8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Eid & Qurbani

Types of Takbir: Eid al-Adha and Eid al-Fitrதக்பீரின் வகைகள்: ஹஜ் பெருநாள் மற்றும் நோன்புப் பெருநாள்

This article is in Tamil.
On this page5
1. ஹஜ் பெருநாளின் (ஈதுல் அத்ஹா) தக்பீர் வகைகள்:

ஹஜ் பெருநாளில் இரண்டு வகையான தக்பீர்கள் உள்ளன:

  • தக்பீர் முத்லக் (பொதுவான தக்பீர்): துல் ஹிஜ்ஜா மாதம் முதல் பிறையிலிருந்து, அய்யாமுத் தஷ்ரீக் உடைய கடைசி நாளின் (துல் ஹிஜ்ஜா 13) சூரிய அஸ்தமனம் வரை எந்நேரமும் சொல்லலாம்.

  • தக்பீர் முகய்யத் (குறிப்பிட்ட தக்பீர்): இது அரஃபா தினத்தின் (துல் ஹிஜ்ஜா 9) ஃபஜ்ர் தொழுகையிலிருந்து தொடங்கி, அய்யாமுத் தஷ்ரீக் உடைய கடைசி நாளின் (துல் ஹிஜ்ஜா 13) அஸர் தொழுகை வரை ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்னரும் சொல்லப்பட வேண்டும்.

2. நோன்புப் பெருநாளின் தக்பீர் சட்டம்:

நோன்புப் பெருநாளைப் பொறுத்தவரை தக்பீர் முகய்யத் (தொழுகைக்குப் பின் சொல்லும் முறை) என்பது கிடையாது.

  • நோன்புப் பெருநாளில் ‘தக்பீர் முத்லக்’ மட்டுமே மார்க்கமாக்கப்பட்டுள்ளது.

  • அதாவது, ரமதான் மாதத்தின் கடைசி நாள் சூரிய அஸ்தமனம் ஆனது முதல் பெருநாள் தொழுகை முடியும் வரை வீதியிலும், வீட்டிலும், சந்தையிலும் என எந்நேரமும் தக்பீர் சொல்லலாம்.

தொழுகைக்குப் பின்னால் சொல்லப்படும் ‘தக்பீர் முகய்யத்’ என்பது நோன்புப் பெருநாளிற்குக் கிடையாது என்பதில் நான்கு மத்ஹபுடைய அறிஞர்களும் ஏகோபித்த கருத்தில் (இத்திஃபாக்) உள்ளனர். ஏனெனில் அது ஹஜ்ஜு பெருநாளுக்கானதாகும்.


அஷ்ஷய்க் அரஃபாத் பின் ஹஸன் அல்-முஹம்மதீ (ஹஃபிதஹுல்லாஹ்) அவர்களின் தொகுப்பின் சுருக்கம்
நோன்பு பெருநாளின்போது நாம் எப்போது தக்பீர் கூற வேண்டும்?

நோன்பு பெருநாளினுடைய தக்பீர் என்பது ‘தக்பீர் முத்லக்’ (பொதுவான தக்பீர்) ஆகும். இதில் ‘தக்பீர் முகய்யத்’ (குறிப்பிட்ட நேரத்தோடு பிணைக்கப்பட்ட தக்பீர்) என்பது இல்லை.

அதாவது, தக்பீர் கூறத் தொடங்கும் நேரத்திலிருந்து அது முடியும் வரை காலை மற்றும் மாலை என எல்லா நேரங்களிலும் நீங்கள் தக்பீர் கூறலாம்; அது எதனோடும் கட்டுப்படுத்தப்படவில்லை.

நோன்பு பெருநாளின் தக்பீர் எப்போது தொடங்குகிறது?

இது ஈதுல் பித்ருடைய இரவின் (பெருநாள் இரவு) சூரிய அஸ்தமனத்திலிருந்து தொடங்குகிறது. ரமதானின் கடைசி நாளின் சூரியன் அஸ்தமித்துவிட்டால், அதன் பிறகு நீங்கள் தக்பீர் கூறுவது மார்க்கமாக்கப்பட்டுள்ளது.

அதன் முடிவு நேரத்தைப் பொறுத்தவரை, அது பெருநாள் தொழுகை நிறைவடைவதோடு முடிவடைகிறது.

وَلِتُكْمِلُوا ٱلْعِدَّةَ وَلِتُكَبِّرُوا ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمْ

மேலும் (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் பூர்த்தி செய்வதற்காகவும், அல்லாஹ்வை உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியதற்காக நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும் (தக்பீர் கூறவும்) என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்

(ஸூரத்துல் பகரா 2:185)

(ரமதானின் கடைசி நாளின்) சூரிய அஸ்தமனத்துடன் அந்த எண்ணிக்கை பூர்த்தியடைகிறது. இதன் காரணமாகவே, ஒரு பெண் பெருநாள் தொழுகைக்குச் செல்லாவிட்டாலும், இமாம் தொழுகையை முடிக்கும் வரை அவர் தக்பீர் கூறுவது மார்க்கமாக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொழுகையை முடித்துவிட்டால், தக்பீருடைய நேரம் முடிவடைந்து விடுகிறது.

தக்பீர் எவ்வாறு கூற வேண்டும்?

தக்பீருடைய வாசகங்கள் தொடர்பாக நபி ﷺ அவர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட ஒரு வடிவம் ஆதாரப்பூர்வமாக நிலைபெறவில்லை.

மாறாக, ஸஹாபாக்கள் (ரதியல்லாஹு அன்ஹும்) அவர்களிடமிருந்தே இது ஆதாரப்பூர்வமாக வந்துள்ளது. தக்பீரை இரட்டைபடையிலோ அல்லது ஒற்றைபடையிலோ சொல்லலாம், அதில் தவறில்லை. அறிஞர்களிடத்தில் அவை இரண்டும் சரியானதும், அறியப்பட்டதாகவும் உள்ளன.

இதில் உள்ள அடிப்படை விதி என்னவென்றால், வணக்க வழிபாடுகளின் அனைத்து முறைகளும் – அவை சொல்லாகவோ அல்லது செயலாகவோ இருக்கட்டும் – ஸஹாபாக்கள் (ரதியல்லாஹு அன்ஹும்) அவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தால், இதையோ அல்லது அதையோ என எதனை செய்வதில் தவறில்லை.

இப்னு அப்பாஸ் (ரதியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் இவ்வாறு தக்பீர் கூறுவார்கள்:
اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ، اللَّهُ أَكْبَرُ عَلَىٰ مَا هَدَانَا

உச்சரிப்பு: அல்லாஹு அக்பரு கபீரா, அல்லாஹு அக்பரு கபீரா, அல்லாஹு அக்பரு கபீரா, வல்ஹம்துலில்லாஹி, அல்லாஹு அக்பரு அலா மா ஹதானா.

பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன். புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே. அவன் நமக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ் மிகப் பெரியவன்.

ஸல்மான் அல்-பாரிஸீ (ரதியல்லாஹு அன்ஹு) அவர்கள் தம் தோழர்களுக்கு இவ்வாறு தக்பீர் கூறுமாறு கற்றுக் கொடுத்து வந்தார்கள்:
اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُمَّ أَنْتَ أَعْلَى وَأَجَلُّ مِنْ أَنْ تَكُونَ لَكَ صَاحِبَةٌ أَوْ يَكُونَ لَكَ وَلَدٌ أَوْ يَكُونَ لَكَ شَرِيكٌ فِي الْمُلْكِ أَوْ يَكُونَ لَكَ وَلِيٌّ مِنَ الذُّلِّ، وَكَبِّرْهُ تَكْبِيرًا، اللَّهُ أَكْبَرُ تَكْبِيرًا، اللَّهُمَّ اغْفِرْ لَنَا، اللَّهُمَّ ارْحَمْنَا

உச்சரிப்பு: அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹும்ம அன்த அஃலா வ அஜல்லு மின் அன் தகூன லக ஸாஹிபதுன், அவ் யகூன லக வலதுன், அவ் யகூன லக ஷரீகுன் பில் முல்கி, அவ் யகூன லக வலிய்யும் மினத் துல்லி, வ கப்பீர்ஹு தக்பீரா, அல்லாஹு அக்பரு தக்பீரா, அல்லாஹும்மக்ஃபிர் லனா, அல்லாஹும்ம இர்ஹம்னா.

பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன். யா அல்லாஹ்! உனக்கு ஒரு துணைவியோ அல்லது ஒரு குழந்தையோ அல்லது உனது ஆட்சியில் உனக்கு ஒரு கூட்டாளியோ அல்லது சிறுமையிலிருந்து உன்னைக் காக்க ஒரு உதவியாளரோ இருப்பதை விட நீ மிகவும் உயர்ந்தவனும் மகத்துவமிக்கவனுமாவாய்; (அவனைப் பெருமைப்படுத்த வேண்டிய முறையில் பெருமைப்படுத்துங்கள்) அல்லாஹ் மிகப் பெரியவன். யா அல்லாஹ்! எங்களை மன்னிப்பாயாக, யா அல்லாஹ்! எங்களுக்கு அருள் புரிவாயாக.

இவ்வாறு ஸல்மான் அல்-பாரிஸீ (ரதியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்து ‘முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்’ நூலில் ஆதாரப்பூர்வமான அறிவிப்புத் தொடருடன் இடம்பெற்றுள்ளது

உமர், இப்னு உமர், அலி மற்றும் இப்னு மஸ்ஊத் (ரதியல்லாஹு அன்ஹும்) ஆகியோரிடமிருந்து, அவர்கள் மூன்று முறை தக்பீர் கூறுவார்கள் என்று வந்துள்ளது:
اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللَّهُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، وَلِلَّهِ الْحَمْدُ

உச்சரிப்பு: அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர், வலில்லாஹில் ஹம்து.

பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன். புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.

மேலும் இரண்டு முறையும் தக்பீர் கூறலாம்

اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللَّهُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، وَلِلَّهِ الْحَمْدُ

உச்சரிப்பு: அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், வலில்லாஹில் ஹம்து.

பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன். புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.

எனவே பெருநாளன்றூ தக்பீர் கூறுவது குறித்த விஷயம் விசாலமானது (மேலுள்ள எந்த வாச்கத்தை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம் இன் ஷா அல்லாஹ்); ஏனெனில் இது ஸஹாபாக்கள் (ரதியல்லாஹு அன்ஹும்) அவர்களிடமிருந்து வந்துள்ளது.

If this article benefited you, please share it.