததோ அதனாலேயே அன்றி சீரடையாது.”
அனைவரும் இதை உணர்ந்து கொள்ள வேண்டும்: இந்த உம்மத், மற்ற எல்லா உம்மத்துகளைக் காட்டிலும் சிறந்ததாகத் திகழ்ந்ததற்குக் காரணம்,
“மனிதர்களுக்காக வெளிப்படுத்தப்பட்ட உம்மத்துகளில் மிகச் சிறந்த உம்மத்தாக இருப்பதினாலும். நன்மையை ஏவுகிறார்கள், தீமையைத் தடுக்கிறார்கள், மேலும் அல்லாஹ்வை (சரியாக) நம்பிக்கை கொள்கிறார்கள்” என்று இருப்பதாலேயே அன்றி வேறெதற்கும் இல்லை.”
மேலும், ஆரம்பகால முஸ்லிம்களான சஹாபாக்களும், அவர்களை அழகிய முறையில் பின்தொடர்ந்தவர்களும், நபி (ﷺ) அவர்களின் சாட்சியத்தின் மூலம் இந்தச் சிறப்பைப் பெற்றார்கள்:
மக்களில் சிறந்தவர்கள் எனது தலைமுறையினர். பிறகு அவர்களை அடுத்தவர்கள். பிறகு அவர்களை அடுத்தவர்கள். பிறகு அவர்களுக்குப் பின்னால் ஒரு கூட்டம் வரும். அவர்கள் சாட்சி கூறுவார்கள், ஆனால் (பிறருக்கு) சாட்சி கூறும்படி கேட்கப்பட மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள், ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனானவர்கள் அதிகமாக இருப்பார்கள்.
[ புகாரி 6429 மற்றும் முஸ்லிம் 2533]
மேலும், நபி (ﷺ) அவர்களின் கூற்று:
நல்லவர்கள் ஒருவர் பின் ஒருவராகச் சென்றுவிடுவார்கள். பிறகு எஞ்சியவர்கள் – அல்லது மீதமுள்ளவர்கள்– வாற்கோதுமை மற்றும் பேரீச்சம்பழத்தின் சக்கைகளைப் போல இருப்பார்கள். அல்லாஹ் அவர்களைப் பொருட்படுத்த மாட்டான்.
[புகாரி 6434]
ஆகவே, அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய வேதத்திற்காகவும், அவனுடைய தூதருக்காகவும், முஃமின்களுக்காகவும், பொதுவான முஸ்லிம்களுக்காகவும், அவர்களில் பிரத்யேகமானவர்களுக்காகவும் நன்மையை உபதேசிக்க கல்வி அறிவைச் சுமந்தவர்கள்மீது கடமையாக உள்ளது. இதன் மூலம், முஸ்லிம்கள் பயனற்ற சக்கைகள் போலிருக்கும் நிலையிலிருந்து காப்பாற்றப்பட வேண்டியவர்களை அல்லாஹ் காப்பாற்றுவான். ஏனெனில், அவர்களில் பலர் அல்லாஹ்வின் வேதத்தைப் பற்றிக்கொள்வதிலிருந்தும், அல்லாஹ்விடம் தீர்ப்பைத் தேடுவதிலிருந்தும், அவனுடைய தூதர் (ﷺ) அவர்களிடம் தீர்ப்பைத் தேடுவதிலிருந்தும் தூர விலகியிருப்பதினாலே தவிர வேறு காரணம் இல்லை.
ஆகவே, அவர்கள் இதை (இந்த உபதேசத்தை) தீவிரமாகவும் உண்மையாகவும் பிரகடனப்படுத்தினால், இந்த உம்மத்திற்கு நிறைய நன்மைகள் இதன் மூலம் ஏற்படும்.
பேரருள்மிகுந்தவனும் உயர்ந்தவனுமான அல்லாஹ்விடம் இந்த நன்மைகளை நிறைவேற்றித்தர நாம் கேட்போம்.
இந்த உம்மத்திற்கு நன்மை நாடும் அனைவரும் அறிந்திருக்கும் இழிவு, சிறுமை, பிரிவினை, பொறாமை, பகைமை, வெறுப்பு ஆகியவற்றுக்குக் காரணமாக அமையும் அனைத்து விஷயங்களிலிருந்தும், அத்துடன் அவற்றின் தீய விளைவுகளிலிருந்தும் முஸ்லிம்களை அல்லாஹ் தூரமாக்க அல்லாஹ்விடம் கேட்போம். (வஸிய்யத் நிறைவுற்றது)
முக்கிய குறிப்பு:
அஷ்-ஷய்க் ரபீஃ (அல்லாஹ் அவர்கள் மீது கருணை காட்டுவானாக) அவர்கள் இந்த வசிய்யத்தை துல் ஹஜ் மாதம் 25ஆம் நாள் ஹிஜ்ரி 1420 ஆம் ஆண்டு (மார்ச் 31, 2000) ஏறத்தாழ 25 வருடங்களுக்கு முன் அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான நோயின்போது இதை எழுதச்சொல்ல, அஷ்-ஷய்க் காலித் அல்-தஃபீரீ அவருடன் இருந்து, இதை (வசிய்யத்தை) எழுதி, ஷய்க்கின் மரணம் வரை அதை பாதுகாத்து வைத்திருந்தார். மேலும் இந்த வசிய்யத்தை எல்லா இடங்களிலும் – செய்தித்தாள்களிலும் மற்றும் பிறவற்றிலும் – வெளியிடுமாறு ஷேக் ரபீஃ உபதேசித்திருந்தார்கள்.
பின்னர், ஷய்க் ரபீஃ அவர்களின் வசிய்யத்தை நிறைவேற்றும் விதமாக அதை முஹர்ரம் மாதம் 15ஆம் நாள் 1447 ஆம் ஆண்டு (ஜூலை 9, 2025) அன்று அவர்களின் மரணத்திற்குப் பிறகு அஷ்-ஷய்க் காலித் வெளியிட்டார்.
கேள்விகளுக்கு: [email protected]
தொடர்ந்திருங்கள் நம்மோடு:
Comments
No comments yet.