8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Hajj & Umrah

What Is Forbidden in the State of Ihram – Lesson 8இஹ்ராம் நிலையில் தடுக்கப்பட்ட காரியங்கள் | பாடம் – 8

This article is in Tamil.
On this page32

முகவுரை

அல்லாஹ்வின் கிருபையால் ஹஜ்ஜிற்கு எவ்வாறு நிய்யத் வைக்க வேண்டும், அதன் மூன்று வகைகள் (தமத்துஃ, இஃப்ராத், கிரான்) என்ன என்பன போன்ற மிக முக்கியமான சட்டங்களை நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம். இதனைத் தொடர்ந்து, மேதகு அஷ்ஷய்க் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் விளக்கங்களின் அடிப்படையில், ஒருவர் இஹ்ராம் அணிந்த பிறகு அவருக்குத் தடுக்கப்படக்கூடிய காரியங்கள் என்னென்ன என்பதை இந்தப் பகுதியில் விரிவாகக் காண்போம்.

ஒருவர் ஹஜ் அல்லது உம்ராவிற்காக இஹ்ராம் கட்டி நிய்யத் செய்துவிட்டால், அவர் ‘முஹ்ரிம்’ ஆகிவிடுகிறார். அதன் பிறகு சில காரியங்களைச் செய்வது மார்க்கத்தில் அனுமதியற்றதாக மாறிவிடுகிறது.

ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான தடைகள்

இஹ்ராம் அணிந்த பிறகு ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருசாராரும் பின்வரும் காரியங்களைச் செய்யக் கூடாது:

1. முடிகளை நீக்குதல்
தலையிலிருந்தோ அல்லது உடலின் மற்ற பாகங்களிலிருந்தோ முடிகளை கத்தரிக்கவோ, மழிக்கவோ அல்லது பிடுங்கவோ கூடாது.
2. நகங்களை வெட்டுதல்
கைகளிலோ அல்லது கால்களிலோ உள்ள நகங்களை வெட்டக் கூடாது.
3. நறுமணம் பூசுதல்
உடலிலோ, ஆடைகளிலோ அல்லது இஹ்ராம் துணிகளிலோ எவ்வித நறுமணப் பொருட்களையும் (அத்தர், சென்ட் போன்றவை) பயன்படுத்தக் கூடாது.
4. தாம்பத்திய உறவு
கணவன்-மனைவிக்கு இடையேயான தாம்பத்திய உறவு இஹ்ராம் நிலையில் முற்றிலும் தடை.

ஆண்களுக்கு மட்டுமே உரிய பிரத்யேகத் தடைகள்

ஆண்கள் இஹ்ராம் நிலையில் இருக்கும்போது, தங்களது உடலுறுப்புகளின் அளவிற்கு ஏற்பத் தைக்கப்பட்ட ஆடைகளை அணியக் கூடாது. அதாவது, உடலின் வடிவத்திற்கு ஏற்பத் தைக்கப்பட்டு, உடலைச் சுற்றிப் பிடிக்கும் எந்த ஓர் ஆடையையும் அணிய அனுமதி இல்லை.

  • முழுமையான தைக்கப்பட்ட ஆடைகளான சட்டை (Shirt) மற்றும் கால்சட்டை (Pant).
  • பனியன் (Banian) மற்றும் உள்ளாடைகள் (Underwears).
  • சாதாரணக் காலுறைகள் (Socks) மற்றும் தோலினால் ஆன காலுறைகள் (Shoes).

இஹ்ராமில் ஆண்களுக்கான (சலுகை)

இஹ்ராமின் சட்டங்களுக்கு மத்தியிலும் மார்க்கம் ஆண்களுக்கு ஒரு முக்கிய சலுகையை அளித்துள்ளது.

ஒருவருக்கு இஹ்ராம் கட்டுவதற்குரிய ‘கீழாடை’ (இஸார் எனப்படும் நீளத் துண்டு (டவல்)) கிடைக்கவில்லை என்றால், அவர் இஹ்ராம் நிலையில் கால்சட்டையை (ஸிர்வால்) அணிந்து கொள்வது அனுமதிக்கப்பட்டதாகும்.

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: خَطَبَنَا النَّبِيُّ ﷺ بِعَرَفَاتٍ فَقَالَ: «مَنْ لَمْ يَجِدِ الإِزَارَ فَلْيَلْبَسِ السَّرَاوِيلَ، وَمَنْ لَمْ يَجِدِ النَّعْلَيْنِ فَلْيَلْبَسِ الْخُفَّينِ»

இப்னு அப்பாஸ் (ரதியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ﷺ அவர்கள் அரஃபா மைதானத்தில் எங்களுக்கு உரையாற்றும்போது கூறினார்கள்: “எவர் கீழாடை (இஸார்) பெறவில்லையோ அவர் கால்சட்டையை (ஸிர்வால்) அணியட்டும். எவர் காலணிகளைப் பெறவில்லையோ அவர் தோல் காலுறைகளை (குஃப்) அணியட்டும்.”

ஆதாரம்: ஸஹீஹ் புகாரி (1841), ஸஹீஹ் முஸ்லிம் (1178).


இஹ்ராம் ஆடைகளில் ஏற்படும் இக்கட்டான நிலைகளும் மார்க்கச் சலுகைகளும்

அல்ஹம்துலில்லாஹ், இன்று நமக்கு இஹ்ராம் ஆடைகள் (துணிகள்) மிக அழகாகவும் தாராளமாகவும் கிடைக்கின்றன. இருப்பினும், ஒரு ஹாஜிக்கு எதிர்பாராத சில இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படலாம். மார்க்கம் அதற்கு எவ்வாறு சலுகைகளை வழங்கியுள்ளது என்பதை இங்கு காண்போம்.

1. ஆடையில் அசுத்தம் (நஜீஸ்) ஏற்படுதல்
ஒருவரது இஹ்ராம் துணியில் நஜீஸ் (அசுத்தம்) பட்டுவிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் மாற்று இஹ்ராம் துணி எதுவும் இல்லை; அந்த அசுத்தமான துணியை அவரால் உடுத்தவும் முடியாது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், அவர் தையல் தைக்கப்பட்ட சாதாரணக் கீழாடையையோ அல்லது கால்சட்டையையோ அணிந்து கொள்வதில் எவ்விதத் தவறும் இல்லை.
2. காலணிகள் (செருப்புகள்) கிடைக்காத நிலை
பொதுவாக, இஹ்ராம் அணிந்த ஆண் தன் கணுக்காலை மறைக்கக்கூடிய பூட்ஸ், ஷூக்கள் அல்லது லெதர் காலணிகளை அணியக் கூடாது. கணுக்கால் வெளியே தெரியும்படியான சாதாரணச் செருப்புகளையே அணிய வேண்டும். ஆனால் ஒருவருக்குச் சாதாரணச் செருப்புகள் கிடைக்கவில்லை என்றால், அவர் கணுக்காலை மறைக்கக்கூடிய தோல் காலுறைகளையோ (குஃப்) அல்லது ஷூக்களையோ வெட்டாமல் அப்படியே அணிந்து கொள்ள மார்க்கத்தில் அனுமதியுண்டு.

சட்ட மாற்றம் (மன்ஸூக்) குறித்த விளக்கம்

ஆரம்பக் காலத்தில், செருப்பு கிடைக்காதவர்கள் தோல் காலுறைகளை (குஃப்) அணியும்போது, அவற்றை கணுக்காலுக்குக் கீழே இருக்கும்படி வெட்டி அணிய வேண்டும் என்ற சட்டம் இருந்தது. ஆனால், பின்னாளில் இந்தச் சட்டம் மாற்றப்பட்டுவிட்டது (மன்ஸூக் ஆகிவிட்டது).

இதனை மார்க்க அறிஞர்கள் இருவேறு ஹதீஸ்களின் காலப் பின்னணியைக் கொண்டு விளக்குகிறார்கள்:

📍 மதீனாவில் கூறப்பட்ட சட்டம்
நபி ﷺ அவர்கள் மதீனாவில் இருந்தபோது, இஹ்ராம் அணிந்தவர் எத்தகைய ஆடைகளை அணிய வேண்டும் என்று கேட்கப்பட்ட போது, செருப்பு கிடைக்காதவர்கள் தோல் காலுறைகளை (லெதர் ஷூக்களை) கணுக்காலுக்குக் கீழே வெட்டி அணிய வேண்டும் என்று கட்டளையிட்டார்கள்.
ஆதாரம்: இப்னு உமர் (ரதியல்லாஹு அன்ஹு) அறிவிக்கும் ஹதீஸ். (ஸஹீஹ் புகாரி: 134, ஸஹீஹ் முஸ்லிம்: 1177).
📍 அரஃபாவில் கூறப்பட்ட சட்டம்
பின்னர் ஹஜ்ஜின் போது, அரஃபா மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த பேரவையில் நபி ﷺ அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது இந்தச் சட்டத்தை மறுபடியும் தெளிவுபடுத்தினார்கள்.

«مَنْ لَمْ يَجِدِ النَّعْلَيْنِ فَلْيَلْبَسِ الْخُفَّينِ»

“எவர் காலணிகளைப் (செருப்புகளைப்) பெறவில்லையோ அவர் தோல் காலுறைகளை அணியட்டும்.”

ஆதாரம்: இப்னு அப்பாஸ் (ரதியல்லாஹு அன்ஹுமா) அறிவிக்கும் ஹதீஸ். (ஸஹீஹ் புகாரி: 1841, ஸஹீஹ் முஸ்லிம்: 1178).

ஏன் வெட்டத் தேவையில்லை? – அஷ்ஷய்க் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் விளக்கம் — ஒரு “முஹ்ரிம்” அணிவதற்கு செருப்பு இல்லாத பட்சத்தில் பூட்ஸ், ஷூக்கள் அல்லது லெதர் காலணிகளை – கணுக்காலை மறைத்திருந்தாலும் அதனை வெட்டாமலேயே அணியலாம் என்று அஷ்ஷய்க் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரதியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஹதீஸை ஏன் முதன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு மிக அழகிய ‘உஸுலுல் ஃபிக்ஹ்’ (மார்க்கச் சட்டக் கலை) விதியைக் கொண்டு விளக்குகிறார்கள்:

கணுக்காலிற்குக் கீழ் வெட்டி அணியவேண்டும் என்ற செய்து மதீனாவில் நபி ﷺ அவர்கள் அளித்த விளக்கத்தை அத்துணை சஹாபாக்களும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அரஃபா மைதானத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தும் சங்கமித்திருந்த இடத்தில் நபியவர்கள் உரையாற்றினார்கள்.

மார்க்க விதியின்படி, தேவைப்படும் நேரத்தில் ஒரு சட்டத்தின் விளக்கத்தைத் தள்ளிப்போடுவதற்கு நபிமார்களுக்கு அனுமதி இல்லை.

(لا يجوز تأخير البيان عن وقت الحاجة)

ஒருவேளை செருப்பு இல்லாதவர்கள் ஷூ அல்லது தோல் காலுறைகளை அணியும்போது அதை ‘வெட்டுவது’ கட்டாயமாக இருந்திருந்தால், அரஃபாவின் அந்த மாபெரும் பொது உரையில் நபி ﷺ அவர்கள் கண்டிப்பாக “வெட்டி அணியுங்கள்” என்று சொல்லியிருப்பார்கள். அவர்கள் அப்படிச் சொல்லாமல் வெறும் “அணியட்டும்” என்று மட்டும் குறிப்பிட்டதால், “வெட்ட வேண்டும் என்ற பழைய சட்டம் மாற்றப்பட்டுவிட்டது” என்பது உறுதியாகிறது.

எனவே, ஒரு ஹாஜிக்குச் செருப்பு கிடைக்காத பட்சத்தில், அவர் கணுக்காலை மறைக்கும் தோல் காலுறைகளையோ அல்லது ஷூக்களையோ எவ்வித வெட்டுதலும் இன்றி அப்படியே அணிந்து கொள்ளலாம் என்பதே இறுதியான, சரியான கருத்தாகும். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

கணுக்காலுக்குக் கீழ் இருக்கும் காலணிகள்

சில காலுறைகள் (Socks) அல்லது காலணிகள் (Shoes) கணுக்காலுக்குக் கீழேயே முடிந்துவிடக் கூடியதாக இருக்கும். இஹ்ராம் அணிந்தவர் இவற்றை அணியலாமா என்ற சந்தேகம் பலருக்கு எழுகிறது. கணுக்காலுக்குக் கீழ் இருக்கும் இத்தகைய காலணிகளைத் தாராளமாக அணியலாம். ஏனெனில், இவை கணுக்காலை மறைக்காததால் சாதாரணச் செருப்பின் (நஃலைன்) சட்டத்திற்குள்ளேயே வந்துவிடுகின்றன.

கீழாடையை (இஸார்) முடிச்சுப் போடுதலும் பெல்ட் அணிதலும்

இஹ்ராம் கட்டியவர் தனது கீழாடையை (இஸார்) முடிச்சுப் போட்டுக் கொள்வதற்கோ, அல்லது ஒரு கயிறு மற்றும் பெல்ட் போன்ற ஒன்றைக் கொண்டு அதனைக் கட்டிக் கொள்வதற்கோ மார்க்கத்தில் முழுமையான அனுமதி உண்டு. இதனைத் தடுப்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று அஷ்ஷய்க் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் விளக்குகிறார்கள்.

இஹ்ராம் நிலையில் குளிப்பதும் தலையை அலசுவதும்

இஹ்ராம் நிலையில் முடி வெட்டக் கூடாது, முடிகளை நீக்கக் கூடாது என்ற சட்டம் உள்ளதே தவிர, குளிக்கக் கூடாது என்று எந்தச் சட்டமும் இல்லை. இஹ்ராம் அணிந்தவர் தாராளமாகக் குளிக்கலாம், தனது தலையை அலசலாம். உடல் மற்றும் மனப் புத்துணர்ச்சி பெறுவதற்கோ அல்லது அழுக்குகளை நீக்குவதற்கோ மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.

ஹாஜிகளிடம் காணப்படும் சில அறியாமைகளும் தவறான புரிதல்களும்

இன்று ஹாஜிகள் பலர் நேரடி விமானப் பயணம் (Direct flight) இல்லாமல், பல இடங்களுக்கு மாறிச் செல்லும் கனெக்டிங் விமானப் பயணங்கள் (Transit flights) மூலம் செல்லும் சூழல் ஏற்படுகிறது. இதனால் உடல் பெரிதும் சோர்வடைந்து, குளித்துப் புத்துணர்ச்சியாக இருந்த உடம்பில் நாற்றமும் வியர்வையும் ஏற்பட்டுவிடுகிறது.

இத்தகைய சூழலில் மக்காவிற்கு வந்து சேரும் ஹாஜிகளிடம் சில அறியாமைகள் காணப்படுகின்றன:

⚠️ தவறான புரிதல்கள்:
  • குளிக்காமல் இருப்பது: இஹ்ராம் அணிந்துவிட்டால் தலைக்குத் தண்ணீர் ஊற்றக் கூடாது, குளிக்கக் கூடாது என்று தவறாக நினைத்துக் கொண்டு விடுகிறார்கள்.
  • ஆடைகளை மாற்ற பயப்படுவது: உடுத்தியிருக்கும் இஹ்ராம் துணியைக் கழற்றினாலோ அல்லது மாற்றினாலோ இஹ்ராம் முறிந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள். உண்மையில், இஹ்ராம் துணியை மாற்றுவதால் வேறொரு இஹ்ராம் துணியை மாற்றுவதிலோ இஹ்ராம் முறியாது.
  • மலஜலம் கழிக்கச் சிரமப்படுவது: இஹ்ராம் துணியைக் கழற்றக் கூடாது என்ற பயத்தில், இஹ்ராம் துணியை அப்படியே மேலே கட்டிக்கொண்டு மிகக் கடினமான முறையில் மலஜலம் கழிக்கிறார்கள். இது முற்றிலும் அறியாமையாகும்.
இஹ்ராம் நிலையில் தடை செய்யப்பட்டுள்ளது நறுமணப் பொருட்களும், நறுமணம் கொண்ட சோப்புகளும் தானே தவிர, சாதாரணத் தண்ணீரில் குளிப்பது அல்ல.

எனவே, ஹாஜிகள் இத்தகைய தவறான புரிதல்களைத் தவிர்த்து, மார்க்கம் வழங்கியுள்ள சலுகைகளைப் புரிந்து கொண்டு, தூய்மையோடும் புத்துணர்ச்சியோடும் தங்களது வணக்கங்களை நிறைவேற்ற வேண்டும்.

தலை சொரிதல், குளித்தல்

இஹ்ராம் நிலையில் ஹாஜிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளையும், குறிப்பாகப் பெண்கள் பேண வேண்டிய ஆடைச் சட்டங்களையும், சஹாபியப் பெண்மணிகளின் நடைமுறைகளையும் இந்தப் பகுதியில் விரிவாகக் காண்போம்.

இஹ்ராம் அணிந்தவர் தனது உடலையோ அல்லது தலையையோ தேவைப்பட்டால் மென்மையாகவும் எளிதாகவும் சொரிந்து கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. அவ்வாறு சொரியும்போது அல்லது குளிக்கும்போது தலையிலிருந்து ஏதேனும் முடி தானாக உதிர்ந்தால், அவர் மீது எவ்விதக் குற்றமும் இல்லை; அதற்காகப் பரிகாரம் (ஃபித்யா) கொடுக்க வேண்டியதும் இல்லை.

மார்க்கம் எளியதாக்கிய ஒரு வணக்கத்தைக் கடினமாக்குவது நாம்தான். குறிப்பாகச் சில பயண முகவர்கள் (Travels) ஹாஜிகளைத் தேவையற்ற சட்டங்களைக் கூறிப் பயமுறுத்துகிறார்கள். கஷ்டப்பட்டுப் பொருளாதாரத்தைச் சேர்த்து வரும் ஹாஜிகளுக்கு நிம்மதியையும் நிவாரணத்தையும் அளிக்க வேண்டியவர்கள், இத்தகைய மார்க்க நூல்களைப் படிக்காமல் பொடுபோக்காக இருப்பது ஆச்சரியமும் வருத்தமும் அளிக்கிறது.


பெண்களுக்கான இஹ்ராம் சட்டங்கள் (முகத்திரை மற்றும் கையுறைகள்)

ஆண்களைப் போலவே பெண்களுக்கும் இஹ்ராம் நிலையில் சில பிரத்தியேகக் கட்டுப்பாடுகள் உள்ளன.

இஹ்ராம் அணிந்த பெண் தனது முகத்தின் அளவிற்கு ஏற்பத் தைக்கப்பட்ட புர்கா, நிகாப் (முகத்திரை) போன்ற ஆடைகளையோ அல்லது கைகளுக்காகத் தைக்கப்பட்ட கையுறைகளையோ (Gloves) அணிவது கூடாது. கையுறைகள் என்பது பருத்தி, கம்பளி அல்லது இதர பொருட்களால் கைகளின் அளவிற்கு ஏற்பத் தைக்கப்படும் உரைகளைக் குறிக்கும்.

«لَا تَنْتَقِبِ الْمَرْأَةُ الْمُحْرِمَةُ، وَلَا تَلْبَسِ الْقُفَّازَيْنِ»

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “இஹ்ராம் கட்டிய பெண் முகத்திரை (நிகாப்) அணிய வேண்டாம்; கையுறைகளையும் அணிய வேண்டாம்.”

ஆதாரம்: ஸஹீஹ் புகாரி (1838).

பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஆடைகள்: முகத்திரை மற்றும் கையுறைகளைத் தவிர, மற்ற அனைத்து வகையான தைக்கப்பட்ட ஆடைகளையும் பெண்கள் இஹ்ராம் நிலையில் அணியலாம். பெண்கள் தங்களுக்குரிய சாதாரணச் சட்டை, கால்சட்டை, சாதாரணக் காலுறைகள் (Socks), தோல் காலுறைகள் போன்ற உடலின் அளவிற்கு ஏற்பத் தைக்கப்பட்ட ஆடைகளைத் தாராளமாக அணிய அனுமதி உண்டு. இஹ்ராம் என்ற பெயரில் ஆண்களைப் போலத் தனித்துத் துணிகளைப் போர்த்த வேண்டிய அவசியம் பெண்களுக்குக் கிடையாது.

அந்நிய ஆடவர்கள் கடக்கும்போது முகத்தை மறைக்கும் முறை

பெண்கள் இஹ்ராம் நிலையில் நிகாப் அணியக் கூடாது என்றாலும், மஹ்ரம் இல்லாத அந்நிய ஆடவர்கள் தங்களைக் கடந்து செல்லும்போது, முகத்தை மறைக்க மார்க்கத்தில் அனுமதியுண்டு. தலையிலிருந்து தங்களது முக்காட்டை (பெல்ட் ஏதுமின்றி) முகத்தின் மீது தொங்க விட்டு மறைத்துக் கொள்ளலாம். அவ்வாறு தொங்க விடும் துணி முகத்தில் பட்டாலும் அவர்கள் மீது எவ்விதக் குற்றமும் இல்லை; பரிகாரமும் இல்லை. அந்நிய ஆடவர்கள் கடந்து சென்றதும் முகத்தைத் திறந்து கொள்ள வேண்டும்.

அன்னை ஆயிஷா (ரதியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: «كَانَ الرُّكْبَانُ يَمُرُّونَ بِنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ مُحْرِمَاتٌ، فَإِذَا حَاذَوْا بِنَا سَدَلَتْ إِحْدَانَا جِلْبَابَهَا مِنْ رَأْسِهَا عَلَى وَجْهِهَا، فَإِذَا جَاوَزُونَا كَشَفْنَاهُ»

“நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருந்தபோது, வாகனக் கூட்டத்தினர் (அந்நிய ஆடவர்கள்) எங்களைக் கடந்து சென்றார்கள். அவர்கள் எங்களுக்கு நேராக வரும்போது, எங்களில் ஒவ்வொருவரும் தனது முக்காடைத் தலையிலிருந்து முகத்தின் மீது தொங்க விட்டு (மறைத்துக்) கொள்வோம். அவர்கள் எங்களைக் கடந்து சென்றதும் நாங்கள் எங்கள் முகங்களைத் திறந்து கொள்வோம்.”

ஆதாரம்: ஸுனன் அபீ தாவூத் (1833), ஸுனன் இப்னு மாஜா (2935).

கைகளை மறைத்தலும் ஹிஜாபின் அவசியமும்

அல்லாஹ்வின் அடியார்களே! இஹ்ராம் என்பது உடலை வருத்தும் வணக்கமல்ல. ஆண்கள் தாராளமாகக் குளிக்கலாம், ஆடைகளை மாற்றிக் கொள்ளலாம். பெண்கள் முகத்திரை, கையுறை தவிர்த்துத் தங்களது வழக்கமான தூய்மையான ஆடைகளை அணிந்து, அந்நிய ஆடவர்கள் வரும்போது மட்டும் முக்காடால் முகத்தை மறைத்துக் கொள்ளலாம். மார்க்கத்தின் இந்தத் தெளிவான சட்டங்களை உணர்ந்து செயல்பட அல்லாஹ் நமக்கு நேர்வழி செலுத்துவானாக.

இஹ்ராம் அணிந்த பெண் கைகளுக்கான பிரத்யேகக் கையுறைகளை (Gloves) அணியக் கூடாது என்று பார்த்தோம். எனினும், அந்நிய ஆடவர்கள் முன்னிலையில் அவள் தனது கைகளைத் தனது வழக்கமான ஆடையின் (ஜில்பாப் அல்லது புர்காவுடைய) கைப்பகுதியைக் கொண்டு மூடிக்கொள்வதில் எவ்விதத் தவறும் இல்லை.

அந்நிய ஆடவர்களின் (மஹ்ரம் இல்லாதவர்களின்) முன்னிலையில் பெண்கள் தங்களது முகத்தையும் கைகளையும் மறைப்பது கடமையாகும் (வாஜிப்). ஏனெனில், ஒரு பெண்ணின் உடல் உறுப்புகளில் முகமும் கைகளும் தான் மிகப்பெரிய அலங்காரங்களாகத் திகழ்கின்றன. இதில் முகமே மிக முக்கியமானது என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

இது குறித்து அல்லாஹ் திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்:

﴿…وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ…﴾

“அவர்கள் தங்களது கணவர்கள் தவிர மற்றவர்களுக்குத் தங்களது அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்…”

ஸூரத்துந் நூர் (24:31)

மேலும், ஹிஜாபின் அவசியம் குறித்து அல்லாஹ் தனது திருமறையில் மிகத் தெளிவாகக் கட்டளையிடுகிறான்:

﴿…وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ۚ ذَٰلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ…﴾

“நீங்கள் (நபியின் மனைவியரிடம்) ஏதேனும் ஒரு பொருளைக் கேட்டால், ஒரு திரைக்குப் பின்னாலிருந்தே அவர்களிடம் கேளுங்கள். அது உங்களுடைய உள்ளங்களுக்கும் அவர்களுடைய உள்ளங்களுக்கும் மிகவும் தூய்மையானதாகும்.”

ஸூரத்துல் அஹ்ஸாப் (33:53)

மார்க்கத்தின் இந்த வழிகாட்டுதலைச் சரியாகப் புரிந்து கொள்ளக்கூடிய பக்குவத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக.

முகத்திரைக்கான பித்அத்தான வழிமுறைகள்

இன்று சில பெண்களிடம் ஒரு பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. அதாவது, இஹ்ராம் நிலையில் முக்காடு போடும்போது, அந்தத் துணி முகத்தில் நேரடியாகப் படக் கூடாது என்பதற்காக, தலைமுடிக்கு அடியில் ஒரு குச்சி போன்ற அமைப்பையோ அல்லது ஒரு சிறிய பட்டையையோ கட்டிக் கொள்கிறார்கள். இத்தகைய செயலுக்கு மார்க்கத்தில் எந்தவொரு ஆதாரமும் அடிப்படையும் இல்லை என்று மேதகு அஷ்ஷய்க் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இது தேவையற்ற ஒன்றாகும். இது மார்க்கமாக்கப்பட்ட ஒன்றாக இருந்திருந்தால், அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கண்டிப்பாகத் தனது சமூகத்திற்கு இதனைத் தெளிவுபடுத்தி இருப்பார்கள்; இதில் மௌனமாக இருந்திருக்க மாட்டார்கள். எனவே, இத்தகைய புதிய வழிமுறைகளை உருவாக்கி உங்களைக் கஷ்டப்படுத்திக் கொள்ள வேண்டாம். துணி முகத்தில் பட்டாலும் குற்றமில்லை என்பதே நபியவர்களின் வழிமுறை.

இஹ்ராம் ஆடைகளைத் துவைத்தல், மாற்றுதல்

இஹ்ராம் கட்டியவர் ஏதேனும் காரணங்களுக்காகவோ அல்லது அழுக்கடைந்ததாலோ தான் அணிந்துள்ள இஹ்ராம் ஆடைகளைத் துவைப்பதற்கோ, அல்லது அவற்றைக் கழற்றிவிட்டு வேறு தூய்மையான மாற்று இஹ்ராம் ஆடைகளை அணிவதற்கோ மார்க்கத்தில் முழுமையான அனுமதி உண்டு.

தடுக்கப்பட்ட சாய ஆடைகள்

குங்குமப்பூ (ஸஅஃபரான்) அல்லது மஞ்சள் நிற சாயச் செடி (வர்ஸ்) ஆகியவற்றைக் கொண்டு சாயம் ஏற்றப்பட்ட ஆடைகளை இஹ்ராம் கட்டிய ஆண்கள் அணியக் கூடாது.

இப்னு உமர் (ரதியல்லாஹு அன்ஹு) [மரணம்: ஹிஜ்ரி 73 / கி.பி. 693] அவர்கள் அறிவிக்கிறார்கள்:

«…وَلَا تَلْبَسُوا مِنَ الثِّيَابِ شَيْئًا مَسَّهُ الزَّعْفَرَانُ وَلَا الْوَرْسُ»

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “குங்குமப்பூ (ஸஅஃபரான்) அல்லது வர்ஸ் (மஞ்சள் நிற சாயச்செடி) பூசப்பட்ட எந்த ஆடையையும் நீங்கள் அணிய வேண்டாம்.”

ஆதாரம்: ஸஹீஹ் புகாரி (134), ஸஹீஹ் முஸ்லிம் (1177).

இஹ்ராம் நிலையில் தவிர்க்க வேண்டிய மிக முக்கிய ஒழுக்கங்கள்

இஹ்ராம் அணிந்திருக்கும் காலத்தில் ஹாஜிகள் தங்களது நாவையும் நடத்தையையும் மிகவும் பேணுதலாக வைத்திருக்க வேண்டும். பின்வரும் மூன்று காரியங்களைத் தவிர்ப்பது ஒவ்வொரு முஹ்ரிமின் மீதும் கடமையாகும்:

1. இச்சையான பேச்சுகள் (ரஃபஸ்)
பாலின உணர்வுகளைத் தூண்டக்கூடிய பேச்சுகள் மற்றும் அநாகரிகமான வார்த்தைகள்.
2. பாவங்கள் செய்தல் (ஃபுஸூக்)
மார்க்க வரம்புகளை மீறுதல், புறம் பேசுதல் மற்றும் கோள் மூட்டுதல் போன்ற பாவங்கள். சாதாரண நாட்களிலேயே இவை தடுக்கப்பட்டவை எனும் போது, இஹ்ராம் நிலையில் இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
3. வீண் விவாதங்கள் (ஜிதால்)
கோபத்தை ஏற்படுத்தக்கூடிய தேவையற்ற தர்க்கங்கள் மற்றும் சண்டைகளில் ஈடுபடுதல்.

அல்லாஹ் நம் அனைவரையும் இத்தகைய பாவமான காரியங்களில் இருந்து பாதுகாத்து, தூய்மையான முறையில் ஹஜ்ஜை நிறைவேற்ற அருள் புரிவானாக.


ஆண்கள் தலை மற்றும் முகத்தை மறைப்பதன் சட்டம்

இஹ்ராம் அணிந்த ஆண் தன் உடலைத் தைக்கப்பட்ட ஆடைகளால் மறைக்கக் கூடாது என்பதைப் போன்றே, அவனது தலை மற்றும் முகத்தை மூடுவதற்கும் மார்க்கத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை இங்கு காண்போம்.

இஹ்ராம் அணிந்த ஒரு ஆண், தனது தலையோடு ஒட்டி இருக்கக்கூடிய தொப்பி, தலைப்பாகை (இமாமா), குத்ரா (அரபு தலைத்துணி) போன்ற எந்தப் பொருளைக் கொண்டும் தலையை மறைப்பது கூடாது.

சில ஹாஜிகள் வெயிலின் தாக்கம் அல்லது மறதி காரணமாகத் தங்களது இஹ்ராமின் மேல்துணியை (ரிதா) எடுத்து, முக்காடு போலத் தலையின் மீது போர்த்திக் கொள்கிறார்கள். இஹ்ராம் நிலையில் இருக்கும் ஆண்கள் இதனை ஒருபோதும் செய்யக்கூடாது; அவர்களது தலை எப்போதும் திறந்தே இருக்க வேண்டும்.

தலையை மறைக்கக் கூடாது என்பதைப் போலவே, இஹ்ராம் அணிந்த ஆண்கள் தங்களது முகத்தையும் மறைக்கக் கூடாது. இஹ்ராம் நிலையில் மரணிப்பவருக்குக் கூட இந்தச் சட்டம் பொருந்தும் என்பதில் இருந்து இதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.

நபி ﷺ அவர்களுடன் ஹஜ் செய்த ஒரு மனிதர், அரஃபா மைதானத்தில் இஹ்ராம் நிலையில் இருந்தபோது தனது வாகனத்திலிருந்து (ஒட்டகத்திலிருந்து) கீழே விழுந்து மரணித்துவிட்டார். அவரை அடக்கம் செய்யும் போது நபி ﷺ அவர்கள் இஹ்ராமின் சட்டங்களை விளக்கும் விதமாகக் கட்டளையிட்டார்கள்.

இப்னு அப்பாஸ் (ரதியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ﷺ அவர்கள் (மரணமடைந்த முஹ்ரிமைப் பற்றிக்) கூறினார்கள்:

«اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ، وَلَا تُحَنِّطُوهُ، وَلَا تُخَمِّرُوا رَأْسَهُ وَلَا وَجْهَهُ، فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا»

“அவரைத் தண்ணீராலும் இலந்தை இலையாலும் குளிப்பாட்டுங்கள். அவருடைய இரு ஆடைகளிலேயே (இஹ்ராம் துணிகளிலேயே) அவரை கஃபன் செய்யுங்கள். அவருக்கு நறுமணம் பூசாதீர்கள். அவருடைய தலையையோ, அவருடைய முகத்தையோ மறைக்காதீர்கள். ஏனெனில், அவர் மறுமை நாளில் தல்பியா சொல்லிக் கொண்டே எழுப்பப்படுவார்.”

ஆதாரம்: ஸஹீஹ் புகாரி (1265), ஸஹீஹ் முஸ்லிம் (1206).

குடை, கூடாரம் — அனுமதிக்கப்பட்ட நிழல்

தலை மற்றும் முகத்தை மறைக்கக் கூடாது என்ற சட்டம், உடலோடு ஒட்டியிருக்கும் தொப்பி அல்லது துணிகளுக்குத் தான் பொருந்துமே தவிர, நிழல் தரும் பிற பொருட்களுக்குப் பொருந்தாது. வெயில் பயங்கரமாக இருக்கும் சூழலில், ஹாஜிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளக் குடைகளைப் (Umbrella) பயன்படுத்துவது, காரின் கூரைக்குக் கீழ் அமர்வது அல்லது கூடாரங்களின் நிழலில் தங்குவது போன்றவற்றிற்கு மார்க்கத்தில் முழுமையான அனுமதியுண்டு. இவை தலையை மறைக்கும் சட்டத்திற்குள் வராது.

இதற்கான ஆதாரங்கள்:

📍 ஜம்ரத்துல் அகபாவில் நிழல் கொடுக்கப்பட்டமை
நபி ﷺ அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும் போது, வெயிலின் தாக்கத்திலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காகச் சஹாபாக்கள் ஒரு துணியைக் கொண்டு அவர்களுக்கு மேல் நிழல் பிடித்துக் கொடுத்தார்கள் என்பது ஆதாரப்பூர்வமான செய்திகளில் வந்துள்ளது. (துணி நபியவர்களின் தலையின் மீது படாமல், உயரே நிழலாகப் பிடிக்கப்பட்டது).
ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் (1293 – பிலால் (ரதியல்லாஹு அன்ஹு) மற்றும் உஸாமா (ரதியல்லாஹு அன்ஹு).
📍 நமிராவில் கூடாரம் அமைக்கப்பட்டமை
அரஃபா தினத்தன்று உச்சி சூரியன் சாயும் வரை நபி ﷺ அவர்கள் தங்குவதற்காக ‘நமிரா’ என்னும் இடத்தில் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது.
ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் (1218) — ஜாபிர் (ரதியல்லாஹு அன்ஹு) அவர்களின் நீண்ட ஹதீஸ்.

நபி ﷺ அவர்களின் இந்த சுன்னத்தின் அடிப்படையில்தான், இன்றும் அரஃபா மைதானம் முழுவதும் ஹாஜிகள் தங்குவதற்காகப் பிரம்மாண்டமான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் பரப்பளவை நம் ஊர் எதார்த்தத்தோடு ஒப்பிட்டுக் கூற வேண்டும் என்றால், குனியமுத்தூர் தாண்டி இன்னும் வெகுதூரம் பின்னாடி சென்றால் எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்குமோ, அதுபோல அரஃபா மைதானம் முழுவதும் கூடாரங்களாகக் காட்சி அளிக்கும். அந்தக் கூடாரங்களுக்குள் ஹாஜிகள் படுத்து ஓய்வெடுக்க மெத்தைகளும், அமர்ந்து அல்லாஹ்விடம் துஆ (பிரார்த்தனை) செய்வதற்கான அனைத்து வசதிகளும் சிறப்பான முறையில் அமையப் பெற்றுள்ளன.

அதேபோல், அரஃபா தினத்தன்று உச்சி சூரியன் சாயும் வரை தங்குவதற்காக ‘நமிரா’ என்னும் இடத்தில் நபி ﷺ அவர்களுக்கு ஒரு கூடாரம் அமைக்கப்பட்டதும், அவர்கள் அதன் கீழ் தங்கி நிழல் பெற்றதும் ஆதாரப்பூர்வமான (ஸஹீஹான) ஹதீஸ்களில் வந்துள்ளது.

அல்லாஹ்வின் அடியார்களே! மார்க்கம் காட்டிய வழியில் இஹ்ராமின் சட்டங்களை முறையோடு பேணி, அவனது சலுகைகளையும் சரியாகப் பயன்படுத்த வேண்டும். இத்தகைய உன்னதமான ஹஜ் வணக்கத்தை முறையாக நிறைவேற்றக்கூடிய பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக! இன் ஷா அல்லாஹ்.


நிலத்து விலங்குகளை வேட்டையாடுதல் தடை

இஹ்ராம் கட்டிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிலத்தில் வாழும் வேட்டைப் பிராணிகளை (விலங்குகளை) வேட்டையாடிக் கொல்வது, வேட்டையாடுவதற்கு மற்றவர்களுக்கு உதவி செய்வது அல்லது அந்தப் பிராணிகளை அவை இருக்கும் இடத்திலிருந்து விரட்டுவது ஆகிய அனைத்தும் ஹராம் (தடுக்கப்பட்டவை) ஆகும். இன்று நாம் நேரடியாக வேட்டையாடுவதில்லை; கோழி இறைச்சி போன்றவற்றை ஏற்கனவே அறுத்த நிலையில் வாங்கிச் சாப்பிடுகிறோம். ஆனால், ஆரம்பக் காலத்தில் வேட்டை என்பது மக்களின் மிக முக்கியமான வாழ்வாதாரமாகவும் அடிப்படைச் செயலாகவும் இருந்தது. அத்தகைய சூழலிலும், இஹ்ராம் நிலையில் வேட்டையாடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது.

திருமணம் மற்றும் இச்சை சார்ந்த காரியங்களின் தடை

இஹ்ராம் என்ற உன்னதமான, கண்ணியமான நிலையில் இருக்கும்போது ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலருக்கும் பின்வரும் காரியங்கள் முற்றிலும் ஹராமாக்கப்பட்டுள்ளன:

  • திருமண ஒப்பந்தம்: தனக்கோ அல்லது பிறருக்கோ திருமண ஒப்பந்தம் செய்வது.
  • பெண் கேட்டல்: திருமணத்திற்காகப் பெண் பேசுவது அல்லது பெண் பார்க்கச் செல்லுதல்.
  • தாம்பத்திய உறவு: கணவன்-மனைவிக்கு இடையேயான தாம்பத்தியம்.

நாம் நமது ஊர்களில் இருந்து டிராவல்ஸ் (பயணக் குழுக்கள்) மூலமாக ஹஜ்ஜிற்கு வரும்போது, வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த புதுப்புது மக்களைச் சந்திப்போம். அவர்களிடம் நலம் விசாரித்து, ஒரு நல்ல இணக்கமான உறவு ஏற்படும். அந்தப் பயணத்தில் மார்க்க அடையாளங்களைப் பேணக்கூடிய ஒரு சாலிஹான (நல்லொழுக்கமுள்ள) ஆண் பிள்ளையையோ அல்லது பெண் பிள்ளையையோ கண்டு, “நம் மகனுக்கு அல்லது மகளுக்கு இவரைத் திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்குமே” என்று பெற்றோர் நினைப்பது தவறில்லை.

ஆனால், இந்தத் திருமணப் பேச்சுகளையோ, பெண் பார்க்கும் படலங்களையோ அல்லது அதுகுறித்த எவ்வித ஏற்பாடுகளையோ இஹ்ராம் நிலையில் இருக்கும்போது பேசக் கூடாது. இஹ்ராம் என்பது மிக உயரிய, கண்ணியமான நிலை. எனவே, இஹ்ராமிலிருந்து விடுபடும் வரை இத்தகைய பேச்சுகளைத் தள்ளி வைக்க வேண்டும். சில பேர், “நாங்கள் திருமண ஒப்பந்தம் தானே செய்யக்கூடாது, பெண் பார்க்கலாமே” என்று தவறாக நினைப்பார்கள். இஹ்ராம் நிலையில் பெண்ணைப் போய் பார்ப்பதும் (பெண் பார்க்கும் படலமும்) கூடாது என்று மார்க்கம் தெளிவாக உணர்த்துகிறது.

«لَا يَنْكِحُ الْمُحْرِمُ وَلَا يُنْكِحُ وَلَا يَخْطُبُ»

உஸ்மான் இப்னு அஃப்பான் (ரதியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “இஹ்ராம் கட்டியவர் (தனக்கு) திருமணம் செய்யக் கூடாது; மற்றவருக்குத் திருமணம் செய்து வைக்கக் கூடாது; (திருமணத்திற்காகப்) பெண் கேட்கவும் கூடாது.”

ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் (1409).

எனவே, அல்லாஹ்வின் அடியார்களே! இஹ்ராம் எனும் தூய்மையான வழிபாட்டு நிலையில் இருக்கும்போது உலக ஆசைகள், இச்சைகள் மற்றும் குடும்பப் பேச்சுகளை முற்றிலும் தவிர்த்துவிட்டு, நம்முடைய முழு கவனத்தையும் வணக்க வழிபாடுகளில் மட்டுமே செலுத்த வேண்டும். அல்லாஹ் நம் அனைவரையும் அவனது நேர்வழியில் செலுத்துவானாக!


ஹஜ் பயணத்தில் மனப்பக்குவத்தின் அவசியம்

முந்தைய பகுதியில் இஹ்ராம் நிலையில் தவிர்க்க வேண்டிய மூன்று முக்கியக் காரியங்களில் ஒன்றாக ‘ஜிதால்’ (வீண் விவாதம்/தர்க்கம்) செய்வதைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, இன்று ஹாஜிகள் தங்களது பயணங்களின் போது எத்தகைய மனப்பக்குவத்தைக் கொண்டிருக்க வேண்டும், நடைமுறையில் என்னென்ன தவறுகள் நடக்கின்றன என்பதை இந்தப் பகுதியில் விரிவாகக் காண்போம்.

அல்லாஹ்வின் அடியார்களே! ஹஜ் பயணத்தில் எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது மனப்பக்குவமும் மன அமைதியும்தான். ஆனால் இன்று பெரும்பாலான டிராவல்ஸ் பேக்கேஜ்களில் ஹாஜிகளுக்கு மத்தியில் சண்டைகளும் சச்சரவுகளுமே அதிகமாக இருந்து கொண்டிருப்பதை நாம் காதால் கேட்டு, கண்களால் காண்கிறோம்.

“இந்தப்பக்கம் வாங்க”, “அந்தப்பக்கம் போகாதீங்க”, “நாங்கள் சொல்லச் சொல்ல நீங்கள் ஏன் அங்கே போகிறீர்கள்?”, “நாங்களெல்லாம் முன்னாடியே வந்துட்டோம், நீங்கள் ஏன் இவ்வளவு லேட் பண்றீங்க?” என்று ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்கிறார்கள். இத்தகைய தேவையற்ற விவாதங்களால், அவர்கள் தங்களது இஹ்ராமுடைய மாண்பையும், புனிதத்தையும் முழுமையாகக் குலைத்து விடுகிறார்கள்.

ஹஜ் பயணத்தின் போது, பேருந்து ஒரு இடத்தில் நிறுத்தப்படும்போது இந்த நிலையை நீங்கள் அனைவரும் கண்டிப்பாக எதிர்கொள்வீர்கள். இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காக அனைவரும் இறங்கும்போது, எல்லா ஹாஜிகளின் உடல்நிலையும் ஒரே மாதிரி இருக்கப் போவதில்லை.

சிலருக்கு உடல்நலக் குறைவு காரணமாகக் கூடுதல் நேரம் எடுக்கலாம். அத்தகைய சூழல்களில் மற்ற ஹாஜிகள் உடனடியாகக் கோபப்படக் கூடாது; பொறுமையை இழந்து அதனைச் சண்டையாக மாற்றக் கூடாது. ஏனெனில், நாம் இஹ்ராம் என்ற புனித நிலையில் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில், தாமதமாக வரக்கூடியவரும் அல்லாஹ்விற்குப் பயப்பட வேண்டும். “நம் ஒருவனுக்காக இத்தனை பேர் பேருந்துக்குள் அமர்ந்திருக்கிறார்களே, எவ்வளவு நேரம் பேருந்து நமக்காகக் காத்திருக்கும்?” என்ற பொறுப்புணர்வும், பிறருக்குச் சிரமம் தரக்கூடாது என்ற பயமும் அவருக்கும் இருக்க வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக, இன்று பல பயண முகவர்கள் (Travels) இந்தச் சண்டைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை; அவர்கள் இதனைக் கண்டு கொள்வதுமில்லை. ஒரு உண்மையான பொறுப்பாளர் என்பவர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வந்து “எல்லாம் சரியாக இருக்கிறதா? எல்லாம் கரெக்டா இருக்கா?” என்று எட்டிப் பார்த்துவிட்டுப் போவது மட்டும் போதாது. ஹாஜிகள் தங்களது ஊரிலிருந்து (சென்னை அல்லது கொச்சி போன்ற இடங்களிலிருந்து) புறப்படும் முதல் நொடியிலிருந்து, மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேரும் வரை இந்த மாண்பைப் பேணச் செய்ய வேண்டும். “நாம் எல்லாம் சகோதரர்கள், இந்த மாபெரும் வணக்கத்தைச் சிறப்பாகச் செய்ய ஒன்றாக வந்துள்ளோம்; சண்டை சச்சரவுகள் வேண்டாம்” என்று மக்களுக்குப் பொறுப்பாளர்கள் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

சடங்காக மாறும் ஹஜ்ஜும் பித்அத்துகளின் ஆபத்தும்

இன்று ஒரு ஹாஜி சுமார் 7 லட்சம் அல்லது 8 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து ஹஜ்ஜிற்குச் செல்கிறார். இவ்வளவு பெரிய தொகையைச் செலவு செய்து, இத்தனை பெரிய பாக்கியத்தைப் பெற, அந்த வணக்கத்தை எவ்வளவு பொறுப்புடன் கற்றுத் தர வேண்டும்!

ஆனால், இன்று வருபவர்களில் பெரும்பாலானவர்கள் எதையும் படிப்பதில்லை. ஹஜ்ஜை ஒரு மார்க்க வணக்கமாகப் பார்க்காமல் ஒரு ‘சடங்காகப்’ பார்க்கிறார்கள். “நான் காசு கட்டிவிட்டேன், எனக்கு ஹஜ் வந்துவிடும்; அவர்கள் என்னை விமானத்தில் அழைத்துச் செல்வார்கள், அங்கே யாராவது வழிகாட்டுவதைப் பார்த்து அப்படியே செய்துவிடுவேன்” என்று வருகிறார்கள். முன்னரெல்லாம் மக்கள் ஹஜ்ஜிற்குப் புறப்படுவதற்கு முன்பே அதன் சட்டங்களைத் தெளிவாகப் படித்துவிட்டுச் சென்றார்கள். ஆனால் நாம் இன்று படிப்பதே இல்லை. நாம் சரியான முறையில் படித்துச் செல்லாமல், ஏதேனும் ஒரு தவறான வழிகாட்டலால் நமக்கு மார்க்கத்தில் இல்லாத பித்அத்துகளை கற்றுத் தந்துவிட்டால், நம்முடைய ஹஜ்ஜின் நிலை என்னவாகும்? நாம் இவ்வளவு செலவு செய்தும் நமது வணக்கம் வீணாகிவிட்டால், அதற்கு அல்லாஹ்விடம் என்ன விதிவிலக்கு இருக்கிறது?

எனவே, அல்லாஹ்வின் அடியார்களே! நாம் காசு கொடுத்துவிட்டோம் என்ற திமிரிலோ அல்லது சடங்காகவோ ஹஜ்ஜை அணுகக் கூடாது. பயணத்தில் முழுமையான பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அல்லாஹ் நம் அனைவரையும் இத்தகைய அறியாமைகளில் இருந்தும் வீண் சச்சரவுகளில் இருந்தும் விடுவித்து, அவனது தூய வழியில் நேர்வழி செலுத்துவானாக!


பாவமற்ற தூய்மையான நிலையும் மார்க்க ரீதியான விவாதங்களும்

அல்லாஹ்வின் அடியார்களே! நாம் முந்தைய பகுதியில் இஹ்ராம் நிலையில் இருக்கும்போது தவிர்க்க வேண்டிய முக்கிய ஒழுக்கங்களான இச்சை பேச்சுகள் (ரஃபத்), பாவச் செயல்கள் (ஃபுஸூக்) மற்றும் வீண் விவாதங்கள் (ஜிதால்) ஆகியவற்றைக் குறித்துப் பார்த்தோம். இப்போது, அவற்றைத் தவிர்த்து முறையான ஹஜ்ஜை நிறைவேற்றுபவருக்குக் கிடைக்கும் மாபெரும் நற்கூலியையும், மார்க்க ரீதியாக விவாதிப்பதற்கான வரம்புகளையும் காண்போம்.

புத்தம் புதிய குழந்தையைப் போன்ற பாவமற்ற நிலை

ஒரு ஹாஜி தனது ஹஜ் பயணத்தின்போது தனது நாவையும் நடத்தையும் பேணி, பாவங்களிலிருந்து விலகி இருக்கும்போது அவருக்குக் கிடைக்கும் பாக்கியம் மிக மகத்தானது.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ: «مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ»

அபூஹுரைரா (ரதியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ﷺ அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்: “யார் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்து, அதில் இச்சையான பேச்சுகளிலோ அல்லது பாவச் செயல்களிலோ ஈடுபடாமல் இருக்கிறாரோ, அவர் தனது தாய் அவரைப் பெற்றெடுத்த அன்று இருந்ததைப் போன்று (புத்தம் புதிய, பாவமற்ற) நிலையில் ஊர் திரும்புவார்.”

ஆதாரம்: ஸஹீஹ் புகாரி (1521), ஸஹீஹ் முஸ்லிம் (1350).

அல்லாஹ்வின் அடியார்களே! இத்தகையதொரு உன்னதமான நிலையை நாம் அடைய வேண்டும் என்றால், அதற்காக நாம் பயணத்தில் கடுமையாக உழைக்க வேண்டும்; பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ரஃபஸ், ஃபுஸூக், ஜிதால் — மூன்று வார்த்தைகளின் விளக்கம்

ٱلْحَجُّ أَشْهُرٌۭ مَّعْلُومَـٰتٌۭ ۚ فَمَن فَرَضَ فِيهِنَّ ٱلْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِى ٱلْحَجِّ

ஸூரா அல்-பகரா (2:197)

இந்த மூன்று வார்த்தைகளுக்கான தெளிவான விளக்கங்களை அறிஞர்கள் பின்வருமாறு விவரிக்கிறார்கள்:

ரஃபஸ் (الرَّفَث)
தாம்பத்திய உறவு மற்றும் சொல், செயலால் ஏற்படக்கூடிய அனைத்து வகையான ஆபாசமான மற்றும் இச்சையைத் தூண்டக்கூடிய பேச்சுகளைக் குறிக்கும்.
ஃபுஸூக் (الفُسُوق)
மார்க்க வரம்புகளை மீறிச் செய்யக்கூடிய அனைத்து விதமான பாவச் செயல்களையும் (புறம் பேசுதல், கோள் மூட்டுதல் போன்றவற்றை) குறிக்கும்.
ஜிதால் (الجِدَال)
கோபத்தை ஏற்படுத்தக்கூடிய வீணான சண்டைகள், தர்க்கங்கள் அல்லது பயனற்ற விவாதங்களைக் குறிக்கும்.

அழகிய முறையில் விவாதிப்பதற்கான மார்க்க அனுமதி

இஹ்ராம் நிலையில் விவாதம் (ஜிதால்) செய்வது தடுக்கப்பட்டுள்ளது என்றாலும், அதில் ஒரு விதிவிலக்கு உள்ளது. உண்மையை வெளிப்படுத்துவதற்கும், அசத்தியத்தை மறுப்பதற்கும் அழகிய முறையில் விவாதம் செய்தால் அது குற்றமாகாது; மாறாக அது அனுமதிக்கப்பட்டது.

ஹஜ்ஜிற்கு வந்திருக்கும் ஒரு ஹாஜி மார்க்கக் கல்வி படித்தவராக இருக்கிறார் என்று வைப்போம். அங்கு அறியாமையில் இருக்கும் மக்கள் மார்க்கத்திற்கு முரணான காரியங்களையோ அல்லது பித்அத்களையோ (புத்தாக்கங்களையோ) செய்வதை அவர் காண்கிறார். அத்தகைய சூழலில், அவர் இஹ்ராம் அணிந்த முஹ்ரிமாக இருந்தாலும் சரி, சண்டை சச்சரவுகள் வராத வண்ணம், அமைதியான முறையில் அவர்களுக்கு ஆதாரங்களைச் சொல்லி, அழகிய முறையில் விவாதிப்பதில் எவ்விதத் தவறும் இல்லை. நமக்கு மார்க்கம் நன்றாகத் தெரிந்திருந்தால் இத்தகைய நன்மையான விவாதங்களை தாராளமாகச் செய்யலாம். இதனை உறுதிப்படுத்தும் விதமாக அல்லாஹ் திருமறையில் பின்வருமாறு கட்டளையிடுகிறான்:

﴿ٱدْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِٱلْحِكْمَةِ وَٱلْمَوْعِظَةِ ٱلْحَسَنَةِ ۖ وَجَٰدِلْهُم بِٱلَّتِي هِيَ أَحْسَنُ﴾

“(நபியே!) உமது இறைவனின் பாதையில் ஞானத்தைக் கொண்டும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் அழைப்பீராக! இன்னும் அவர்களிடத்தில் மிக அழகிய முறையில் தர்க்கம் (விவாதம்) செய்வீராக!”

ஸூரத்துந் நஹ்ல் (16:125)

எனவே, அல்லாஹ்வின் அடியார்களே! தேவையற்ற உலக விவகாரங்களுக்காகவும், ஈகோ (Ego) காரணமாகவும் சண்டையிடுவதைத் தவிர்த்துவிட்டு, மார்க்கத்தின் உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைப்பதற்கான நல்விவாதங்களை நாம் இன்மையிலும் மறுமையிலும் நன்மையைப் பெற்றுத் தரும் வழிகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.


மறதி, அறியாமைக்கான சலுகைகளும் ஹரம் எல்லையின் சட்டங்களும்

அல்லாஹ்வின் அடியார்களே! இஹ்ராம் நிலையில் தடுக்கப்பட்ட காரியங்களை ஒருவர் செய்யும்போது மார்க்கம் அவருக்குப் பின்வரும் சலுகைகளை வழங்குகிறது:

இஹ்ராம் கட்டிய ஒருவர் மறதியாகவோ அல்லது மார்க்கச் சட்டம் தெரியாத அறியாமையினாலோ தைக்கப்பட்ட உடையை அணிந்தாலோ, தலையை மறைத்தாலோ அல்லது நறுமணம் பூசிக் கொண்டாலோ அவர் மீது எவ்விதப் பரிகாரமும் (ஃபித்யா) கிடையாது. அவர் எப்போது அதனை நினைவு கூர்கிறாரோ அல்லது எப்போது சரியான மார்க்கச் சட்டத்தை அறிந்து கொள்கிறாரோ, அப்போதே உடனடியாக அந்தத் தைக்கப்பட்ட ஆடையையோ அல்லது நறுமணத்தையோ அகற்றிவிட வேண்டும்.

நாம் ஹஜ், உம்ராவின் போது பார்த்திருக்கிறோம்; சில நாடுகளில் இருந்து வரக்கூடிய மக்கள் மார்க்கச் சட்டம் தெரியாத அறியாமையின் காரணமாக, இஹ்ராம் துணி அணியாமல் பேண்ட், சட்டை அணிந்தே கூட்டமாக உம்ரா செய்கிறார்கள். அல்லாஹ்வே அவர்கள் நிலையையும் அதற்கான காரணங்களையும் நன்கறிந்தவன்; அவன் போதுமானவன்.

அதேபோன்று, மறதியாக அல்லது அறியாமல் தனது தலையைச் சிரைத்தாலோ, உடலின் முடியை நீக்கினாலோ அல்லது நகங்களை வெட்டினாலோ அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை. ஆனால், தெரிந்தே (வேண்டுமென்றே) ஒருவர் இஹ்ராம் நிலையில் இவற்றைச் செய்தால் அவர் பாவத்தாளியாவார்.

ஹரம் புனித எல்லை குறித்த சட்டங்கள்

இந்த இறுதிச் சட்டம் மிகவும் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். இது இஹ்ராம் அணிந்த முஹ்ரிம்களுக்கு மட்டும் உரியது அல்ல; மாறாக, இஹ்ராம் அணியாமல் மக்காவில் வசிப்பவர்கள், அங்கு வேலை செய்பவர்கள் அல்லது படிக்கச் சென்றுள்ள மாணவர்கள் என ஹரம் எல்லைக்குள் இருக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும் (ஆண்/பெண் இருபாலருக்கும்) பொதுவான சட்டமாகும்.

ஹரம் எல்லைக்குள் (மக்காவின் புனித எல்லைக்குள்) பின்வரும் காரியங்கள் முற்றிலும் ஹராமாக்கப்பட்டுள்ளன:

1. வேட்டையாடுதல் தடை
ஹரம் எல்லைக்குள் வாழும் விலங்குகளை வேட்டையாடுவதோ, வேட்டையாடுவதற்கு ஆயுதங்கள் மூலமாகவோ அல்லது செய்கை மூலமாகவோ உதவி செய்வதோ ஹராமாகும். மேலும், அங்கிருக்கும் விலங்குகளை அவற்றின் இடத்திலிருந்து விரட்டுவதும் ஹராமாகும்.
2. செடி, மரங்களை வெட்டுதல் தடை
ஹரம் எல்லையில் உள்ள மரங்களையோ அல்லது அதன் பசுமையான செடி, கொடி மற்றும் புற்களையோ வெட்டுவதும், பிடுங்குவதும் ஹராமாகும்.
3. கண்டெடுக்கப்படும் பொருட்கள் (லுக்தா)
ஹரம் எல்லைக்குள் யாராவது பர்ஸ், பணம், பை போன்ற பொருட்களைத் தொலைத்து, அது உங்களுக்குக் கிடைத்தால், அதனைத் எடுப்பது ஹராம். அந்தப் பொருளை உரியவரிடம் ஒப்படைப்பதற்காக, அதனைப் பற்றி மக்களுக்கு அறிவிப்புச் செய்பவரைத் தவிர வேறு யாரும் அதனை எடுக்கக் கூடாது.

மக்காவின் புனித எல்லையைப் பற்றி நபி ﷺ அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்:

«إِنَّ هَذَا الْبَلَدَ حَرَّمَهُ اللَّهُ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالأَرْضَ، فَهُوَ حَرَامٌ بِحُرْمَةِ اللَّهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، لَا يُعْضَدُ شَوْكُهُ، وَلَا يُنَفَّرُ صَيْدُهُ، وَلَا يَلْتَقِطُ لُقَطَتَهُ إِلَّا مَنْ عَرَّفَهَا، وَلَا يُخْتَلَى خَلَاهُ»

இப்னு அப்பாஸ் (ரதியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்: நபி ﷺ அவர்கள் மக்கா வெற்றியின் போது கூறினார்கள்: “நிச்சயமாக இந்த நகரம் (மக்கா), வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த நாள் முதற்கொண்டே புனிதமானதாகும். அல்லாஹ் இதனைப் புனிதப்படுத்தியதன் காரணமாக இது மறுமை நாள் வரை புனிதமானதாகும். இதிலுள்ள முட்கள் வெட்டப்படக் கூடாது; இதிலுள்ள வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது; இதற்கான அறிவிப்புச் செய்பவரைத் தவிர (மற்றவர்கள்) இங்கு கண்டெடுக்கப்படும் பொருட்களை எடுக்கக் கூடாது; இதிலுள்ள பசுமையான புற்கள் பிடுங்கப்படக் கூடாது.”

ஆதாரம்: ஸஹீஹ் புகாரி (1349 / 1833), ஸஹீஹ் முஸ்லிம் (1353).


நிறைவுரை

அல்லாஹ்வின் கிருபையால், இஹ்ராம் அணிந்தவர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்த அனைத்துச் சட்டங்களையும் உள்ளடக்கிய எட்டாவது பாடத்தை நாம் இனிதே நிறைவு செய்துவிட்டோம்.

ஒரு ஹாஜி ஹஜ்ஜிற்குப் புறப்படுவதற்கு முன்னால் என்னென்ன சட்டங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமோ, அவை அனைத்தையும் இந்த வகுப்புகள் வரை நாம் விரிவாகக் கற்றுக்கொண்டோம். இன் ஷா அல்லாஹ், அடுத்த வகுப்பில் இருந்து ஹாஜிகள் ஹஜ்ஜை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற செயல்முறை (Practical) வடிவத்திற்குள் நாம் நுழையவிருக்கிறோம்.

எதனைக் கேட்டோமோ அதன்படி தூய்மையான எண்ணத்துடன் செயல்படக்கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக!


AUDIO – SOUNDCLOUD
ஆடியோ வடிவில் கேட்க
VIDEO – YOUTUBE
வீடியோ வடிவில் பார்க்க

If this article benefited you, please share it.