8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Hajj & Umrah

The Miqats of Hajj and the Rulings of Ihram – Lesson 5ஹஜ்ஜின் மீக்காத்துகள் மற்றும் இஹ்ராமின் சட்டங்கள் (பகுதி – 5)

This article is in Tamil.
உள்ளடக்கப் பட்டியல் 1. இஹ்ராம் நிலையும் மீக்காத்தின் அறிமுகமும் 2. நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் நிர்ணயித்த ஐந்து மீக்காத்துகள். 3. மீக்காத்துகளின் பொதுவான சட்டம் 4. விமானத்தில் பயணிப்பவர்களுக்கான இஹ்ராம் சட்டங்கள் 5. மீக்காத்திற்கு முன்பே இஹ்ராம் கட்டலாமா? (இமாம்களின் நிலைப்பாடு) 6. நபிகள் நாயகம் (ﷺ) அவர்களின் சுன்னா (வழிமுறை) 7. இஹ்ராம் உடையும் உள்ளாடையும் 9. மீக்காத்துகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கான சட்டம். 10. மக்காவாசிகளுக்கான இஹ்ராம் சட்டம் (ஹஜ் மற்றும் உம்ராவிற்கு) 11.ஆஇஷா (ரதியல்லாஹு அன்ஹா) அவர்களின் ஹதீஸ் ஆதாரம் 12.ஆஇஷா (ரதியல்லாஹு அன்ஹா) அவர்களின் உம்ராவும் அதன் விளக்கமும்:

இஹ்ராம் நிலையும் மீக்காத்தின் அறிமுகமும்

ஹஜ் அல்லது உம்ரா செய்ய நாடுபவர்கள் ‘இஹ்ராம்’ என்ற நிலைக்கு வர வேண்டும். உலக முஸ்லிம்கள் அனைவரும் மக்காவிற்குள் நுழைவதற்கு முன்பாகத் தாண்டி வர வேண்டிய ஐந்து குறிப்பிட்ட இடங்களை நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் நிர்ணயித்துள்ளார்கள். இந்த இடங்களுக்குப் பெயர்தான் ‘மீக்காத்’ (எல்லைகள்) ஆகும். எந்தத் திசையிலிருந்து, சாலை மார்க்கமாகவோ அல்லது வான் வழியாகவோ வந்தாலும், இந்த ஐந்தில் தங்களுக்கு நெருக்கமான ஏதாவது ஒரு மீக்காத்தைக் கடந்தே மக்காவிற்குள் நுழைய முடியும். இங்குதான் அவர்கள் இஹ்ராமுடைய நிலைக்கு வந்து மக்காவிற்குள் செல்ல வேண்டும்.

நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் நிர்ணயித்த ஐந்து மீக்காத்துகள்:

  • 1. துல்-ஹுலைஃபா (Dhul-Hulaifah):இது மதீனாவாசிகளுக்கான மீக்காத் ஆகும். மதீனாவிலிருந்து வருபவர்கள் அல்லது அந்தத் திசையிலிருந்து மக்காவிற்கு வடக்கே பயணித்து வருபவர்கள் அனைவருக்குமான மீக்காத் இதுவே. இன்று மக்கள் இதனை ‘அப்யார் அலி’ (Abyar Ali) என்று அழைக்கிறார்கள்.
  • 2. அல்-ஜுஹ்ஃபா (Al-Juhfah): இது சிரியா, லெபனான் போன்ற தேசத்தவர்களுக்கான மீக்காத் ஆகும். இன்று சவூதி அரேபியாவில் உள்ள ‘ராபிக்’ (Rabigh) நகருக்கு அருகில் உள்ள ஒரு பாழடைந்த கிராமமே இதுவாகும். எனவே, ராபிக் நகரத்திலிருந்து வருபவர்கள் இங்கிருந்து இஹ்ராம் கட்டுகிறார்கள்
  • 3. கர்னுல் மனாஸில் (Qarn al-Manazil):இது நஜ்த் வாசிகளுக்கான மீக்காத் ஆகும். முக்கியமாக ரியாத், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பஹ்ரைன், கத்தார் போன்ற பகுதிகளிலிருந்து வருபவர்களுக்கான எல்லை இதுவாகும்.
  • 4. யலம்லம் (Yalamlam):இது ஏமன் தேசத்தவர்களுக்கான மீக்காத் ஆகும். மேலும், இந்தியாவிலிருந்து விமானம் மூலம் ஹஜ் அல்லது உம்ராவிற்கு வருபவர்களுக்கான மீக்காத்தும் இதுவே ஆகும்
  • 5. தாது இர்க் (Dhat Irq):இது ஈராக் தேசத்தவர்களுக்கான மீக்காத் ஆகும்.
Meeqat Map

மீகாத் எல்லைகளின் விளக்கப்படம்

மீக்காத்துகளின் பொதுவான சட்டம்

இந்த மீக்காத்துகள் குறித்து நபி (ﷺ) அவர்கள் கூறும் பொழுது, இவை குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டுமின்றி, அந்த வழியாக வரும் பிற தேசத்தவர்களுக்கும் எல்லையாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்கள்.

هُنَّ لَهُنَّ، وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِ أَهْلِهِنَّ، مِمَّنْ أَرَادَ الحَجَّ وَالعُمْرَةَ

“அவை அந்தந்த ஊர்க்காரர்களுக்கும், அந்த ஊர்க்காரர்களல்லாத ஏனையவர்களுக்கும், ஹஜ் மற்றும் உம்ராவை நாடி அவற்றின் வழியாக வருபவர்களுக்கும் (இஹ்ராம் கட்டும் எல்லைகளாக) உரியவையாகும்.”

(நூல்: புகாரி: 1524, முஸ்லிம்: 1181)

எனவே, ஹஜ் அல்லது உம்ராவை நாடி மக்காவை நோக்கிச் செல்பவர், தரை வழியாகச் சென்றாலும் சரி, வான் வழியாகச் சென்றாலும் சரி, இஹ்ராம் அணியாமல் இந்த மீக்காத்தைக் கடப்பது ஹராம் ஆகும்.

விமானத்தில் பயணிப்பவர்களுக்கான இஹ்ராம் சட்டங்கள்

வான் வழியாக மக்காவிற்குச் செல்பவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாகவே குளித்துத் தயாராகிக் கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. அவர்கள் விமான நிலையத்திலோ அல்லது வீட்டில் இருந்தோ இஹ்ராம் ஆடைகளை (துணிகளை) அணிந்து கொள்வதில் எவ்விதத் தவறும் இல்லை.

ஆனால் இங்கு மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், வெறும் இஹ்ராம் துணியை அணிந்து கொள்வதால் மட்டுமே ஒருவர் ‘முஹ்ரிம்’ (இஹ்ராம் கட்டியவர்) ஆகிவிட மாட்டார். இஹ்ராம் துணியை உடுத்திய பிறகு, மீக்காத்திற்கு நேராக வரும்போது அல்லது மீக்காத்தை நெருங்கும் போது மட்டுமே அந்த வணக்கத்திற்குள் நுழைவதற்கான ‘நிய்யத்’ (எண்ணம்) செய்து, ‘லப்பைக் அல்லாஹும்ம…’ என்ற தல்பியாவை கூற வேண்டும். விமானத்தில் மீக்காத் குறித்த அறிவிப்பு வரும்போது இவ்வாறு நிய்யத் செய்வதுதான் சரியான முறையாகும். தல்பியா கூறும் பொழுது, நேரம் தாராளமாக இருந்தால் உம்ராவிற்கான தல்பியாவையும், நேரம் குறைவாக இருந்தால் ஹஜ்ஜிற்கான தல்பியாவையும் கூற வேண்டும்.

மீக்காத்திற்கு முன்பே இஹ்ராம் கட்டலாமா? (இமாம்களின் நிலைப்பாடு)

விமான நிலையத்திலோ அல்லது வீட்டிலோ முன்கூட்டியே நிய்யத் வைத்து இஹ்ராம் நிலைக்கு வந்தால் அது செல்லுபடியாகுமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுகிறது. மீக்காத்தை அடைவதற்கு முன்னதாகவே ஒருவர் நிய்யத் வைத்து தல்பியா கூறிவிட்டால், அவருடைய இஹ்ராம் முழுமையாகச் செல்லுபடியாகும். அவர் ‘முஹ்ரிம்’ ஆகிவிட்டார் என்பதே பெரும்பான்மையான உலமாக்களின் (மார்க்க அறிஞர்களின்) கருத்தாகும். ஹனஃபி மற்றும் ஷாஃபி மத்ஹப்களில் மீக்காத்திற்கு முன்பே இஹ்ராம் கட்டுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இமாம் மாலிக் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இதனை ‘மக்ரூஹ்’ (வெறுக்கத்தக்கது) என்று கூறுகிறார்கள். ஹிஜ்ரி 318-ஆம் ஆண்டு மரணித்த இமாமான இப்னுல் முன்ஸிர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், தம்முடைய ‘அல்-இஜ்மா’ என்ற நூலின் 51-வது பக்கத்தில்

أجمعوا على أن من أحرم قبل الميقات أنه محرم

“மீக்காத்திற்கு முன்பாக ஒருவர் நிய்யத் வைத்து முஹ்ரிமாக ஆகிவிட்டால் அது செல்லும் என்பதில் மார்க்க அறிஞர்களிடையே ‘இஜ்மா’ (ஏகோபித்த கருத்து) உள்ளது” என்று பதிவு செய்துள்ளார்கள்.”

இருப்பினும், இவ்வாறு முன்கூட்டியே இஹ்ராம் கட்டுவதால் பயணிகளுக்கு வீணான சிரமங்கள் ஏற்படலாம். சிலருக்குப் பயணம் ஒரு நாள் வரை கூட தாமதமாகலாம் (Transit), அந்த நேரங்களில் எல்லாம் இஹ்ராமுடைய கட்டுப்பாடுகளுடன் (முடி வெட்டக்கூடாது, நறுமணம் பூசக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகளுடன்) இருப்பது சிரமத்தை ஏற்படுத்தும் என்று உலமாக்கள் அறிவுறுத்துகிறார்கள்.

நபிகள் நாயகம் (ﷺ) அவர்களின் சுன்னா (வழிமுறை)

முன்கூட்டியே இஹ்ராம் கட்டுவது செல்லுபடியாகும் என்றாலும், மீக்காத்தை கடக்கும் போது நிய்யத் வைத்து தல்பியா கூறுவதுதான் நபி (ﷺ) அவர்களின் ‘சுன்னா’ (வழிமுறை) மற்றும் மிகச் சிறந்ததாகும்.

இதற்குச் சிறந்த ஆதாரம், நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்குப் புறப்பட்டபோது, வீட்டில் இருந்தே இஹ்ராம் கட்டிக்கொண்டு புறப்படவில்லை. மாறாக, அவர்கள் மதீனாவின் எல்லையைத் தாண்டி ‘துல்-ஹுலைஃபா’ (அப்யார் அலி) என்ற மீக்காத்திற்கு வந்த பிறகு அங்கிருந்துதான் இஹ்ராம் கட்டினார்கள்.

خُذُوا عَنِّي مَنَاسِكَكُمْ

“உங்களின் ஹஜ் வணக்கங்களை என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்” என்று நபி (ﷺ) அவர்கள் தங்களது விடைபெறும் ஹஜ்ஜின் போது கூறியுள்ளார்கள்.

[நூல்: முஸ்லிம்: 1297]

எனவே, நபிகளாரின் வழிமுறையைப் பின்பற்றி மீக்காத்தில் நிய்யத் செய்வதே சாலச் சிறந்ததாகும்.

இஹ்ராம் உடையும் உள்ளாடையும்

இஹ்ராம் என்பது உடலின் மேற்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் தைக்கப்படாத துணிகளைக் கட்டுவதாகும். இஹ்ராம் நிலையில் இருக்கும் ஆண்கள் எவ்விதத் தைக்கப்பட்ட ஆடையும் அணியக்கூடாது என்பதால், அவர்கள் பனியன் மற்றும் அதுபோன்ற எந்த உள்ளாடைகளையும் உடுத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. ஆனால் பெண்களுக்குக் குறிப்பான இஹ்ராம் ஆடை எதுவும் இல்லை, அவர்கள் அன்றாடம் உடுத்தும் சாதாரண ஆடையிலேயே இஹ்ராம் நிலையில் இருக்க வேண்டும்.

வணக்கத்தின் நோக்கமின்றி மக்கா செல்பவர்களின் சட்டம்

ஹஜ் அல்லது உம்ரா செய்யும் நோக்கம் இல்லாமல், வியாபாரம், வேலைக்காகச் செல்பவர்கள், அல்லது தபால்காரர்கள் போன்ற வேறு காரணங்களுக்காக மக்காவிற்குச் செல்பவர்கள் இஹ்ராம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை. யாருக்கு ஹஜ் அல்லது உம்ரா செய்ய வேண்டும் என்ற உறுதியான நிய்யத் (எண்ணம்) இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே மீக்காத்தில் இஹ்ராம் கட்டுவது கடமையாகும். வணக்கத்தின் நோக்கமின்றிச் செல்பவர்கள் இஹ்ராம் இல்லாமல் மீக்காத்தைக் கடந்து தாராளமாக மக்காவிற்குள் நுழையலாம். ஒவ்வொரு முறை மக்காவிற்குள் நுழையும் போதும் இஹ்ராம் கட்டித்தான் நுழைய வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தால் அது மக்களுக்கு பெரும் சிரமமாக அமைந்திருக்கும்; எனவே, அல்லாஹ் இதனை எளிமையாக்கித் தந்துள்ளான், இது அவன் தன் அடியார்கள் மீது காட்டும் கருணையாகும்.

ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ﷺ) கூறினார்கள்:

هُنَّ لَهُنَّ، وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِ أَهْلِهِنَّ، مِمَّنْ أَرَادَ الحَجَّ وَالعُمْرَةَ

“அவை அந்தந்த ஊர்க்காரர்களுக்கும், அந்த ஊர்க்காரர்களல்லாத ஏனையவர்களுக்கும், ஹஜ் மற்றும் உம்ராவை நாடி அவற்றின் வழியாக வருபவர்களுக்கும் (இஹ்ராம் கட்டும் எல்லைகளாக) உரியவையாகும்.”

(நூல்: புகாரி: 1524, முஸ்லிம்: 1181)

ஹஜ், உம்ரா நோக்கமின்றி மக்காவிற்குள் நுழைபவர்கள் இஹ்ராம் அணியத் தேவையில்லை என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு நபிகள் நாயகம் (ﷺ) அவர்களின் செயலே ஆகும். ஹிஜ்ரி எட்டாம் வருடம் மக்கா வெற்றியின் போது, நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் இஹ்ராம் அணியாமல் சாதாரண நிலையில்தான் மக்காவிற்குள் பிரவேசித்தார்கள். ஒரு முஹ்ரிம் (இஹ்ராம் கட்டியவர்) தலையை மறைக்கக் கூடாது என்பது சட்டம்; ஆனால், மக்காவிற்குள் நுழையும் போது நபிகளார் இஹ்ராம் கட்டாமல், போரில் பயன்படுத்தக்கூடிய தலைக்கவசம் அணிந்திருந்தார்கள். ஏனெனில், அப்போது அவர்கள் ஹஜ் அல்லது உம்ராவை நாடி வரவில்லை, மாறாக மக்காவை வெற்றி கொண்டு அங்கிருந்த இணைவைப்புகளை (ஷிர்க்கை) அகற்றும் நோக்கத்தில்தான் உள்ளே வந்தார்கள்.

மீக்காத்துகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கான சட்டம்

முன்பு கூறப்பட்ட ஐந்து மீக்காத்துகளுக்கும் மக்காவிற்கும் இடைப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் (உதாரணமாக: ஜித்தா, உஸ்பான், பஹ்ரா, பத்ரு போன்ற ஊர்களில் வசிப்பவர்கள்), இஹ்ராம் கட்டுவதற்காக மீக்காத்தைத் தேடிப் பின்னோக்கிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடமே (வீடே) மீக்காத் ஆகும். இங்கிருந்து வருபவர்கள் தங்களது வீட்டிலிருந்தே ஹஜ்ஹிற்கு இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம். ஆனால் அவர்கள் உம்ராவிற்உ அவ்வாறு வீட்டிலிருந்து இஹ்ராம் கட்ட முடியாது (இதற்கு தனி சட்டம் அதைப்பற்றி பின்னால் பார்ப்போம் இன் ஷா அல்லாஹ்). அதுவே மீக்காத்திற்கு வெளியேயும், உள்ளேயும் என இரண்டு வசிப்பிடங்களைக் கொண்டவர்கள் (உதாரணமாக, ஜித்தாவிலும் ஒரு வீடு, மீக்காத்திற்கு வெளியே ‘ஸெயில்’ என்ற இடத்திலும் ஒரு வீடு), தாங்கள் விரும்பினால் மீக்காத்திற்கு வெளியே சென்று அங்கிருந்தும் இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம்.

மக்காவாசிகளுக்கான இஹ்ராம் சட்டம் (ஹஜ் மற்றும் உம்ராவிற்கு)

மக்காவிலேயே வசிப்பவர்கள் அல்லது மக்காவில் வேலை செய்து தங்கியிருப்பவர்கள் (குடிமக்கள் மட்டுமின்றி மக்காவில் தங்கியிருப்பவர்கள் அனைவரும் மக்காவாசிகளாகவே கருதப்படுவர்) ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் வெவ்வேறு முறைகளில் இஹ்ராம் கட்ட வேண்டும்.

  • ஹஜ்ஜுக்காக: மக்காவாசிகள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்ட, எந்த மீக்காத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. அவர்கள் மக்காவில் உள்ள தங்களது வீட்டிலிருந்தே குளித்து நறுமணம் பூசி, இஹ்ராம் துணி அணிந்து நேராக மினாவிற்குச் செல்லலாம். இப்னு அப்பாஸ் (ரதியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் இதனை உறுதிப்படுத்துகிறது.

ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ﷺ) கூறினார்கள்:

هُنَّ لَهُنَّ، وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِ أَهْلِهِنَّ، مِمَّنْ أَرَادَ الحَجَّ وَالعُمْرَةَ

“அவை அந்தந்த ஊர்க்காரர்களுக்கும், அந்த ஊர்க்காரர்களல்லாத ஏனையவர்களுக்கும், ஹஜ் மற்றும் உம்ராவை நாடி அவற்றின் வழியாக வருபவர்களுக்கும் (இஹ்ராம் கட்டும் எல்லைகளாக) உரியவையாகும்.”

(நூல்: புகாரி: 1524, முஸ்லிம்: 1181)

இப்னு அப்பாஸ் (ரதியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் மீகாத்துகளைக் குறிப்பிட்ட பிறகு நபி ﷺ அவர்கள் கூறிய பொதுவான கட்டளை இதற்கு ஆதாரமாகும்:

فَمَنْ كَانَ دُونَهُنَّ، فَمُهَلُّهُ مِنْ أَهْلِهِ، وَكَذَلِكَ حَتَّى أَهْلُ مَكَّةَ يُهِلُّونَ مِنْ مَكَّةَ

“(மீகாத்துகளுக்கு) உட்பட்ட பகுதிகளில் இருப்பவர், அவர் புறப்படும் இடத்திலிருந்தே (இஹ்ராம் கட்டித் தல்பியா சொல்ல வேண்டும்). அவ்வாறே மக்கா வாசிகளும் மக்காவிலிருந்தே இஹ்ராம் கட்ட வேண்டும்.”

[நூல்: புகாரி: 1524, முஸ்லிம்: 1181]

(குறிப்பு: ‘ஃபமுஹல்லுஹு’ என்றால்: அவர் தனது இஹ்ராம் இடத்திலிருந்து தல்பியா மொழியும் இடம்)

ஆனால் இச்சட்டம் மக்காவாசிகள் (அல்லது மக்காவில் தங்கியிருப்பவர்கள்) உம்ரா செய்ய நாடினால் மேலுள்ள சட்டம் பொருந்தாது, அவர்கள் வீட்டிலிருந்தே இஹ்ராம் கட்டக் கூடாது. மாறாக, ஹரம் (புனித) எல்லையை விட்டு வெளியேறி, ‘ஹில்’ (ஹரம் அல்லாத பகுதி) பகுதிக்குச் சென்று அங்கிருந்துதான் இஹ்ராம் கட்ட வேண்டும். மக்காவிற்கு வெளியே குறைந்தபட்சம் 15 முதல் 20 நிமிடப் பயணத் தொலைவில் உள்ள ‘தன்யீம்’ (இன்று அதன் அருகாமையில் ஆஇஷா பள்ளி கட்டப்பட்டுள்ளது) அல்லது ‘ஜுஃரானா’ போன்ற இடங்களுக்குச் சென்று இஹ்ராம் கட்டிக்கொண்டு மீண்டும் மக்காவிற்குள் நுழைய வேண்டும்.

ஆஇஷா (ரதியல்லாஹு அன்ஹா) அவர்களின் ஹதீஸ் ஆதாரம்:

உம்ராவிற்காக மக்காவாசிகள் ஹரம் எல்லையை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்கு ஆஇஷா (ரதியல்லாஹு அன்ஹா) அவர்களின் ஹதீஸே முக்கிய ஆதாரமாகும். விடைபெறும் ஹஜ்ஜின் போது ஆஇஷா (ரதியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் அவர்களால் உம்ரா செய்ய முடியவில்லை. ஹஜ் முடிந்த பின் உம்ரா செய்ய அவர்கள் ஆசைப்பட்ட போது, மக்காவிலேயே தங்கியிருந்த நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள், ஆஇஷா (ரதியல்லாஹு அன்ஹா) அவர்களை வீட்டிலிருந்தே இஹ்ராம் கட்டச் சொல்லவில்லை. மாறாக, ஹரம் எல்லையை விட்டு ஹில் பகுதிக்கு வெளியேறி அங்கிருந்து இஹ்ராம் கட்டிக் கொண்டு வருமாறு கட்டளையிட்டார்கள். இதற்காக ஆஇஷா (ரதியல்லாஹு அன்ஹா) அவர்கள் சென்று வந்த இடமே இன்று ‘தன்யீம்’ என்று அழைக்கப்படுகிறது. இதிலிருந்து உம்ராவிற்கு ஹில் பகுதிக்குச் சென்றுதான் இஹ்ராம் கட்ட வேண்டும் என்பது தெளிவாகிறது.

ஆஇஷா (ரதியல்லாஹு அன்ஹா) அவர்களின் உம்ராவும் அதன் விளக்கமும்

சிலர் பல உம்ராக்கள் செய்வதற்கு ஆஇஷா (ரதியல்லாஹு அன்ஹா) அவர்களின் சம்பவத்தை ஆதாரமாகக் காட்டுகின்றனர். ஆனால், அதற்கான உண்மையான காரணம் வேறு. ஆஇஷா (ரதியல்லாஹு அன்ஹா) அவர்கள் ஹஜ்ஜோடு சேர்த்து உம்ரா செய்ய நிய்யத் செய்திருந்தார்கள்; ஆனால் மக்காவிற்குள் நுழையும் போது மாதவிடாய் ஏற்பட்டதால் அவர்களால் அந்த உம்ராவை நிறைவேற்ற முடியவில்லை. ஹஜ் முடிந்த பின், விடுபட்ட அந்த உம்ராவிற்குப் பகரமாக ஒரு உம்ராவைச் செய்ய நபிகளாரிடம் அவர்கள் அனுமதி கேட்டதாலேயே, நபிகளார் அவர்களை வெளியே சென்று இஹ்ராம் கட்டி வர அனுமதித்தார்கள்.


AUDIO – SOUNDCLOUD
ஆடியோ வடிவில் கேட்க
VIDEO – YOUTUBE
வீடியோ வடிவில் பார்க்க

If this article benefited you, please share it.