8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Hajj & Umrah

Collected Rulings of Hajj – Lesson 4ஹஜ் சட்டதிட்டங்களின் தொகுப்பு – வகுப்பு 4

This article is in Tamil.

பயணத்திற்கு முன் கவனிக்க வேண்டியவை

பிஸ்மில்லாஹ். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் கிருபையால் ஹஜ் வகுப்பின் நான்காவது பாடத்தில் நுழைகிறோம். கடந்த வகுப்பில், ஹஜ்ஜுக்குச் செல்பவர் பாவமன்னிப்புத் தேடுவது, அநீதிகளிலிருந்து விடுபடுவது, மற்றும் ‘ஹாஜி’ போன்ற பட்டங்களைப் போட்டுக்கொண்டு முகஸ்துதியில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது குறித்துப் பார்த்தோம்.

ஹஜ் பயணம் என்பது ஒரு சாதாரண சுற்றுலா அல்ல. இன்று ஒருவர் ஹஜ் செய்ய வேண்டும் என்றால் சுமார் ஏழு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இவ்வளவு பெரிய தொகையைச் செலவழித்துச் செல்லும் இந்த மாபெரும் வணக்கத்தை, சுன்னத்தான முறையில் செய்ய வேண்டும் என்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எனவே, ஹஜ் பயணத்தில் இறையச்சமுடைய நன்மக்களைத் துணைக்குச் சேர்த்துக்கொள்ள வேண்டும்; வழிகாட்டக்கூடிய டிராவல்ஸ் (Travels) நிறுவனங்கள் சரியான அகீதா (கொள்கை) உள்ளவர்களாகவும், சுன்னாவைப் பின்பற்றுபவர்களாகவும், பயண வசதிகளைச் சரியாகச் செய்து தருபவர்களாகவும் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். காசைச் செலவழித்துச் சென்றுவிட்டு, அங்கு இணைவைப்பையும் பித்அத்துகளையும் கற்றுத் தரும் கூட்டத்தில் சிக்கிக்கொள்ளக் கூடாது.

மீக்காத்தை அடைந்ததும் செய்ய வேண்டிய ஆரம்ப கடமைகள்

ஹஜ் அல்லது உம்ரா செய்ய நாடுபவர், தனது இஹ்ராமிற்கான பயண எல்லையான ‘மீக்காத்’ பகுதியை அடைந்ததும் முதன்மையாகச் செய்ய வேண்டியது, குளித்துச் சுத்தமாகி இஹ்ராம் ஆடையை அணிவதாகும்.

இஹ்ராம் கட்டும் முன்பு, குளித்துவிட்டு உடலில் நறுமணம் பூசிக்கொள்வது விரும்பத்தக்க (முஸ்தஹப்) சுன்னத்தாகும். நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு முன்பாகத் தைக்கப்பட்ட ஆடைகளைக் களைந்துவிட்டு குளிப்பார்கள்.

ஆயிஷா (ரதியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகிறார்கள்:

“அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு முன்னால் அவர்களது இஹ்ராமிற்காகவும்,(பெருநாளன்று ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்த பிறகு) முதல்-இஹ்ராமிலிருந்து விடுபட்டு கஃபாவை தவாஃப் செய்வதற்கு முன்னால் நான் அவர்களுக்கு நறுமணம் பூசி விடுவேன்”

(நூல்: ஸஹீஹுல் புகாரி 1539, ஸஹீஹ் முஸ்லிம் 1189).

இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், நறுமணத்தை உடலில் தான் பூச வேண்டுமே தவிர, இஹ்ராம் துணியில் அல்ல. மேலும், இஹ்ராம் கட்டிய பிறகு உடலில் எந்த நறுமணமும் பூசக்கூடாது.

மாதவிடாய் மற்றும் பிரசவத் தீட்டுடைய பெண்களின் சட்டம்

பெண்கள் மீக்காத்தை அடையும்போது அவர்களுக்கு மாதவிடாயோ அல்லது பிரசவத் தீட்டோ ஏற்பட்டால், அவர்களும் மற்றவர்களைப் போலவே குளித்துவிட்டு இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, நபி (ﷺ) அவர்களுடன் பயணித்த ஆயிஷா (ரதியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டபோது, நபி (ﷺ) அவர்கள், “நீ குளித்துவிட்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்” என்று கட்டளையிட்டார்கள். அதேபோல, அஸ்மா பின்த் உமைஸ் (ரதியல்லாஹு அன்ஹா) அவர்கள் மீக்காத்தான ‘துல்-ஹுலைஃபா’வில் குழந்தையைப் பெற்றெடுத்தபோது, நபி (ﷺ) அவர்கள், “குளித்துவிட்டு, இரத்தப்போக்கைத் தடுக்க ஒரு துணியால் கட்டிக்கொண்டு இஹ்ராம் கட்டுங்கள்” என்று கூறினார்கள்.

எனவே, இத்தகைய பெண்கள் இஹ்ராம் கட்டிவிட்டு, கஃபாவைத் தவாஃப் செய்வதைத் தவிர மற்ற ஹாஜிகள் செய்யும் அனைத்து வணக்கங்களையும் செய்ய வேண்டும். அவர்கள் சுத்தமான பிறகே தவாஃப் செய்ய வேண்டும்.

இஹ்ராமிற்கு முன் உடலைத் தூய்மைப்படுத்துதல் (இயல்பான மரபுகள்)

இஹ்ராம் ஆடை அணிவதற்கு முன், மீசை, நகங்கள், அக்குள் மற்றும் மர்மஸ்தான முடிகளை அகற்றித் தூய்மைப்படுத்திக் கொள்வது அவசியமாகும். ஏனெனில், இஹ்ராம் கட்டிய பிறகு இவைகளை நீக்குவது ஹராம் (தடைசெய்யப்பட்டது) ஆகிவிடும். இவை ஒரு முஸ்லிம் இயல்பாகவே பேண வேண்டிய ‘ஃபித்ரா’ (இயல்பு மரபுகள்) ஆகும்.

நபி (ﷺ) அவர்கள் ஐந்து விஷயங்களை மனிதனின் இயல்பு மரபுகள் என்று கூறினார்கள்:

  • 1. விருத்தசேதனம் (கத்னா) செய்தல்.
  • 2. மர்மஸ்தான முடிகளை நீக்குதல்.
  • 3. மீசையைக் கத்தரித்தல்.
  • 4. நகங்களை வெட்டுதல்.
  • 5. அக்குள் முடிகளை அகற்றுதல். இவற்றை 40 நாட்களுக்கு மேல் அகற்றாமல் விட்டுவிடக் கூடாது என்று நபி (ﷺ) அவர்கள் காலநிர்ணயம் செய்துள்ளார்கள்.

(நூல்: ஸஹீஹ் முஸ்லிம் – 258).

எனவே, இஹ்ராமிற்கு முன்பே இவற்றைச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

(குறிப்பு: இஹ்ராமிற்காகப் பிரத்தியேகமாகத் தலைமுடியை மொட்டையடிப்பதோ குறைப்பதோ மார்க்கத்தில் இல்லை; ஆனால் பொதுவாகக் குறைத்துக்கொள்வதில் தவறில்லை). .

தாடியை மழிப்பதன் தடை

உடலைச் சுத்தப்படுத்துவது குறித்துப் பேசும் இமாம் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தாடியைப் பற்றி மிகக் கடுமையான எச்சரிக்கையைப் பதிவு செய்கிறார்கள். தாடியைச் சிரைப்பதோ அல்லது வெட்டி எடுப்பதோ எல்லா காலங்களிலும் ஹராமாகும். மற்ற முடிகளை அகற்றச் சொன்ன மார்க்கம், தாடியை மட்டும் வளரவிடச் சொல்கிறது.

(خَالِفُوا الْمُشْرِكِينَ وَفَرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ)

“இணைவைப்பாளர்களுக்கு மாறுசெய்யுங்கள்; தாடிகளை வளரவிடுங்கள், மீசைகளை நன்கு கத்தரியுங்கள்.” (நூல்: புகாரி, முஸ்லிம்). தாடியை மழிப்பது என்பது இணைவைப்பாளர்களையும், (தாடியற்ற) பெண்களையும் ஒத்திருப்பதாகும். ஒரு சாதாரண பாமரன் கூட தாடியை வைத்திருக்கும்போது, கல்வியோடு தொடர்புடைய சில மார்க்க அறிஞர்கள் மத்தியிலும் தாடியை மழிக்கும் பழக்கம் இருப்பது மிகவும் கவலைக்குரியது என்று இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் வருத்தப்படுகிறார்கள். எனவே சுன்னாவைப் பேணி தாடியை வளர்ப்பது ஒவ்வொரு முஸ்லிமான ஆணின் கடமையாகும்.

(நூல்: ஸஹீஹுல் புகாரி 2892, ஸஹீஹ் முஸ்லிம் 259).

ஆண்களுக்கான இஹ்ராம் ஆடைகள் மற்றும் காலணிகள்

ஆண்கள் ‘இஸார்’ எனப்படும் கீழாடையையும், ‘ரிதா’ எனப்படும் மேலாடையையும் அணிந்துகொள்ள வேண்டும். இந்த இரண்டு துணிகளும் தையல் இல்லாதவையாகவும், வெண்மையாகவும் சுத்தமாகவும் இருப்பது சுன்னத்தாகும். காலணிகளைப் பொறுத்தவரை, செருப்பு அணிந்து இஹ்ராம் கட்டுவது சிறந்ததாகும். ஒருவேளை செருப்பு கிடைக்கவில்லை என்றால் ஷூ (Shoes) அல்லது தோல் காலுறைகளை (Khuff) அணியலாம்; ஆனால் அவை கணுக்காலை மறைக்காதவாறு கணுக்காலுக்குக் கீழே வெட்டப்பட்டிருக்க வேண்டும்.

பெண்களுக்கான இஹ்ராம் ஆடைகள்

பெண்கள் இஹ்ராம் நிலையில் கருப்பு, பச்சை அல்லது கண்ணைக் கவரக் கூடிய நிறம் அல்லாத வேறு எந்த நிறத்திலான ஆடையையும் அணியலாம். அவர்கள் பச்சை அல்லது கருப்பு நிறத்தை மட்டுமே பிரத்தியேகமாக அணிய வேண்டும் என்பது ஆதாரமற்றதாகும். ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு ஒப்பாவதைத் தவிர்க்க வேண்டும். இஹ்ராம் நிலையில் பெண்கள் முகத்திரை (நிக்காப்) மற்றும் கையுறைகளை அணியக்கூடாது என்பதை நபி (ﷺ) அவர்கள் தடை செய்துள்ளார்கள். எனினும், அந்நிய ஆண்கள் இருக்கும் பட்சத்தில், முக்காடு போன்ற துணியைத் தலையிலிருந்து முகத்தின் மீது தொங்கவிட்டுக் கொள்ளலாம்.

நிய்யத் மற்றும் தல்பியாவின் முறைகள்

குளித்து, சுத்தமாகி இஹ்ராம் ஆடைகளை அணிந்த பிறகு, எந்த வணக்கத்தைச் செய்யப் போகிறோமோ அதற்கான நிய்யத்தை (எண்ணத்தை) உள்ளத்தில் செய்ய வேண்டும். வாகனத்தில் ஏறி அமர்ந்த பிறகு நாவால் ‘தல்பியா’ முழங்குவது மிகச் சிறந்ததாகும்.

  • உம்ரா மட்டும் செய்பவர்: (لَبَّيْكَ اللَّهُمَّ عُمْرَةً) “லப்பைக் அல்லாஹும்ம உம்ரத்தன்” என்று கூற வேண்டும்.
  • ஹஜ் மட்டும் செய்பவர் (இஃப்ராத்): (لَبَّيْكَ اللَّهُمَّ حَجًّا) “லப்பைக் அல்லாஹும்ம ஹஜ்ஜன்” என்று கூற வேண்டும்
  • ஹஜ்ஜுத் தமத்துஉ (சிறந்த முறை): ஹஜ்ஜுடைய மாதங்களில் மக்கா சென்று முதலில் உம்ராவை முடித்துவிட்டு இஹ்ராமிலிருந்து வெளியேறி, பின்பு துல்-ஹஜ் 8ஆம் நாளில் மீண்டும் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டுவது ‘தமத்துஉ’ எனப்படும். இதுவே மிகச் சிறந்த முறையாகும். இவர்கள் மீக்காத்தில் உம்ராவிற்கான நிய்யத்தை மட்டுமே (லப்பைக் அல்லாஹும்ம உம்ரத்தன்) கூறுவார்கள்.

விமானப் பயணமும் இஹ்ராமும்

விமானத்தில் பயணிப்பவர்கள் மீக்காத் எல்லையைக் கடக்கும்போது அறிவிப்பு செய்யப்படும். அப்போது தூங்கிவிடாமல் கவனமாக இருந்து தல்பியா கூற வேண்டும். விமானத்தில் இஹ்ராம் ஆடை மாற்றுவது சிரமம் என்பதால், பயணத்தைத் தொடங்கும் விமான நிலையத்திலேயே (உதாரணமாக: சென்னை அல்லது கொச்சி) இஹ்ராம் துணியை முன்கூட்டியே அணிந்துகொண்டு, மீக்காத் நெருங்கும்போது நிய்யத் செய்து கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது.

நிய்யத்தை நாவால் மொழிவது பித்அத் ஆகும்

ஹஜ் மற்றும் உம்ராவைத் தவிர, தொழுகை, தவாஃப் உள்ளிட்ட வேறு எந்த வணக்கத்திற்கும் நிய்யத்தை நாவால் மொழிவது கூடவே கூடாது. அது மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட ‘பித்அத்’ ஆகும்.

(إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ)

“செயல்கள் அனைத்தும் எண்ணங்களை (நிய்யத்தை) பொருத்தே அமைகின்றன.” சிலர், “ஹஜ்ஜுக்கு மட்டும் லப்பைக் அல்லாஹும்ம உம்ரத்தன் என்று நாவால் மொழிகிறோமே?” என்று கேட்கலாம்

ஷேக் அல்பானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் விளக்குவது போல, “லப்பைக்…” என்பது நிய்யத் அல்ல; அது ஒரு ‘திக்ர்’ (இறைநினைவு) மற்றும் தல்பியாவின் வாசகமாகும். உங்களின் உண்மையான நிய்யத், நீங்கள் வீட்டை விட்டு ஹஜ்ஜுக்காகக் கிளம்பும்போதே உங்கள் உள்ளத்தில் ஆரம்பமாகிவிடுகிறது. எனவே, ஹஜ்ஜைக் காரணம் காட்டித் தொழுகை போன்ற மற்ற வணக்கங்களுக்கு நாவால் நிய்யத் சொல்வது முற்றிலும் தவறாகும்.

இன்ஷா அல்லாஹ், அடுத்த வகுப்பில் மீக்காத்துடைய எல்லைகள் எங்கெங்கு அமைந்துள்ளன என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்


AUDIO – SOUNDCLOUD
ஆடியோ வடிவில் கேட்க
VIDEO – YOUTUBE
வீடியோ வடிவில் பார்க்க

If this article benefited you, please share it.