8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Events

Statement of the Grand Mufti of Saudi Arabia to the Border Guards and Coalition Forcesசவூதி அரேபியாவின் பொது முஃப்தீ எல்லைக் காவல் வீரர்களுக்கும் கூட்டணிப் படைகளுக்கும் அறிக்கை

This article is in Tamil.
On this page4
சவூதி அரேபியாவின் பொது முஃப்தி அறிக்கை
அறிக்கை

சவூதி அரேபியாவின் பொது முஃப்தீ எல்லைக் காவல் வீரர்களுக்கும் கூட்டணிப் படைகளுக்கும் அறிக்கை

வெளியீடு: கல்வி ஆய்வுகள் மற்றும் ஃபத்வாவுக்கான பொதுத் தலைமையகம்

தமிழில் மொழிபெயர்ப்பு:: முஹம்மத் அஸ்லம் மதனி (حفظه الله)

முகவுரை

சவூதி அரேபியாவின் தலைமை முஃப்தீயும், மூத்த உலமாக்கள் சபையின் தலைவரும், கல்விசாற் ஆராய்ச்சிகள் மற்றும் ஃபத்வாவுக்கான பொதுத் தலைவருமான முனைவர் ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் பின் அப்தில்லாஹ் அல்-ஃபவ்ஸான் அவர்கள், (சவூதி அரேபியா) எல்லையோரப் பாதுகாப்புப் படையினருக்கும் கூட்டுப் படைகளுக்கும் ஓர் அறிக்கையை விடுத்துள்ளார்கள்; அதன் வாசகம் பின்வருமாறு:

அகிலங்களின் ரப்பாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இறுதி நல்முடிவு இறையச்சமுடையோருக்கே உரியது. அநியாயக்காரர்கள் மீதே தவிர (வேறு எவர் மீதும்) எவ்வித வரம்பு மீறலும் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை; அவன் தனித்தவன், அவனுக்கு எவ்வித இணையுமில்லை; முன்னோர், பின்னோர் அனைவரினதும் வணக்கத்திற்குரிய ரப்பு அவனே; வானங்களையும் பூமியையும் நிலைநிறுத்திப் பராமரிப்பவனும் அவனே என்று சாட்சி பகர்கிறேன். மேலும், நிச்சயமாக முஹம்மத் ﷺ அவர்கள் அவனது அடியாரும், அவனது தூதரும், அவனது உற்ற நேசரும், அவனுடைய இறைச்செய்தியின் (வஹீயின்) நம்பிக்கைக்குரியவரும் ஆவார்கள் என்றும் சாட்சி பகர்கிறேன். அல்லாஹ் அவர் மீதும், அவரது குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் மறுமை நாள் வரை அல்லாஹ் அதிகமதிகம் ஸலாத்தையும் ஸலாமையும் பொழிவானாக.

அம்மா பஃது (இதன் பின்னர்):

நிச்சயமாக கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ், இந்த நேரான மார்க்கத்தைக் (இஸ்லாத்தை) கொண்டு நமக்கு மாபெரும் அருள்புரிந்துள்ளான். அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா கூறுகிறான்:

وَجَـٰهِدُوا۟ فِى ٱللَّهِ حَقَّ جِهَادِهِۦ ۚ هُوَ ٱجْتَبَىٰكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِى ٱلدِّينِ مِنْ حَرَجٍ ۚ مِّلَّةَ أَبِيكُمْ إِبْرَٰهِيمَ ۚ هُوَ سَمَّىٰكُمُ ٱلْمُسْلِمِينَ مِن قَبْلُ وَفِى هَـٰذَا لِيَكُونَ ٱلرَّسُولُ شَهِيدًا عَلَيْكُمْ وَتَكُونُوا۟ شُهَدَآءَ عَلَى ٱلنَّاسِ ۚ فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَٱعْتَصِمُوا۟ بِٱللَّهِ هُوَ مَوْلَىٰكُمْ ۖ فَنِعْمَ ٱلْمَوْلَىٰ وَنِعْمَ ٱلنَّصِيرُ அல்-ஹஜ் 22 : 78
“(முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காகப் போராட வேண்டிய முறைப்படி முழுமையாகப் போராடுங்கள்; அவனே உங்களைத் தேர்ந்தெடுத்தான்; மேலும் இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. இது உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமாகும்; இதற்கு முன்னரும், இந்த (வேதத்)திலும் அவனே உங்களுக்கு ‘முஸ்லிம்கள்’ என்று பெயரிட்டான்; (இறைத்)தூதர் (முஹம்மத் ﷺ) உங்கள் மீது சாட்சியாளராக இருப்பதற்காகவும், நீங்கள் மனிதர்கள் மீது சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும் (அவ்வாறு செய்தான்). ஆகவே, தொழுகையை நிலைநிறுத்துங்கள், ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்; அவனே உங்கள் மவ்லா (ரப்பு); அவன் மிகச் சிறந்த பாதுகாவலனாகவும், மிகச் சிறந்த உதவியாளனாகவும் இருக்கிறான்.” (அல்-ஹஜ் 22 : 78)

மேலும் கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ், பாக்கியமும் நன்மையும் நிறைந்த இந்த சவூதி அரேபிய இராச்சியத்தில் நம்முடைய ஆட்சியாளர்களைச் சுற்றி ஒருமித்த கருத்தையும், அணி திரண்ட ஒற்றுமையையும் தந்து நமக்கு அருள்புரிந்துள்ளான் – அல்லாஹ் அவர்களுக்குத் துணை நிற்பானாக -.

சவூதி அரேபியாவின் மீது அல்லாஹ் புரிந்த மாபெரும் அருட்கொடைகளில் ஒன்று, அவன் அதனை கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வின் வேதத்தின் மீதும், அவனுடைய தூதர் ﷺ அவர்களின் சுன்னத்தின் (வழிமுறையின்) மீதும் நிலைநிறுத்தியதாகும்; மேலும் இரு புனிதத் தலங்களான தொன்மையான இல்லமான கஃபாவையும், அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் பள்ளிவாசலையும் சேவை செய்யும் பாக்கியத்தை வழங்கி இந்நாட்டை சிறப்பித்துள்ளான். இதனால் நேர்வழி நின்ற கிலாஃபத் காலத்திற்குப் பிறகு முன் எப்போதும் இல்லாத அளவிலான மகத்தான சேவையும் பராமரிப்பும் அவ்விரு புனிதத் தலங்களுக்கும் கிடைத்தன.

ஆகவே, இந்த மகத்தான இடத்தை பாதுகாப்பதும், அதன் எல்லைகளைக் காவல் காப்பதும், அதன் மீதான ஆக்கிரமிப்புகளை முறியடிப்பதும், அதன் ஒரு சாண் அங்குல நிலத்தைக் கூடத் தீண்ட நினைப்பவரைத் தண்டிப்பதும் தலையாயக் கடமைகளிலும், (அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றுத்தரும்) மிகச் சிறந்த நற்செயல்களிலும் ஒன்றாக இருக்கிறது; மேலும் அல்லாஹ்வின் திருப்தியை நாடி, உயிர்களையும் ஆத்மாக்களையும் அர்ப்பணிக்கத்தக்க காரியமாகவும் விளங்குகிறது.

குறிப்பாக, இந்த மாபெரும் நாடு முஸ்லிம்களின் புனிதத் தலங்களைத் தன்பக்கம் கொண்டிருப்பதோடு, அதன் புனித இடங்களில் இஸ்லாத்தின் தூண்களில் மகத்தான ஒரு தூணான ஹஜ்ஜும், அதன் மாபெரும் வழிபாட்டுச் சின்னங்களில் ஒன்றான உம்ராவும் நிறைவேற்றப்படுகின்றன.

பகுதி 1 / 5

எல்லைக் காவலின் சிறப்பு

எல்லைகளில் அரண் காத்து நிற்கும் நம் பிள்ளைகளுக்கு (வீரர்களுக்கு), பொறுமையையும், சகிப்புத்தன்மையுடன் உறுதியாக நிற்பதையும், எல்லைப் பாதுகாப்பில் நிலைத்திருப்பதையும் நாம் உபதேசிக்கிறோம். நிச்சயமாக அல்லாஹு தஆலா உங்களுக்கு ஈடுஇணையற்ற அருளையும், அளப்பரிய கூலியையும் வழங்கிச் சிறப்பித்துள்ளான்.

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱصْبِرُوا۟ وَصَابِرُوا۟ وَرَابِطُوا۟ وَٱتَّقُوا۟ ٱللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ஆல இம்ரான் 3 : 200
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடியுங்கள்; (எதிரிகளை எதிர்கொள்வதில்) சகிப்புத்தன்மையுடன் உறுதியாக நில்லுங்கள்; (எல்லைகளைப் பாதுகாப்பதில்) விழிப்புடன் நிலைத்திருங்கள்; மேலும் அல்லாஹ்வை அஞ்சுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்.”

மேலும் நபி ﷺ அவர்கள் – தங்களைப் பற்றி ஆதாரப்பூர்வமாக வந்துள்ள செய்தியில் – கூறினார்கள்:

“அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் அரண் காத்து நிற்பது, இவ்வுலகையும் அதிலுள்ள அனைத்தையும் விடச் சிறந்ததாகும்.”ஸஹீஹுல் புகாரீ: 2892

எல்லைக் காவல் புரிபவரின் சிறப்புகளும், அவருக்குரிய தனித்துவமான மேன்மைகளும் மிக மகத்தானவை. நிச்சயமாக நபி ﷺ அவர்கள் கூறியதாக ஆதாரப்பூர்வமாக வந்துள்ளது:

“ஓர் இரவும் ஒரு பகலும் எல்லைக் காவல் புரிவது, ஒரு மாதம் நோன்பு நோற்பதையும், (அம்மாதத்தின் இரவுகளில் நின்று) வணங்குவதையும் விடச் சிறந்ததாகும். அவர் இறந்துவிட்டால், அவர் செய்துகொண்டிருந்த நற்செயல் அவருக்குத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கும்; அவருடைய வாழ்வாதாரமும் அவருக்குத் தொடர்ந்து வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கும்; மேலும் அவர் (மண்ணறையின்) சோதனையாளரிடமிருந்து பாதுகாப்பளிக்கப்படுவார்.”ஸஹீஹ் முஸ்லிம்: 1913

மேலும் நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

“எல்லைக் காவல் புரிபவரைத் தவிர, மரணிக்கும் ஒவ்வொருவரின் செயல்களும் முத்திரையிடப்பட்டு (முடிவுக்கு வந்து) விடுகின்றன; இவருடைய செயலோ மறுமை நாள் வரை இவருக்குப் பெருக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்; மேலும் அவர் மண்ணறையின் சோதனையாளரிடமிருந்தும் பாதுகாப்பளிக்கப்படுவார்.”ஸுனன் அபீதாவூத்: 2500; ஜாமிஉத் திர்மிதீ: 1621 (ஸஹீஹ்)

மேலும் நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

“இரு கண்களை நரகம் தீண்டாது: அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத கண்; மற்றொன்று, அல்லாஹ்வின் பாதையில் இரவில் விழித்திருந்து காவல் காத்த கண்.”ஜாமிஉத் திர்மிதீ: 1639 (ஸஹீஹ்)

இவை எல்லைக் காவல் புரிபவருக்குரிய மகத்தான சிறப்புகளும் கூலிகளுமாகும்:

فَٱسْتَبْشِرُوا۟ بِبَيْعِكُمُ ٱلَّذِى بَايَعْتُم بِهِۦ ۚ وَذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ அத்-தவ்பா: 111
“ஆகவே, நீங்கள் செய்த இந்த வர்த்தகத்தைக் குறித்து மகிழ்ச்சியடையுங்கள்; அதுவே மகத்தான வெற்றியாகும்.”
பகுதி 2 / 5

கடமையும் அறிவுரையும்

எல்லைப் பாதுகாப்புப் புரியும் சகோதரர்களே! கடமையை ஆற்றுவதற்கு நீங்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்பதும், ஆட்சியாளர்களுக்கும் களத்திலுள்ள உங்கள் தளபதிகளுக்கும் செவிமடுத்துக் கீழ்ப்படிவதும், கட்டளைகளை மிக நேர்த்தியாக நிறைவேற்றுவதும் கடமைகளில் உள்ளவையாகும்; கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் தனது தூதர் ﷺ அவர்களின் தோழர்களுக்கு அவ்வாறே கட்டளையிட்டுள்ளான்.

وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَنَـٰزَعُوا۟ فَتَفْشَلُوا۟ وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ وَٱصْبِرُوٓا۟ ۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّـٰبِرِينَ அல்-அன்ஃபால் 8 : 46
“மேலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; (உங்களுக்குள்) முரண்படாதீர்கள், அவ்வாறாயின் நீங்கள் தைரியமிழந்து விடுவீர்கள், உங்கள் பலமும் போய்விடும்; மேலும் பொறுமையைக் கடைப்பிடியுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.”

நீங்கள் அவனுடைய தூதரின் தோழர்களுடைய (சஹாபாக்களுடைய) அடிச்சுவட்டில் நின்றவாறு, முஸ்லிம்களின் புனிதத் தலங்களைப் பாதுகாக்கிறீர்கள்; தவ்ஹீதின் (ஓரிறைக் கொள்கையின்) கொடியை உயர்த்துகிறீர்கள்.

மேலும், கூட்டுப் படைகளிலுள்ள நமது சகோதரர்களுக்கு வாழ்த்துகளையும் நன்மதிப்பையும் தெரிவித்துக் கொள்கிறோம்; நிச்சயமாக நீங்கள் ஒரு மகத்தான எல்லைப் புறக்காவலிலும், கண்ணியமிக்க ஒரு மாபெரும் பணியிலும் இருக்கிறீர்கள். ஆகவே அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்; உங்கள் அணிகளை ஒன்றுபடுத்துங்கள்; உங்களுக்குள் ஒருவருக்கொருவர் இணங்கி நடங்கள்.

وَٱعْتَصِمُوا۟ بِحَبْلِ ٱللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا۟ ஆல இம்ரான்: 103
“நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்; பிரிந்துவிடாதீர்கள்.”
பகுதி 3 / 5

ஹூத்தி இயக்கம் குறித்த எச்சரிக்கை

மேலும் அறிந்து கொள்ளுங்கள்: நாட்டில் குழப்பத்தை விளைவித்து, மனிதர்களைப் பிளவுபடுத்தி, தன் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, முஸ்லிம்களின் புனிதத் தலங்களுக்குத் தீங்கு விளைவிக்க எண்ணிய ஓர் எதிரியை எதிர்த்து நீங்கள் போரிடுகிறீர்கள்; ஆனால் அல்லாஹு தஆலா அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.

அதுவே ஹூத்தீ இயக்கமாகும்; தீய கும்பலும், எதிரிகளின் சதிவலையுமான அது, வழிகேடான கொள்கையிலும், வழிகேடான வழிமுறையிலும் கட்டமைக்கப்பட்டு, தனது ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பல வருடங்களாகத் தொடர் ஃபித்னாக்களை ஏற்படுத்திக் கிளர்ச்சி செய்தது; இறுதியாக நாட்டையும் மக்களையும் பிளவுபடுத்தியது. நபி ﷺ அவர்களின் தோழர்களை காஃபிர்கள் என முத்திரைக்குத்தி, முஸ்லிம்களின் இரத்தத்தைச் சிந்துவதை ஆகுமாக்கி, அவர்களின் பள்ளிவாசல்களை இடித்துத் தகர்ப்பதை நியாயப்படுத்தும் இந்த வழிகெட்ட பிரிவிற்கும், தடம் புரண்ட இக்கூட்டத்திற்கும் எதிராக ஒரே அணியாக நில்லுங்கள்.

நமது யமன் நாட்டு சகோதரர்கள் பாதுகாப்பிலும், அமைதியிலும், செழிப்பிலும், நிலைத்தன்மையிலும் வாழ்வதற்காகவும், அவர்களுடைய நாடு ஏனைய முஸ்லிம் உலக நாடுகளுடன் இணைந்து மறுமலர்ச்சியிலும், வளர்ச்சியிலும், ஒற்றுமையிலும் திகழ்வதற்காகவும், அதன் மார்க்கச் சட்டபூர்வ தலைமையின் கீழ் யமன் நாட்டில் பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் மீண்டும் நிலைநாட்டுவது தலையாயக் கடமைகளில் ஒன்றாகும்.

إِن يَنصُرْكُمُ ٱللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ ۖ وَإِن يَخْذُلْكُمْ فَمَن ذَا ٱلَّذِى يَنصُرُكُم مِّنۢ بَعْدِهِۦ ۗ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ ஆல இம்ரான் 3 : 160
“அல்லாஹ் உங்களுக்கு உதவினால் உங்களை மிகைப்பவர் அறவே இல்லை. இன்னும், அவன் உங்களை கைவிட்டால் அதற்குப் பின்னர் உங்களுக்கு உதவுபவர் யார் (இருக்கிறார்)? ஆகவே, நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனை மட்டும் சார்ந்து இரு)ப்பார்களாக!”
பகுதி 4 / 5

இறுதி துஆ

அல்லாஹு தஆலா உங்கள் அனைவருக்கும் தனது உதவியை வழங்க வேண்டும் என்றும், நமது நாட்டையும், அன்பிற்குரிய யமனையும் அனைத்துத் தீங்குகளை விட்டும் பாதுகாக்க வேண்டும் என்றும் நாம் அவனிடம் வேண்டுகிறோம். அவ்வாறே ஹூத்தி இயக்கத்தினரையும், அவர்களுக்கு உதவி செய்து ஆதரவளிப்பவர்களையும் வேரறுக்குமாறும் தூயவனாகிய அவனிடம் நாம் துஆ கேட்கிறோம். நிச்சயமாக அவன் அதற்குப் பொறுப்பாளனும், அதன் மீது பேராற்றல் உடையவனும் ஆவான். அகிலங்களின் ரப்பாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

பகுதி 5 / 5
This article as a PDF bookletRead PDFDownload
If this article benefited you, please share it.