
சுருக்கமான பதில்:
அல்லாஹ்வின் அடியார்களே! பெருநாள் தினத்தில் ஒருவர் சொல்ல, மற்றவர்கள் பின்னால் கூட்டாகச் சேர்ந்து ராகமிட்டு தக்பீர் முழங்குவது மார்க்கத்தில் ஆதாரமற்ற ஒரு பித்அத் ஆகும்.. இத்தகைய நடைமுறை மஸ்ஜிதுல் ஹராமில் (மக்காவில்) நடக்கிறது என்பது இதற்கான ஆதாரமாகாது. ஏனெனில், அஷ்ஷைக் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) போன்ற மாபெரும் அறிஞர்களே மஸ்ஜிதுல் ஹராமில் நடக்கும் இந்தச் செயலை “வெறுக்கத்தக்க பித்அத்” என்று கண்டித்துள்ளனர். நபிகளார் ﷺ மற்றும் ஸஹாபாக்கள் காட்டித்தந்த உண்மையான வழிமுறை என்னவென்றால், ஒவ்வொருவரும் மற்றவருக்குத் தொந்தரவு தராத வகையில் தனித்தனியாகத் தக்பீர் முழங்குவதே ஆகும். சுன்னாவைப் பேணுவதிலேயே அல்லாஹ்வின் திருப்தியும் வெற்றியும் அடங்கியுள்ளது.
இதைப் பற்றிய விரிவான மார்க்க ஆதாரங்கள் மற்றும் விளக்கங்களை அஷ்ஷய்க் ஹமூத் அத்-துவைஜிரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது ஆய்வில் பின்வருமாறு விளக்குகிறார்கள்:
அல்லாஹ்வின் அடியார்களே!
பெருநாள் தினங்களில் – அதிலும் குறிப்பாக பெருநாள் தொழுகை காலையில் – நாம் ஒரு காட்சியைக் காண்கிறோம். ஒருவர் ராகமாகப் பாட்டுப் பாடுவது போல் சப்தமிட்டு “தக்பீர்” ஓத, அவரைப் பின்தொடர்ந்து பின்னால் இருப்பவர்கள் எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து சத்தத்தை உயர்த்தி, ஒரு வகையான ராகத்துடன் ஓதுகிறார்கள். இத்தகைய ‘கூட்டுத் தக்பீர்’ மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு முறையா?
முஸ்லிம்கள் இந்த விஷயத்தில் மிகவும் பொடுபோக்காக இருப்பதை நாம் பார்க்கிறோம். “மஸ்ஜிதுல் ஹராமிலேயே (மக்காவிலேயே) இப்படித்தான் கூட்டாகத் தக்பீர் சொல்கிறார்கள், பிறகு இது எப்படித் தவறாகும்?” என்று ஒரு தவறான வாதத்தை மக்கள் முன்வைக்கிறார்கள். ஆனால், ஒரு முஸ்லிமுக்கு மஸ்ஜிதுல் ஹராமில் நடக்கும் நடைமுறைகள் ஆதாரமாகாது. நமக்குரிய உண்மையான ஆதாரம் என்பது அல்குர்ஆன், அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் சுன்னா மற்றும் ஸஹாபாக்களின் (ரதியல்லாஹு அன்ஹும்) வழிமுறை மட்டுமே!
இந்தக் கூட்டுத் தக்பீர் என்பது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களோ அல்லது அவர்களது தோழர்களோ காட்டித்தராத ஒரு பித்அத் என்பதில் மார்க்க அறிஞர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். இது குறித்து ஹிஜ்ரி 1413 / 1992 மரணித்த அறிஞர் அஷ்ஷய்க் ஹமூத் அத்துவைஜிரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ‘பெருநாளன்று தக்பீரை ஒருவர் கூற, பின்னர் அவரை பிந்தொடர்ந்து எல்லோரும் கூட்டாக ராகத்தோடு கூறும் தக்பீர் முறையை தடுப்பது’ என்ற தலைப்பில் ஒரு நூலையே எழுதியுள்ளார்கள்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்நூற்றாண்டின் மாபெரும் அறிஞரான ஹிஜ்ரி 1420 / 1999 மரணித்த அல்-இமாம் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இந்த நூலுக்கு எழுதிய மதிப்புரையின் முதல் வரியிலேயே, “மஸ்ஜிதுல் ஹராமில் தவறான வடிவத்தில் சொல்லப்படும் இந்த தக்பீர் ஒரு வெறுக்கத்தக்க பித்அத் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை” என்று ஆணித்தரமாகக் கூறிவிட்டார்கள். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானக.
அஷ்-ஷய்க் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) இந்நூலிற்கு எழுதின மதிப்புரையை இக்கட்டுரை கடைசியில் சேர்த்து இருக்கிறேன்
முதலில் நூலாசிரியர் ஷைக் ஹமூத் அத்துவைஜிரி தமக்கு ஏற்பட்ட அந்த அனுபவத்தை எவ்வாறு இந்நூலில் விவரிக்கிறார் என்பதைப் பார்ப்போம்:
நூலாசிரியர் குறிப்பிடுகிறார்:
ஹிஜ்ரி 1377-ம் ஆண்டு / 1958ல் மஸ்ஜிதுல் ஹராமில் நான் ஈதுல் பித்ர் (நோன்புப் பெருநாள்) தொழுகையைத் தொழுதேன். அப்போது ஸம்ஸம் (கிணற்றின்) உயரமான பகுதியிலும், ‘மகாமுல் ஹனஃபி’ 1 என்ற இடத்தின் உயரமான பகுதியிலும் இருந்தவர்கள் தக்பீர், தஹ்லீல், தஹ்மீத் மற்றும் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் மீதான ஸலவாத்து ஆகியவற்றைப் பாடகர்கள் பாடுவதைப் போன்ற ஒரு குறிப்பிட்ட ராகத்தில், அனைவரும் ஒரே குரலில் சப்தமாக ஓதிக் கொண்டிருந்ததைச் செவியுற்றேன்.
அதேபோல, மகாமுல் ஹனஃபி இடிக்கப்பட்ட பிறகு ஹிஜ்ரி 1378-ம் /1959 ஆண்டும் ஸம்ஸம் கிணற்றுப் பகுதியில் அவர்கள் அவ்வாறே செய்தனர். ஈதுல் அழ்ஹா (ஹஜ் பெருநாள்) அன்றும் அவர்கள் இவ்வாறு செய்வதாகச் சில ஹாஜிகள் என்னிடம் தெரிவித்தனர். பாடல்களைக் கேட்டு மயங்குபவர்கள் எப்படி இன்பும் அடைகிறார்களோ, அதேபோல அங்கிருந்த சிலர் இந்தச் சப்தங்களைக் கேட்டு ரசிப்பதைக் கண்டேன். அவர்களுடைய இந்தச் செயல் அல்லாஹ்வைத் திக்ர் செய்வதைக் கேலி செய்வதாகும்; மேலும் இது கண்டிக்கப்பட வேண்டிய பித்அத்களில் ஒன்றாகும்
அந்த சம்பவத்தை பதிவு செய்ததற்குப் பிறகு நூலாசிரியர் இந்தக் கூட்டுத் தக்பீர் முறை மார்க்கத்தில் கூடாத ஒன்று என்பதை விளக்கி இவ்வாறு கூறுகிறார்கள்:
1. இப்னு மஸ்ஊத் (ரதியல்லாஹு அன்ஹுமா) அவர்களின் தெளிவான பாடம்
ஒருமுறை மஸ்ஜிதுக்கு வந்த இப்னு மஸ்ஊத் (ரதியல்லாஹு அன்ஹுமா) அவர்கள், அங்கே மக்கள் சில வட்டங்களாக அமர்ந்து, ஒரு மனிதர் சொல்லச் சொல்ல கூட்டாக தஸ்பீஹ் மற்றும் தக்பீர்களைச் சிறுகற்களைக் கொண்டு எண்ணிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். அந்தச் செயலைக் கண்டதும் அவர் பின்வருமாறு மிகக் கடுமையாகக் கண்டித்தார்கள்:
“முஹம்மதுடைய சமுதாயமே! உங்களுக்குக் கேடுதான்! எவ்வளவு விரைவாக நீங்கள் அழிவை நோக்கிச் செல்கிறீர்கள்!
இதோ உங்கள் நபியின் தோழர்கள் (ஸஹாபாக்கள்) இன்னும் ஏராளமானவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். நபிகளாரின் ஆடைகள் கூட இன்னும் மக்கிப் போகவில்லை.
என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் முஹம்மத் ﷺ அவர்களின் மார்க்கத்தை விட நேரான ஒரு மார்க்கத்தில் இருக்கிறீர்களா? அல்லது வழிகேட்டின் வாசலைத் திறப்பவர்களாக இருக்கிறீர்களா?”
அப்போது அந்த மக்கள், “அபூ அப்திர் ரஹ்மானே! நாங்கள் நன்மையைத் தவிர வேறொன்றையும் நாடவில்லை” என்று கூறினர். அதற்கு இப்னு மஸ்ஊத் (ரதியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் வழங்கிய பதில் இன்றும் நமக்கு ஒரு மிகப்பெரிய பாடம்:
“நன்மையை நாடக்கூடிய எத்தனையோ பேர் அதனை அடைவதில்லை (ஏனெனில் அவர்கள் சுன்னாவைப் பின்பற்றுவதில்லை).”(ஆதாரம்: சுனன் அத்-தாரிமீ – இமாம் அத்-தாரிமீ)
மற்றுமொரு அறிவிப்பில்
இமாம் தபரானி மற்றும் முஹம்மத் பின் வத்தாஹ் ஆகியோரின் அறிவிப்புகளில் பின்வரும் கூடுதல் தகவல் இடம்பெற்றுள்ளது:
இப்னு மஸ்ஊத் (ரதியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அந்த இடத்திற்கு வந்து, அங்கே மக்கள் சிறுகற்களைக் குவித்து வைத்துக் கொண்டு திக்ர் செய்வதைப் பார்த்ததும், அவர்களை பள்ளிவாசலை விட்டு வெளியேற்றினார்கள். அப்போது அவர் இவ்வாறு கூறினார்கள்:
“நிச்சயமாக நீங்கள் ஒரு இருண்ட பித்அத்தை உருவாக்கிவிட்டீர்கள்! அல்லது முஹம்மத் ﷺ அவர்களின் தோழர்களை விடவும் அறிவில் நீங்கள் சிறந்து விளங்குவதாக (உங்களை நீங்களே) எண்ணிக்கொண்டீர்கள்!
நூலாசிரியர் இப்னு மஸ்ஊத் (ரதியல்லாஹு அன்ஹு) அவர்களின் இந்தச் சம்பவத்தை ஆதாரமாக வைத்துப் பின்வரும் காரணத்தைக் கூறுகிறார்:
இதனைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகு, பெருநாள் அன்று ஒருவருக்கொருவர் பதில் கூறி (கூட்டாக) தக்பீர் முழங்குபவர்களின் செயல் என்பது எவ்விதச் சந்தேகமும் இன்றி தடுக்கப்பட வேண்டிய செயல்களில் ஒன்றாகும். மேலும், இப்னு மஸ்ஊத் மற்றும் அபூ மூஸா (ரதியல்லாஹு அன்ஹுமா) ஆகிய இருவரும் எதனைக் கண்டித்தார்களோ, அதைவிட இது மிகப்பெரிய (தீமையான) காரியமாகும். எனவே, இதனைச் செய்பவர்களைக் கண்டிப்பதும், அவர்களை இதிலிருந்து தடுத்து நிறுத்துவதும் மிகவும் அவசியமானதாகும்.
இதற்கான விளக்கம் பல கோணங்களில் அமைகிறது:
- முதலாவது: தக்பீர் கூறுபவர்கள் அதனை ஒருவித ராகத்துடன் (தத்ரீப்) ஓதுவதும், ஒரு கூட்டமாக இணைந்து மிக உயர்ந்த சப்தத்தில், அனைவரும் ஒரே சீரான குரலில் – பாடகர்கள் பாடுவதைப் போன்ற முறையில் – வெளிப்படுத்துவதும் ஆகும். இத்தகைய வழிமுறையிலிருந்து அல்லாஹ்வின் திக்ரைத் தூய்மைப்படுத்துவதும், அவனை கண்ணியப்படுத்துவதும் அவசியமான ஒன்றாகும்.
- இரண்டாவது : பிறருக்கு ஏற்படும் இடையூறு (தஷ்வீஷ்)
இந்தக் கூட்டுத் தக்பீர் முறையைத் தடுப்பதற்கான இரண்டாவது மிக முக்கியமான காரணம்: மஸ்ஜிதுல் ஹராமில் குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர்களுக்கும், தனித்தனியாகத் தக்பீர், தஸ்பீஹ், தஹ்மீத் போன்ற திக்ர்களில் ஈடுபடுபவர்களுக்கும் மற்றும் துஆவில் இருப்பவர்களுக்கும் இது மிகப்பெரிய இடையூறாகவும், ஃபித்னாவாகவும் அமைகிறது. கூட்டாகச் சத்தமிட்டு ஓதும்போது, மற்றவர்கள் ஓதும் குர்ஆனோ அல்லது அவர்கள் செய்யும் திக்ரோ அவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
நபி ﷺ அவர்கள் குர்ஆனை ஓதுவதாக இருந்தாலும் கூட, அதன் மூலம் மற்றவர்களுக்குத் தொந்தரவு ஏற்படுமானால் சத்தத்தை உயர்த்துவதைத் தடுத்துள்ளார்கள்.
- 1. ஃபர்வா அல்பயாதீ (ரதியல்லாஹு அன்ஹு) அவர்களின் அறிவிப்பு (முவத்தா மாலிக்): நபி ﷺ அவர்கள் வெளியே வந்தபோது மக்கள் தொழுது கொண்டிருந்தனர். அவர்கள் சத்தமாக ஓதிக் கொண்டிருந்ததைக் கண்ட நபி ﷺ அவர்கள்: “தொழுபவர் தனது இறைவனுடன் இரகசியமாக உரையாடுகிறார் (முனாஜாத்). எனவே எதனைக் கொண்டு அவனிடம் உரையாடுகிறோம் என்பதில் கவனமாக இருக்கட்டும். உங்களில் ஒருவர் மற்றவரை விட குர்ஆனைச் சத்தமாக ஓத வேண்டாம்” என்று கூறினார்கள்.
- 2.அபூ ஸயீத் அல்குத்ரீ (ரதியல்லாஹு அன்ஹு) அவர்களின் அறிவிப்பு (அபூ தாவூத், ஹாகிம்).
நபி ﷺ அவர்கள் மஸ்ஜிதில் இஃதிகாஃப் இருந்தபோது மக்கள் சத்தமாக ஓதுவதைக் கேட்டார்கள். உடனே திரையை விலக்கி: “அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் இறைவனுடன் உரையாடுகிறீர்கள். எனவே ஒருவருக்கொருவர் தொந்தரவு தராதீர்கள். ஓதுவதில் (அல்லது தொழுகையில்) ஒருவர் மற்றவரை விடச் சத்தத்தை உயர்த்த வேண்டாம்” என்று கூறினார்கள்.
“இந்த ஹதீஸ் இமாம் ஹாகிம் மற்றும் இமாம் தஹபி ஆகியோரால் ஆதாரப்பூர்வமானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது).” - 3. இப்னு உமர் (ரதியல்லாஹு அன்ஹுமா) அவர்களின் அறிவிப்பு (முஸ்னத் அஹ்மத்):
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தொழுகையில் நின்றால் அவர் தனது இறைவனுடன் உரையாடுகிறார். எனவே எதனை ஓதித் துதிக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளட்டும். தொழுகையில் ஒருவர் மற்றவரை விடச் சத்தமாக ஓத வேண்டாம்.”
தனியாகத் தொழுபவராக இருந்தாலும் அல்லது குர்ஆன் ஓதுபவராக இருந்தாலும் – அது மார்க்கத்தில் ஏவப்பட்ட காரியமாக இருந்தும் – மற்றவர்களுக்குத் தொந்தரவு (தஷ்வீஷ்) ஏற்படும்போது சத்தத்தை உயர்த்துவது தடுக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில், சுன்னாவிற்கு முரணாகப் புதிதாக உருவாக்கப்பட்ட (பித்அத்) இந்த ‘கூட்டுத் தக்பீர்’ முறை, மற்றவர்களுக்கு இடையூறு தரும்போது அதனைத் தடுப்பது இன்னும் பொருத்தமானதும் அவசியமானதுமாகும்.
-
இமாம் அஹ்மத் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்: “முன்னோர்கள் துஆவில் குரலை உயர்த்துவதை வெறுப்பவர்களாக இருந்தனர்.”
-
ஸயீத் பின் அல்-முஸய்யிப் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்: “மக்கள் துஆவின் போது சப்தமிடும் புதிய பழக்கத்தை (பித்அத்தை) உருவாக்கிவிட்டனர்.”
-
ஹஸன் அல்பஸரீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம், “எங்கள் இமாம் அறிவுரை கூறுகிறார், அப்போது ஆண்களும் பெண்களும் ஒன்று சேர்ந்து துஆவில் சப்தத்தை உயர்த்துகிறார்கள்” என்று கூறப்பட்டபோது, அவர், “துஆவில் சப்தத்தை உயர்த்துவதும் பித்அத், அதற்காக ஆண்களும் பெண்களும் ஒன்றுகூடுவதும் பித்அத்” என்று பதிலளித்தார்கள்.
-
விழிப்படையச் செய்தல் (நினைவூட்டல்): உமர் (ரதியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு இயல்பாகவே குரல் வளம் அதிகம். அவர்கள் தக்பீர் கூறியதைக் கேட்ட மக்கள், தங்களின் கவனக்குறைவிலிருந்து விழிப்படைந்து தக்பீர் கூறினார்கள். இப்னு உமரும் அபூ ஹுரைராவும் சந்தையில் செய்ததும் இதே நோக்கத்திற்காகத்தான்.
-
தனித்தனியாகக் கூறுதல்: அந்த ஸஹாபாக்கள் தாங்கள் மட்டும் சப்தமாகக் கூறினார்களே தவிர, அவர்கள் இருவரோ அல்லது ஒரு கூட்டமோ இணைந்து ஒரே குரலில் கூறவில்லை. மேலும், அவர்களைக் கேட்டு தக்பீர் கூறிய மக்களும் தங்களுக்குத் தாங்களே தனித்தனியாகக் கூறினார்களே தவிர, இவர்களுடன் சேர்ந்து தாளத்தோடு கத்தவில்லை.
-
ராகம் இல்லை: அவர்கள் தக்பீரை ராகமிட்டோ (தத்ரீப்), பாடுவது போலவோ ஓதவில்லை.
-
இடையூறு இல்லை: அவர்களின் நோக்கம் மறதியில் உள்ளவர்களுக்கு நினைவூட்டுவதே தவிர, மஸ்ஜிதில் குர்ஆன் ஓதுபவர்களுக்கோ தொழுபவர்களுக்கோ தொந்தரவு கொடுப்பதல்ல.
2. திக்ர் மற்றும் துஆவில் சப்தத்தைக் குறைப்பதன் முக்கியத்துவம்
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “பணிவில்லாமல் அல்லாஹ்வை அழைப்பது என்பது துஆவில் வரம்பு மீறுதலாகும். துஆவில் சப்தத்தை உயர்த்துவதும் இதில்தான் அடங்கும்.
3. முன்னோர்களின் (ஸலஃப்களின்) நிலைப்பாடு
ஸஹாபாக்களும் தாபியீன்களும் துஆ மற்றும் திக்ரில் சப்தத்தை உயர்த்துவதைக் கடுமையாக எதிர்த்தனர்.
4. திறந்த வெளியிலேயே நபி ﷺ தடுத்தார்கள்!
அபூ மூஸா அல்-அஷ்அரீ (ரதியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஹதீஸில் நாம் முன்னரே பார்த்தது போல, ஸஹாபாக்கள் ஒரு போரின் போது ஒரு பள்ளத்தாக்கில் இறங்கியபோது உரத்த சப்தத்தில் தக்பீர் கூறினார்கள்.
அப்போது நபி ﷺ அவர்கள்:
“மக்களே! உங்களைச் சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக நீங்கள் செவிமடுக்க இயலாதவனையோ, மறைவானவனையோ அழைக்கவில்லை. நீங்கள் செவியேற்பவனும், சமீபத்தில் இருப்பவனையுமே அழைக்கிறீர்கள்.”
(ஆதாரம்: புகாரி).
திறந்த வெளியிலேயே தக்பீர் கூறி குரலை உயர்த்தியவர்களையே நபி ﷺ அவர்கள் கண்டித்தார்கள் என்றால், அதை மஸ்ஜிதுல் ஹராமில், அதுவும் ராகமிட்டுப் பாடல்களைப் போன்று கூட்டாகச் செய்பவர்களைக் கண்டிப்பது மிகவும் பொருத்தமானதாகும். ஏனெனில், இது ‘சப்தத்தை உயர்த்துவது’ என்ற தடையுடன், ‘சுன்னாவிற்கு மாற்றமாகச் செயல்படுவது’ (பித்அத்) மற்றும் ‘தொழுபவர்களுக்கு இடையூறு செய்வது’ (தஷ்வீஷ்) ஆகிய பல குற்றங்களை உள்ளடக்கியுள்ளது.
5. பித்அத் பற்றிய எச்சரிக்கை
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
“நம்முடைய இந்த விஷயத்தில் (மார்க்கத்தில்) அதிலில்லாததைப் புதிதாக எவர் உருவாக்குகிறாரோ, அது நிராகரிக்கப்படும் .”
(ஆதாரம்: புகாரி, முஸ்லிம்).
“புதிதாக உருவாக்கப்படும் காரியங்களை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் ஒவ்வொரு புதிய காரியமும் பித்அத் ஆகும்; ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.”
(ஆதாரம்: அபூ தாவூத், திர்மிதி).
இந்தக் கூட்டுத் தக்பீர் என்பது நபி ﷺ அவர்கள் காலத்திலோ, ஸஹாபாக்கள் அல்லது தாபியீன்கள் காலத்திலோ அறவே இல்லாத, நிராகரிக்கப்பட வேண்டிய ஒரு பித்அத் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
6. வாதமும் அதற்கான பதிலும்
இந்தக் கூட்டுத் தக்பீரை நியாயப்படுத்துபவர்கள் ஒரு வாதத்தை முன்வைக்கலாம்:
உமர் (ரதியல்லாஹு அன்ஹு) அவர்கள் மினாவில் தமது கூடாரத்தில் இருந்து தக்பீர் கூறினார்கள், அதைக் கேட்டு மஸ்ஜிதில் உள்ளவர்களும், சந்தையில் உள்ளவர்களும் தக்பீர் கூறினார்கள். மேலும், இப்னு உமரும் அபூ ஹுரைராவும் (ரதியல்லாஹு அன்ஹுமா) சந்தைக்குச் சென்று தக்பீர் கூறுவார்கள், மக்கள் அவர்களைப் பின்தொடர்ந்து தக்பீர் கூறுவார்கள் என்று வந்துள்ளது என்று வாதிடுகிறார்கள்.
இதற்கு அறிஞர்கள் அளிக்கும் தெளிவான பதில்:எனவே, ஸஹாபாக்களின் வழிமுறைக்கும், இன்று மஸ்ஜிதுல் ஹராமில் நடக்கும் இந்த பித்அத்தான ‘கூட்டுத் தக்பீர்’ முறைக்கும் எவ்விதச் சம்பந்தமுமில்லை. ஸஹாபாக்கள் செய்த முறை ஒரு அழகான ஸுன்னா; ஆனால் இன்று செய்யப்படுவது ஒரு வழிகேடான பித்அத் ஆகும்.
7. ஆட்சியாளர்களின் கடமை
இமாம் இப்னுல் ஹாஜ் அல்-மாலிகி (ரஹிமஹுல்லாஹ்) கூறுவது போல, “ஒவ்வொருவரும் தனக்காகத் தக்பீர் கூற வேண்டும்; மற்றவரின் குரலுக்கு ஏற்ப (கோரஸாக) ஓதுவது என்பது பித்அத் ஆகும். ஏனெனில் நபி ﷺ அவர்களோ, கலீஃபாக்களோ இப்படிச் செய்ததில்லை.”
எனவே, திக்ர் என்ற பெயரில் செய்யப்படும் இத்தகைய அனாச்சாரங்களை, வரம்பு மீறல்களைத் தடுத்து நிறுத்தி, ஒவ்வொருவரும் மற்றவருக்குத் தொந்தரவு தராத வகையில், நடுத்தரமான சப்தத்தில் தனக்குத்தானே தக்பீர் கூறும்படி உத்தரவிடுவது ஆட்சியாளர்களின் கடமையாகும் (முடிவுற்றது).
அல்லாஹ்வின் பெயரால், அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் உண்டாகட்டும்.
அதற்குப் பிறகு: பெருநாள் அன்று அதிகாலையில் மஸ்ஜிதுல் ஹராமில் சில மக்கள் மிக உயர்ந்த சப்தத்திலும், ஒரு குறிப்பிட்ட ராகத்திலும் செய்கின்ற அந்த ‘கூட்டுத் தக்பீரை’ மறுத்து, எமது சகோதரரும் தோழருமான ஷைக் ஹமூத் பின் அப்துல்லாஹ் அத்துவைஜிரி அவர்கள் இந்தச் சிறு நூலில் குறிப்பிட்டுள்ளவற்றை நான் வாசித்தேன்.
இந்த முறையில் தக்பீர் கூறுவது அதன் செயல்முறை அடிப்படையில் ஒரு வெறுக்கத்தக்க பித்அத் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அதேசமயம், இத்தகைய முறை அல்லாமல் பொதுவாக திக்ர் செய்வதும், தக்பீர் கூறுவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதும், அறிஞர்களிடத்தில் ஆர்வமூட்டப்பட்டதுமாகும். ஒவ்வொரு மனிதனும் மக்களுக்குத் தொந்தரவு தராத வகையிலும், பாடகர்களுக்கு ஒப்பாகாமலும் தனது குரலை உயர்த்தாமல் தனக்குத்தானே தக்பீர் கூற வேண்டும்.
ஆசிரியர் (அஷ்ஷைக் ஹமூத் அத்துவைஜிரி) இந்தப் பித்அத்திற்கு மறுப்பு அளிக்கக்கூடிய ஹதீஸ்களையும், ஆஸார்களையும் (நபித்தோழர்களின் செய்திகள்) தெளிவாக விளக்கியுள்ளார்; அவர் மிகச் சிறப்பாகவும் பயனுள்ள வகையிலும் இதனைச் செய்துள்ளார். ……(பிறகு பின்வருமாறு இறுதியில் கூறுகிறார்கள்)
இதற்கு ஆட்சியாளர்கள் முழுமையான கவனத்தை செலுத்துவது கடமையாகும். அவர்கள் குடிமக்களின் நலனில் அக்கறை செலுத்தி, அவர்களின் இம்மை மற்றும் மறுமை வாழ்வின் சீர்திருத்தத்திற்கு எது உகந்ததோ அதன் பக்கம் அவர்களை வழிநடத்த வேண்டும். நிச்சயமாக ஆட்சியின் மிக முக்கியமான நோக்கம் என்பது, அல்லாஹ்வின் பூமியில் அவனது கட்டளையை நிலைநாட்டுவதும், மக்களை நேரான பாதையில் பயணிக்கச் செய்வதும், தூய்மையான மார்க்கம் விதித்துள்ள வரம்புகளுக்குள் அவர்களை நிலைத்திருக்கச் செய்வதுமே ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆட்சியாளர்களுக்கு அல்லாஹ் அனைத்து நன்மைகளிலும் வெற்றியைத் தருவானாக; அவர்கள் மூலமாக ஷரீஅத்தின் எல்லைகளைப் பாதுகாப்பானாக; முஸ்லிம்களின் நிலைகளைச் சீர்படுத்துவானாக; நிச்சயமாக அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் கொண்டவன். நன்மையின் பக்கம் வழிகாட்டுவதற்கும், தீமைகளை (முன்கராத்) தடுப்பதற்கும் ஒரு பங்களிப்பாக இது (எழுதப்பட்டது). ஹிஜ்ரி 1380 – 09 – 10 / 1960 அன்று எழுதப்பட்டது.
இதைத் தனது இறைவனின் மன்னிப்பைத் தேடும் எளியவன் அப்துல் அஜீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) எழுதிக்கொள்வது. அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மத் ﷺ அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாகட்டும்.
நூல்: إنكار التكبير الجماعي وغيره
ஆசிரியர்: حمود بن عبدالله التويجري
8. மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு: சுன்னாவைப் பின்பற்றுவதிலேயே வெற்றி உள்ளது
அன்பான அல்லாஹ்வின் அடியார்களே!
பெருநாள் தினத்தில் நாம் தக்பீர் கூறுவது எப்படி என்பதை மாபெரும் அறிஞர்களின் விளக்கங்கள் மூலம் நாம் இங்கு மிகத் தெளிவாகப் பார்த்தோம். மார்க்கத்தின் அடிப்படையில்,
அடியார்களே! நமது உண்மையான வெற்றியும் ஈடேற்றமும் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் தூய வழிமுறையைப் பின்பற்றுவதில்தான் உள்ளது. தோல்வியும் வழிகேடும் அவர்களின் வழிமுறைக்கு மாற்றமான இத்தகைய புதிய காரியங்களைப் பின்பற்றுவதில் இருக்கிறது.
அந்த மாபெரும் பெருநாள் நன்னாளில், அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்ற நன்மக்களாக அவன் நம் அனைவரையும் ஆக்குவானாக! இத்தகைய வழிகேடான பித்அத்களை விட்டும் நம்மைப் பாதுகாத்துத் தூரமாக்குவானாக!
Comments
No comments yet.