
On this page5
- விவாகரத்திற்குப் பிறகு பிள்ளைகள் வளர்ப்பதில் யாருக்கு முன்னுரிமை?
- தாயின் மறுமணத்திற்குப் பிறகு பிள்ளையை வளர்க்கும் உரிமை ?
- தாய் மறுமணம் செய்யாத நிலையில், பிள்ளை முதற்கட்ட பகுத்தறியும் திறனை அடைந்தால் (தம்யீஸ் – இது பொதுவாக ஏழு வயதாகும்போது வரும் அல்லது அதற்கு நெருக்கத்தில் வரும்) யாருக்கு வளர்ப்புரிமை ?
- குழந்தை பருவமடைந்து, பகுத்தறியும் ஆற்றல் பெற்ற பிறகு ?
- பிள்ளை வளர்ப்பில் யார் செலவுசெய்ய வேண்டும்?
- குழந்தையைப் பார்க்க மற்றவருக்குள்ள உரிமை ?
விவாகரத்திற்குப் பிறகு பிள்ளைகள் வளர்ப்பதில் யாருக்கு முன்னுரிமை?
விவாகரத்து நடந்தால், தாய் மறுமணம் செய்யாத வரை குழந்தை வளர்ப்பு உரிமை அவளுக்குத்தான் உள்ளது. இதுதான் நபிகள் நாயகம் (ﷺ) அவர்களின் ஹதீஸ்: “நீ மறுமணம் செய்யாதவரை நீதான் அதற்கு அதிக உரிமை உடையவள்.” என்று வழிகாட்டுகிறது.
ஆதாரம் – அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரதியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கக்கூடிய ஹதீஸ், ஒரு பெண்மணி கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதரே! இது என் மகன், என் வயிறு அவனுக்கு அவனை சுமந்த பாத்திரமாக இருந்தது, என் மார்பகம் அவனுக்குப் பானமாக இருந்தது, என் மடி அவனுக்குப் புகலிடமாக இருந்தது. இப்போது அவனது தந்தை என்னை விவாகரத்து செய்துவிட்டார், அவனை என்னிடமிருந்து பறிக்க விரும்புகிறார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவளிடம் கூறினார்கள், “நீ மறுமணம் செய்யாதவரை நீயே அவனுக்கு அதிக உரிமை உடையவள்” என்று கூறினார்கள்.”
நூல்: அபூதாவூத் (2276) இமாம் அல்பானீ ரஹிமஹுல்லாஹ்) இந்த ஹதீஸை “ஹஸன்” என்று தரப்படுத்தியுள்ளார்கள்.
அஷ்ஷய்க் அரஃபாத் அல்-முஹம்மதீ கூறுகிறர்கள்:
தம்பதியர் பிரிந்தால், குழந்தையை வளர்க்க அதிக உரிமை தாய்க்குத்தான் உண்டு என்பதில் அறிஞர்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர்.
ஒருமித்த கருத்தை (இஜ்மாவை) பதிவுசெய்த அறிஞர்கள்:
இப்னுல்-முன்திர் தனது “அல்-இஜ்மா” (63), அல்-கத்தாபி தனது “மஆலிமுஸ்-சுனன்” (3/242), இப்னு அப்துல்-பர்ர் தனது “அல்-இஸ்தித்கார்” (7/290), இப்னு ஹுபைரா தனது “அல்-இஃப்ஸாஹ்” (2/153), இப்னு குதாமா தனது “அல்-முஃக்னீ” (11/413), இப்னுல்-கய்யிம் தனது ஜாதுல்-மஆத் (5/435) என்ற நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
அல்-இமாம் இப்னு அப்தில் பர் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:
விவாகரத்து செய்யப்பட்ட பெண் மறுமணம் செய்யாதவரை, அவளுடைய குழந்தை சிறு குழந்தையாகவும், நல்லது கெட்டது அறியாத வயதிலும் இருக்கும்போது, அந்த குழந்தையை வளர்க்கும் உரிமை தந்தையை விட தாயிற்க்கே அதிகம் என்பதில், முன்சென்ற அறிஞர்கள் மற்றும் பிற்கால அறிஞர்களுக்கு மத்தியில் எந்தக் கருத்து வேறுபாடும் இருப்பதாக நான் அறியவில்லை. அத்தாயின் பாதுகாப்பில் குழந்தை நல்லபடியாக பராமரிக்கப்பட்டு, அவளிடமிருந்து எந்தத் தவறும் நிரூபிக்கப்படாத வரையிலும், அவள் மறுமணம் செய்யாத வரையிலும் இந்த நிலை தொடரும்.
பிள்ளை நல்லது கெட்டது அறியும் நிலையை அடைந்த பிறகு, அதனிடம் தாயையும் தந்தையையும் தேர்ந்தெடுக்கும்படி கூறுவதிலும், அல்லது இருவரில் யாருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதிலும் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
அல்-இஸ்தித்கார் (பாகம் 7 / பக்கம் 290).
தாயின் மறுமணத்திற்குப் பிறகு பிள்ளையை வளர்க்கும் உரிமை ?
ஏழு வயதுக்குட்பட்ட பிள்ளைகளை வளர்ப்புரிமை தாய்க்கே உண்டு. ஆனால், அவள் மறுமணம் செய்யும்போது, இந்த உரிமை அவளிடமிருந்து நீங்கி, அவளுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களுக்குச் செல்லும்.
தாய் மறுமணம் செய்த காரணத்தால், அவளின் வளர்ப்புரிமை நீங்கிவிட்டதால், அடுத்த நிலையில் அப்பிள்ளைக்கு நெருக்கமான பந்தம் உள்ளவருக்கு அந்த உரிமை மாற்றப்படுகிறது. தாய்க்குப் பிறகு யாருக்கு இந்த உரிமை கிடைக்கும் என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் உள்ளன:
- சில அறிஞர்கள், இந்த உரிமை குழந்தையின் தாய்வழிப் பாட்டியிடம் செல்லும் என்று கூறுகிறார்கள். இதையே பெரும்பாலான சட்ட நிபுணர்களின் நிலைபாடாகும் .
- சில அறிஞர்கள், அதிலும் முக்கியமாக ஹம்பலி மத்ஹப் அறிஞர்கள், தாயிற்க்கு திருமணம் ஆகிவிட்டால் தாய்வழிப் பாட்டியை விட தந்தைக்கே அதிக உரிமை உண்டு என்று கூறுகிறார்கள். இதை இமாம் இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். நமது ஆசிரியர் அஷ்-ஷய்க் அரஃபாத் அவர்களும் இதே கருத்தைத்தான் முன்மொழிகிறார்கள்.
(பார்க்க: அல்-முஃக்னீ 11/426 மற்றும் அஷ்-ஷர்ஹுல்-மும்திஃ, 6/26).
அஷ்ஷய்க் அரஃபாத் அல்முஹம்மதீ கூறுகிறாகள்:
ஒருவேளை தாய் மறுமணம் செய்தால், அந்த உரிமை தந்தைக்கு மாற்றப்படும். அப்போது தந்தை, தனது அம்மா (பிள்ளையின் பாட்டி), அல்லது தனது சகோதரி (பிள்ளையின் அத்தை), அல்லது தனது மனைவி ஆகியோரில் யாருக்கு அந்தக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை அளிப்பது என்று முடிவு செய்வார்.
📢 மூலம் பார்க்க : https://t.me/Arafatbinhassan/12878
இதேபோல், தாய்வழிப் பாட்டி முஸ்லிமல்லாதவராக அல்லது தீய ஒழுக்கம் கொண்டவராக இருந்தால், தாய்வழிப் பாட்டிக்குத்தான் உரிமை என்று கூறுபவர்கள் கூட, இந்த சூழ்நிலையில் தந்தைக்குத்தான் வளர்ப்புரிமை உள்ளது என்று கூறுகிறார்கள்.
சகோதர சகோதிரிகளே, குழந்தையை வளர்ப்பதன் நோக்கம் அதன் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, ஒரு நபர் தீய ஒழுக்கம் உள்ளவராக இருந்தாலோ, பொறுப்பற்றவராக இருந்தாலோ, அல்லது அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தாலோ, அவரது இந்த குணங்களால் குழந்தையின் நலன் பாதிக்கப்படும் என்பதால், வளர்ப்புரிமைக்கான உரிமையின் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அது தாய்வழி பாட்டியாக இருந்தாலும் சரி அல்லது தந்தையாக இருந்த்தாலும் சரி.
தாய் மறுமணம் செய்யாத நிலையில், பிள்ளை முதற்கட்ட பகுத்தறியும் திறனை அடைந்தால் (தம்யீஸ் – இது பொதுவாக ஏழு வயதாகும்போது வரும் அல்லது அதற்கு நெருக்கத்தில் வரும்) யாருக்கு வளர்ப்புரிமை ?
- ஆண் பிள்ளையாக இருப்பின்:
ஆண் பிள்ளைக்கு ஏழு வயதாகிவிட்டால், அவனது தந்தையா அல்லது தாயா என இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். அவன் யாரைத் தேர்வு செய்கிறானோ அவருடன் இருக்க வேண்டும்.
இதற்கு ஆதாரமாக வரும் ஹதீஸ், தாய் ஒருத்தி அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களிடம் வந்து, ” என் கணவர் என் மகனை என்னிடமிருந்து எடுத்துச் செல்ல விரும்புகிறார். அவன், அபூ அனபா கிணற்றில் இருந்து எனக்கு தண்ணீர் எடுத்துத் தந்து எனக்கு பயனளிக்கக்கூடியவனாக இருக்கிறான்” என்று கூறினாள். அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: அவனுக்காகச் சீட்டுக் குலுக்கிப் போடுங்கள். அப்போது அந்தப் பெண்ணின் கணவர், “என் மகன் மீதுள்ள என் உரிமையில் என்னுடன் யார் வாதிக்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள், “(சிறுவனே), இது உன்னுடைய தந்தை, இது உன்னுடைய தாய். இவ்விருவரில் நீ விரும்பியவரின் கையைப் பிடித்துக் கொள்” என்று கூறினார்கள். அப்போது அச்சிறுவன் தன் தாயின் கையைப் பிடித்துக்கொண்டு அவளுடன் சென்றான்.
(அபூதாவூத் – 2277 நஸாஈ – 3496,. இந்த ஹதீஸை இமாம் அல்-அல்பானி ஸஹீஹ் என்று தரப்படுத்தியுள்ளார்).
- பெண் பிள்ளையாக இருப்பின்:
பெண் பிள்ளைக்கு ஏழு வயதாகிவிட்டால், அவளது வளர்ப்புரிமை குறித்து பல்வேறு கருத்துகள் உள்ளன.- இமாம் ஷாஃபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் கருத்து: ஆண் குழந்தையைப் போலவே, பெண் குழந்தையும் இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படுவாள்.
- இமாம் அபூ ஹனீஃபா (ரஹிமஹுல்லாஹ்) மற்றும் இமாம் மாலிக் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இருவரும்: அந்தப் பெண் திருமணம் செய்யும் வரை அல்லது பருவம் அடையும் வரை அவளை வளர்க்கும் உரிமை தாய்க்கே உண்டு என்றும்.
- இமாம் அஹ்மத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்: பெண்ணைப் பாதுகாப்பதில் தந்தைக்கே அதிக பொறுப்பு இருப்பதால், அவளை வளர்க்கும் உரிமை தந்தைக்கே உண்டு என்றும் கூறுகிறார்கள்.
(பார்க்க: அல்-மவ்ஸூஆ அல்-ஃபிக்ஹிய்யா, (17/314-317).
அல்-இமாம் அஸ்-ஸன்ஆனீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:
ஒருவேளை தாய் தந்தையைவிட அதிகம் பாதுகாப்பவராகவும், அக்கறை உள்ளவராகவும் இருந்தால், அவருக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இந்தச் சூழ்நிலையில், குழந்தையின் விருப்பம் கணக்கில் கொள்ளப்படாது. ஏனெனில், ஒரு குழந்தை அறிவில் பலவீனமானது, அது விளையாட்டையும் சோம்பலையும் விரும்புவது இயல்பு. ஒருவேளை அது தன்னை விளையாட அனுமதிப்பவரைத் தேர்வு செய்தால், அந்தத் தேர்வு ஏற்றுக்கொள்ளப்படாது. குழந்தை, அதன் நலனுக்கு அதிக நன்மை செய்பவருடன் இருக்க வேண்டும். ஷரியத் இதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக்கொள்ளாது.
நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்:
‘உங்கள் குழந்தைகளுக்கு ஏழு வயதில் தொழுகையைக் கற்றுக் கொடுங்கள், பத்து வயதில் தொழவில்லை என்றால் அடியுங்கள், மேலும் அவர்களின் படுக்கைகளைத் தனித்தனியாகப் பிரியுங்கள்.’ மேலும் அல்லாஹ் கூறுகிறான்: ‘உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.’ எனவே, ஒருவேளை தாய் குழந்தையை மத்ரஸாவில் படிக்க வைத்தாலோ அல்லது குர்ஆனைக் கற்றுக் கொடுத்தாலோ, ஆனால் அந்தக் குழந்தை விளையாட்டை விரும்புகிறது, அதற்குத் தந்தையும் உதவுகிறார் என்றால், தாய்க்கே அந்தக் குழந்தையை வளர்க்கும் உரிமை அதிகம். இந்த நிலையில், குழந்தைக்கு விருப்பம் வழங்கவோ அல்லது குலுக்கல் போடவோ தேவையில்லை. இதே நிலை தலைகீழாக இருந்தாலும் அதுவே பொருந்தும்.
(பார்க்க: சுபுல் அஸ்-ஸலாம் 2/333).
அஷ்ஷய்க் அரஃபாத் அல்முஹம்மதீ கூறுகிறாகள்:
குழந்தை வளர்ப்பைப் பொறுத்தவரை, எப்போதும் யாருடைய பராமரிப்பில் அந்தக் குழந்தை சிறப்பாக இருக்குமோ, அவருக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஒரு நீதிபதி கூட, குழந்தையின் உணவு, ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் யார் சிறப்பாகக் கவனித்துக்கொள்வார்கள் என்பதைப் பொறுத்தே தீர்ப்பு வழங்குவார்.
ஹிஜ்ரீ 751-ஆம் ஆண்டில் மரணித்த இமாம் இப்னுல் கய்யிம் அவர்கள் தனது “ஸாதுல் மஆத்” என்ற நூலில் ஒரு சம்பவத்தைக் கூறுகிறார்:
ஒருமுறை, ஒரு பெண் தனது முன்னாள் கணவருடன் குழந்தையை வளர்க்கும் உரிமை தொடர்பாக சண்டையிட்டு நீதிபதியிடம் சென்றார். அந்தக் குழந்தை ஓரளவு புரிந்துகொள்ளும் வயதில் இருந்ததால், நீதிபதி அந்தப் பிள்ளையிடமே கேட்டார். “உன் தாயுடன் போக விரும்புகிறாயா அல்லது தந்தையுடன் போக விரும்புகிறாயா?” என்று. அதற்கு அந்தப் பிள்ளை, “நான் என் தந்தையுடன் செல்ல விரும்புகிறேன்” என்று கூறியது.
நீதிபதி, “ஏன் உன் தந்தையைத் தேர்ந்தெடுத்தாய்?” என்று கேட்க, அந்தப் பிள்ளை, “என் அம்மா தினமும் குர்ஆன் மனப்பாடம் செய்யச் சொல்கிறார், ஆசிரியரிடம் அழைத்துச் செல்கிறார். ஆனால் என் தந்தையோ, என்னை விளையாடவும், நான் விரும்பியதைச் செய்யவும் அனுமதிக்கிறார்” என்று பதிலளித்தது.
அதைக் கேட்ட நீதிபதி, அந்த உரிமையை தாய்க்கே வழங்கி, “நீயே அவனுக்கு அதிக உரிமை உடையவள்” என்று தீர்ப்பளித்தார். ஏன் தெரியுமா? ஏனெனில், அந்தத் தாய் தான் தன் மகனைச் சரியான முறையில் வளர்த்து, அவனுடைய எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும். இதனால்தான் குழந்தை வளர்ப்பு உரிமை குறித்து இஸ்லாத்தில் அதிக சட்டங்கள் கூறப்படவில்லை, ஏனெனில் குழந்தையின் நலன் தான் இங்கு மிக முக்கியம்.
📢மூலம் பார்க்க : https://t.me/Arafatbinhassan/12878)
குழந்தை பருவமடைந்து, பகுத்தறியும் ஆற்றல் பெற்ற பிறகு ?
ஒரு குழந்தை பருவமடைந்து வளர்ந்து, நல்லது கெட்டது தெளிவாக பகுத்தறியும் ஆற்றல் பெற்ற பிறகு, அது தனது பெற்றோரில் யாருடன் இருக்க வேண்டும் என்பதைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இப்னு குதாமா (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் தனது “அல்-முஃக்னி” என்ற நூலில் கூறுகிறார்:
பருவமடைந்து, பகுத்தறியும் ஆற்றல் பெற்றவர்களுக்கு வளர்ப்புரிமை பொருந்தாது. அவர்கள் தங்களின் பெற்றோரில் யாருடன் வேண்டுமானாலும் தங்கி இருக்கத் தேர்ந்தெடுக்கலாம்.
- ஆண் பிள்ளை: அவன் தன்னைப் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு சுயநலம் பெற்றுவிட்டால், பெற்றோரை விட்டுத் தனியாகவும் வாழலாம். எனினும், இருவரையும் பிரிந்து தனியாக வாழ்வதைத் தவிர்ப்பதும், இருவருக்கும் தொடர்ந்து நல்ல முறையில் நடந்து கொள்வதும் அவனுக்கு விரும்பத்தக்கது.
- பெண் பிள்ளை: ஒரு பெண், தனியாக வாழ அனுமதிக்கப்பட மாட்டாள். ஏனெனில், அவளைக் கெடுக்கக்கூடியவர்கள் அவளிடம் நுழைந்து, அவளுக்கும் அவளது குடும்பத்திற்கும் அவமானம் உண்டாக்குவார்கள் என்ற அச்சம் உள்ளது. எனவே, அவளது தந்தை அவளைத் தனியாக வசிப்பதைத் தடுக்கலாம். ஒருவேளை அவளுக்குத் தந்தை இல்லையென்றால், அவளது பொறுப்பாளர்கள் (வலிய்யி) மற்றும் குடும்பத்தினர் அவளைத் தனியாக வாழ விடாமல் தடுக்கலாம்.”
(பார்க்க: அல்-முஃக்னீ 11/426).
பிள்ளை வளர்ப்பில் யார் செலவுசெய்ய வேண்டும்?
- பிரிந்த பெண்ணின் சொந்தச் செலவு:
மூன்றாவது தலாக் (பைன் தலாக்) சொல்லப்பட்டால், அந்தப் பெண்ணுக்கு கணவன் அவளது தனிப்பட்ட செலவுகளுக்கான பராமரிப்புச் செலவையோ, இருப்பிடத்தையோ கொடுக்கத் தேவையில்லை. ஆனால், அவள் கர்ப்பமாக இருந்தால், குழந்தை பிறக்கும் வரை அவளுக்குரிய செலவுகளை கணவன் கொடுக்க வேண்டும். - குழந்தையை வளர்ப்பதற்கான கூலி:
தலாக் செய்யப்பட்ட தாய், குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், அந்தப் பொறுப்புக்காக அவள் கூலி கேட்க உரிமை உண்டு. பல ஃபிக்ஹ் அறிஞர்கள் இந்த கருத்தையே கொண்டுள்ளனர். ஏனெனில், குழந்தையை வளர்க்கும் பொறுப்பு தாயின் மீது கட்டாயக் கடமை இல்லை. - குழந்தைக்கான உணவு, உடை போன்ற செலவுகள்:
குழந்தையின் உணவு, உடை, பால், மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகளுக்கான அனைத்து செலவுகளையும் தந்தைதான் ஏற்க வேண்டும். இது தலாக் செய்யப்பட்ட பிறகும், தாய் குழந்தையை வளர்க்கும் பொறுப்பில் இருக்கும்போதும் தந்தை மீது கடமையாகும். அல்லாஹ்வும் இதனை குர்ஆனில்
وَٱلْوَٰلِدَٰتُ يُرْضِعْنَ أَوْلَـٰدَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ ۖ لِمَنْ أَرَادَ أَن يُتِمَّ ٱلرَّضَاعَةَ ۚ وَعَلَى ٱلْمَوْلُودِ لَهُۥ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِٱلْمَعْرُوفِ ۚ لَا تُكَلَّفُ نَفْسٌ إِلَّا وُسْعَهَا
எவர் பாலூட்டுவதை முழுமைப்படுத்த விரும்புகிறாரோ அவருக்காக, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முழுமையான ஈராண்டுகள் பாலூட்டுவார்கள். நல்ல முறையில் அவர்களுக்கு உணவளிப்பதும் ஆடை கொடுப்பதும் எவருக்காக குழந்தை பெற்றெடுக்கப்பட்டதோ அவர் (குழந்தையின் உரிமையாளராகிய பிள்ளையின் தந்தை) மீது கடமையாகும். ஓர் ஆத்மா அதன் வசதிக்கு மேல் நிர்ப்பந்திக்கப்படாது.
(அல்-பகரா: 233)
அஷ்-ஷைக் முஹம்மது இப்னு சாலிஹ் அல்-உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
மூன்று தலாக் சொல்லப்பட்ட இந்தப் பெண்ணுக்கு, கணவன் அவள் தனிப்பட்ட முறையில் பராமரிப்புச் செலவு கொடுக்க வேண்டியதில்லை. ஆனால், அவள் கர்ப்பமாக இருந்தால், பிரசவிக்கும் வரை கர்ப்பத்திற்காக அவள் மீது செலவழிக்க வேண்டும். அதன் அடிப்படையில், கர்ப்பத்திற்கு என்ன செலவு தேவைப்படுகிறதோ, அதை அவளுடைய கணவன் கொடுக்க வேண்டும். பிரசவத்திற்குப் பிறகு, கர்ப்பத்திற்குரிய செலவுகள் மட்டுமே தனியாகக் கொடுக்க வேண்டும். அதாவது: பாலூட்டலுக்கான கூலி – பால், மேலும் குழந்தையின் ஆடைகள் போன்றவற்றுக்கான செலவுகள் அனைத்தும் இதில் அடங்கும். ஆனால், பிரசவத்திற்குப் பிறகு தாயின் உணவுச் செலவு அவர் மீது கடமை இல்லை. அல்லாஹ் கூறுகிறான்:
فَأَنفِقُوا۟ عَلَيْهِنَّ حَتَّىٰ يَضَعْنَ حَمْلَهُنَّ
“அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால், அவர்கள் தங்கள் கர்ப்பத்தை ஈன்றெடுக்கின்ற வரை அவர்களுக்கு செலவு செய்யுங்கள்.”
(அத்-தலாஃக்: 6)
“லிகாஅத் அல்-பாப் அல்-மஃப்தூஹ்” (147/கேள்வி எண் 8)
குழந்தையைப் பார்க்க மற்றவருக்குள்ள உரிமை ?
பிள்ளையை வளர்க்கும் உரிமை யாருக்கு இருந்தாலும், மற்ற பெற்றோர் பிள்ளையைப் பார்க்க வருவதைத் தடுக்கக் கூடாது என்பதில் அனைத்து அறிஞர்களும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர். குழந்தையை வளர்க்கும் பொறுப்பு தாயிடமோ அல்லது வேறு யாரிடமோ இருந்தாலும், தந்தை தனது பிள்ளைகளைப் பார்ப்பதற்கும், அவர்களின் நலன்களைப் பற்றி விசாரிப்பதற்கும் முழு உரிமை உண்டு.
இறுதியாக இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், குழந்தையை பராமரிக்கக் கூடிய உரிமையை தாய் பெற்றிருக்கும் பட்சத்தில், அத்தாய் தந்தை வசிக்கும் ஊரிலிருந்து வெளியேறி வேறு ஒரு ஊருக்கு குடிபெயர்க்கும் போது அந்த உரிமை அவளிடம் இருந்து நீங்கி, தந்தையிடம் செல்கிறது என்றும் உலமாக்கள் இது பற்றி பேசி இருக்கிறார்கள். அதேபோல் பிள்ளைவளர்ப்புக் கூலி மற்றும் பராமரிப்புச் செலவின் அளவு போன்ற அனைத்துமே ஒரு மார்க்க ஷரீஅத் சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கும் நீதிமன்றங்களில் மட்டுமே இதற்கு முழுமையான தீர்வு கிடைக்க நேரிடும் என்பதை இங்கே இறுதியாக நாம் சொல்லிக் கொள்கிறோம்.
அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.
கேள்விகளுக்கு: [email protected]
தொடர்ந்திருங்கள் நம்மோடு:
Comments (3)
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு.
மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணிடம் உள்ள தனது குழந்தைக்காக தந்தை வழங்கும் செலவில் மித மிஞ்சியதை அக்குழந்தையின் தாய் எடுத்துக் கொள்ளலாமா?
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
தாய், குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பின், அந்தப் பொறுப்புக்காக கூலி பெற உரிமை உண்டு. அதை முதலில் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுபோக தனது குழந்தைக்காக தந்தை வழங்கும் செலவில் மிஞ்சியதை, அவர் அனுமதித்தால் பயன் பெற்றுக்கொள்ளலாம். அப்படி இல்லையெனில் அதை (அடுத்த மாத) குழந்தைகள் செலவிற்கு எடுத்துவைப்பதே நலம். அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.
جزاك للّه خيرا