8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Hajj & Umrah

Collected Rulings of Hajj – Lesson 3ஹஜ் சட்டதிட்டங்களின் தொகுப்பு – வகுப்பு 3

This article is in Tamil.

ஹஜ் பயணத்திற்கு முந்தைய கடமைகள்

பிஸ்மில்லாஹ். வல்ஹம்துலில்லாஹ். ஹஜ் மற்றும் உம்ரா சட்டங்கள் குறித்த வகுப்பில் இன்று நாம் மூன்றாவது பாடத்தைப் பார்க்க இருக்கிறோம். முந்தைய இரண்டு பாடங்களில் ஹஜ் மற்றும் உம்ரா கடமையாவதற்கான ஆதாரங்களைப் பார்த்தோம். இன்று, இமாம் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் விளக்கத்தின்படி, ஹஜ் அல்லது உம்ரா பயணம் மேற்கொள்ள நாடுபவர், தனது பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னால் தன்னை எவ்வாறு தயார்படுத்திக் கொள்ள வேண்டும், எவ்வாறான அக மற்றும் புறத் தூய்மைகளைப் பேண வேண்டும் என்பதைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். இன் ஷா அல்லாஹ்.

ஒரு முஸ்லிம் ஹஜ் அல்லது உம்ரா பயணம் மேற்கொள்ள உறுதிபூண்டால், அவர் முதலில் தனது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் அல்லாஹ்வை அஞ்சி நடக்குமாறு (தக்வாவுடன் இருக்குமாறு) நல்லுபதேசம் செய்ய வேண்டும்.

ஹஜ்ஜுக்குச் செல்பவர், தனக்கு மற்றவர்கள் தர வேண்டிய பணத்தையும், தான் பிறருக்குக் கொடுக்க வேண்டிய கடன்களையும் எழுதி வைத்து, அதற்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்வது அவசியமாகும். இதிலிருந்து, கடனாளிகள் ஹஜ் செய்யலாமா என்ற கேள்விக்குத் தெளிவான விடை கிடைக்கிறது. அதாவது, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் இருக்கும் பட்சத்தில், கடனாளிகள் ஹஜ் செய்வதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.

இதனைத் தொடர்ந்து, ஹஜ் செய்யக்கூடியவர் தனது அனைத்துப் பாவங்களிலிருந்தும் கலப்பற்ற முறையில் பாவமன்னிப்பு (தவ்பா) தேட வேண்டும்.

உயர்ந்தோனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறூகிறான்:

(وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ)

“முஃமின்களே! நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் தவ்பா (பாவமன்னிப்பு) செய்யுங்கள்; இதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.”

சூரா அன்-நூர் (24 : 31)

தவ்பா என்பது வெறுமனே நாவால் ‘அஸ்தஃக்பிருல்லாஹ்’ என்று கூறுவது மட்டுமல்ல; அது வாழ்க்கையில் எடுக்கக்கூடிய ஒரு புதிய முடிவு. பாவங்களை விட்டு முழுமையாக விலகுவதும், கடந்த காலத்தில் செய்த பாவங்களுக்காக மனதார வருந்துவதும், மீண்டும் அந்தப் பாவங்களைச் செய்ய மாட்டேன் என்று உறுதிகொள்வதுமே உண்மையான தவ்பாவாகும். மேலும், பாவங்களுக்குத் தூண்டுதலாக இருக்கக்கூடிய சூழ்நிலைகளை விட்டும் விலகி இருக்க வேண்டும்.

ஹஜ் செய்பவர், பிறருடைய உயிர், பொருள் அல்லது கண்ணியம் சம்பந்தமாக ஏதேனும் அநீதி செய்திருந்தால், பயணத்திற்கு முன்னதாகவே அதிலிருந்து விடுபட வேண்டும். ஒருவருடைய பொருளை அநியாயமாக எடுத்திருந்தால் அதைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்; ஒருவரைப் பற்றிப் புறம் பேசி அவரது கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தி இருந்தால் நேரில் சென்று அல்லாஹ்வுக்காக மன்னிப்பு கோர வேண்டும்.

அபூஹுரைரா (ரதியல்லாஹு அன்ஹு) அறிவிக்கும் ஹதீஸ்:

مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لِأَخِيهِ مِنْ عِرْضِهِ أَوْ شَيْءٍ فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ قَبْلَ أَنْ لَا يَكُونَ دِينَارٌ وَلَا دِرْهَمٌ…

“எவரிடமாவது தன் சகோதரனுக்குச் செய்த அநீதியோ அல்லது கண்ணியம் தொடர்பான குறையோ இருந்தால், எந்தவொரு தீனாரோ திர்ஹமோ (பணமோ) பயனளிக்காத நாள் (மறுமை நாள்) வருவதற்கு முன்னரே, இன்றே அவரிடமிருந்து மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும்.”

(நூல்: ஸஹீஹ் புகாரி 2449)

இந்த உலகில் மன்னிப்பு கேட்காவிட்டால், மறுமையில் அநீதி செய்தவரின் நன்மைகள் எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும். நன்மைகள் தீர்ந்துவிட்டால், பாதிக்கப்பட்டவரின் பாவங்கள் எடுக்கப்பட்டு அநீதி செய்தவர் மீது சுமத்தப்படும் என்று நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். எனவே, ஹஜ்ஜுக்குச் செல்பவர் பிறருடைய உரிமைகள் விஷயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

ஹலாலான (தூய்மையான) பொருளாதாரத்தின் அவசியம்

ஹஜ் மற்றும் உம்ரா பயணத்திற்குப் பயன்படுத்தப்படும் பணம் முற்றிலும் ஹலாலான (தூய்மையான) வழியில் சம்பாதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ஹராமான பொருளாதாரம் மற்றும் வட்டி மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டு ஹஜ் செய்தால் அது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாது.

நபி (ﷺ) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரதியல்லாஹு அன்ஹு) அறிவிக்கும் ஹதீஸ்:

إِنَّ اللَّهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا

“நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன்; தூய்மையானவற்றைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக்கொள்ள மாட்டான்.”

(நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 1015)

இமாம் தபரானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பதிவு செய்துள்ள ஒரு ஹதீஸில், ஹலாலான செல்வத்தோடு ஹஜ்ஜுக்குப் புறப்படும் மனிதர் வாகனத்தில் ஏறி

“லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்” என்று கூறினால், வானத்திலிருந்து ஒரு மலக்கு, “உமது வருகை நல்வரவாகட்டும்; உமது உணவு ஹலாலானது, உமது வாகனம் ஹலாலானது, உமது ஹஜ் ஏற்றுக்கொள்ளப்பட்டது” என்று நற்செய்தி கூறுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக, அசுத்தமான ஹராமான செல்வத்தோடு ஒருவர் வந்து லப்பைக் கூறினால், “உமது வருகை ஏற்கப்படவில்லை; உமது உணவு ஹராம், உமது ஹஜ் ஒப்புக்கொள்ளப்படாது” என்று பதில் வரும்.

(அல்-முஃஜம் அல்-கபீர் 2989)

பிறரிடம் கையேந்துவதைத் தவிர்த்தல்

ஹஜ் செய்பவர் பிறரிடமிருந்து தேவையற்றவராக இருப்பதும், அவர்களிடம் கையேந்துவதைத் தவிர்ப்பதும் அவசியமாகும். ஹஜ் என்பது யாருக்குப் பொருளாதார மற்றும் உடல் ஆற்றல் இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே கடமை. வசதி இல்லாதவர்கள் கடன் வாங்கியோ அல்லது மற்றவர்களிடம் யாசகம் கேட்டோ ஹஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. எவரேனும் தாமாக முன்வந்து ஹஜ்ஜுக்கு உதவி செய்தால் அதை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை.

நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள்,

“யார் பிறரிடம் கையேந்தாத நிலையை நாடுகிறாரோ, அவரை அல்லாஹ் பிறரிடமிருந்து தேவையற்றவராக ஆக்குவான்” என்று கூறியுள்ளார்கள்.

(நூல்: ஸஹீஹுல் புகாரி 1427, ஸஹீஹ் முஸ்லிம் 1035).

மேலும் நபி (ﷺ) அவர்கள் கூறுகிறார்கள்:

(لَا يَزَالُ الرَّجُلُ يَسْأَلُ النَّاسَ حَتَّى يَأْتِيَ يَوْمَ القِيَامَةِ وَلَيْسَ فِي وَجْهِهِ مُزْعَةُ لَحْمِ»).

“ஒரு மனிதன் மக்களிடம் கேட்டுக்கொண்டே இருப்பான்; இறுதியில் அவன் மறுமை நாளில் வரும்போது, அவனது முகத்தில் ஒரு துண்டு சதை கூட இருக்காது.”

(நூல்: ஸஹீஹுல் புகாரி 1474, ஸஹீஹ் முஸ்லிம் 4040).

தொடர்ந்து யாசித்துக் கொண்டிருப்பவர், மறுமை நாளில் தன் முகத்தில் ஒரு துண்டு சதை கூட இல்லாத நிலையில் வருவார் என்றும் எச்சரித்துள்ளார்கள் (ﷺ)

முகஸ்துதியைத் தவிர்த்தல் மற்றும் ‘ஹாஜி’ பட்டத்தின் விபரீதம்

ஹஜ் மற்றும் உம்ரா செய்பவர், அதன் மூலம் அல்லாஹ்வின் திருப்தியையும் மறுமை வாழ்வையும் மட்டுமே நோக்கமாகக் கொள்ள வேண்டும். ஆனால், இன்று பலரிடத்தில் “ஹாஜி” என்ற பட்டத்தைப் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளும் மோசமான பழக்கம் பரவியுள்ளது. ஹஜ் செய்துவிட்டேன் என்று உலகுக்குக் காட்டுவதற்காகப் பெயர்ப்பலகைகளில் ‘ஹாஜி’ என்று எழுதுவது முகஸ்துதி மற்றும் பெருமையின் வெளிப்பாடாகும். சஹாபாக்களோ, பலமுறை ஹஜ் செய்த முன்சென்ற நல்லறிஞர்களோ (உதாரணமாக, இமாம் இப்னு பாஸ் அவர்கள் சுமார் 80 முறை ஹஜ் செய்திருந்தும்) தங்களை ‘ஹாஜி’ என்று அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. முகஸ்துதி அனைத்து அமல்களையும் அழித்துவிடும். எனவே இப்படிப்பட்ட இந்த பழக்கங்களை யாவும் நாம் விட்டுவிடவேண்டும் இல்லையெனில் அவை நம் அமல்களுக்கே பேராபத்தை ஏற்படுத்திவிடும். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.

உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான்:

مَن كَانَ يُرِيدُ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا نُوَفِّ إِلَيْهِمْ أَعْمَالَهُمْ فِيهَا وَهُمْ فِيهَا لَا يُبْخَسُونَ * أُولَٰئِكَ الَّذِينَ لَيْسَ لَهُمْ فِي الْآخِرَةِ إِلَّا النَّارُ ۖ وَحَبِطَ مَا صَنَعُوا فِيهَا وَبَاطِلٌ مَّا كَانُوا يَعْمَلُونَ

” எவர் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் நாடுகிறார்களோ, அவர்களுடைய செயல்களுக்குரிய பலனை இவ்வுலகிலேயே நாம் முழுமையாகக் கொடுத்து விடுவோம். அதிலே அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது. அத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறு எதுவுமில்லை. அவர்கள் இங்கு செய்தவை யாவும் அழிந்துவிட்டன; அவர்கள் செய்துகொண்டிருந்தவையும் வீணானவையே.”

சூரா ஹூத் (11: 15, 16).

ஹதீஸ் குத்ஸி (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்):

(قال الله تبارك وتعالى: أَنَا أَغْنَى الشُّرَكَاءِ عَنِ الشِّرْكِ مَنْ عَمِلَ عَمَلًا أَشْرَكَ فِيهِ مَعِي غَيْرِي تَرَكْتُهُ وَشِرْكَهُ)

“அல்லாஹ் கூறுகிறான்: இணைவைப்பாளர்களின் இணையை விட்டும் நான் மிகவும் தேவையற்றவன். எவரேனும் ஒரு செயலைச் செய்து, அதில் என்னுடன் மற்றொன்றை இணையாக்கினால், அவரையும் அவர் செய்த இணைவைப்பையும் நான் விட்டுவிடுகிறேன்.”

(நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 2985).

ஆகவே, ஹஜ்ஜைப் படம்பிடித்துக் காட்டுவதையும், பட்டங்கள் தேடுவதையும் தவிர்த்து, வணக்கங்களை அல்லாஹ்வுக்காக மட்டுமே ரகசியமாகப் பேண வேண்டும்.

நல்வழிப்படுத்தும் பயணத் தோழர்கள் மற்றும் ஹஜ்ஜை கற்றறிதல்

பயணத்தில் இறையச்சம் உடைய நல்ல மனிதர்களையும், மார்க்க நுணுக்கங்களை அறிந்த அறிஞர்களையும் தோழர்களாக ஆக்கிக் கொள்வது அவசியம். அறிவற்றவர்கள் மற்றும் பாவிகளுடன் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும். மார்க்கத்திற்கு முரணான அனாச்சாரங்களையும், ஷிர்க்கான காரியங்களையும் ஆதரிக்கும் டிராவல்ஸ்களைப் புறக்கணித்து, சரியான தவ்ஹீத் அஹ்லுஸ் ஸூன்னா ஸஹாபாக்கள் வழிநின்ற கொள்கையில் உள்ள டிராவல்ஸ்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உலக வசதிகளைப் பார்த்து மார்க்கத்தைத் தொலைத்து விடக்கூடாது. மேலும், ஹஜ் என்றால் என்ன, அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை அறிஞர்களிடம் கேட்டுத் தெளிவாகக் கற்றுக்கொள்ள வேண்டும். வழிகாட்டிகள் (Guides) சொல்வதை மட்டும் குருட்டுத்தனமாகப் பின்பற்றாமல், வணக்கத்தை அறிந்து செய்ய வேண்டும்.

பயணத்தின் ஒழுக்கங்கள் மற்றும் துஆக்கள்

ஹஜ்ஜுக்காக வாகனத்தில் (கார் அல்லது விமானம்) ஏறி அமரும் போது “பிஸ்மில்லாஹ்” என்று கூறி, அல்லாஹ்வைப் புகழ்ந்து, மூன்று முறை “அல்லாஹு அக்பர்” என்று கூறி பின்வரும் பயண துஆவை ஓத வேண்டும்.

(سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ * وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ)

“எங்களுக்கு இதனை வசப்படுத்தித்தந்த அவன் மிகவும் தூய்மையானவன்; (அவன் வசப்படுத்தித் தரவில்லையென்றால்) நாங்கள் இதனை அடக்கியாளும் சக்தி பெற்றிருக்க மாட்டோம். மேலும், நிச்சயமாக நாங்கள் எங்கள் ரப்பிடமே திரும்பிச் செல்பவர்கள்.”

சூரா அஸ்-ஸுக்ருஃப் (அத்தியாயம் 43: 13, 14).

பின்பு பயண துஆவை ஓதவேண்டும் (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்):

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِي سَفَرِي هَذَا البِرَّ وَالتَّقْوَى، وَمِنَ العَمَلِ مَا تَرْضَى، اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا، وَاطْوٍ عَنَّا بُعْدَهُ، اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ، وَالخَلِيفَةُ فِي الأَهْلِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ المَنْظَرِ، وَسُوءِ المُنْقَلَبِ فِي المَالِ وَالأَهْلِ

“இறைவா! எனது இந்தப் பயணத்தில் நன்மையையும் இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்ளும் செயல்களையும் உன்னிடம் நான் வேண்டுகிறேன். இறைவா! எங்களது இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு; அதன் தூரத்தைச் சுருக்கி விடு. இறைவா! நீயே பயணத்தில் துணையாக இருப்பவன்; குடும்பத்திற்குப் பொறுப்பாளனாக இருப்பவன். இறைவா! பயணத்தின் சிரமங்களிலிருந்தும், வருத்தமளிக்கக்கூடிய காட்சிகளிலிருந்தும், செல்வம் மற்றும் குடும்பத்தில் தீய மாற்றங்கள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.”

(நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 1342)

பயண நெடுகிலும் வீண் பேச்சுகள், கேலி கிண்டல்கள், புறம் பேசுதல் ஆகியவற்றைத் தவிர்த்து, குர்ஆனை ஓதுவதிலும் அதன் கருத்துக்களைச் சிந்திப்பதிலும், இஸ்திக்ஃபார் (பாவமன்னிப்பு) தேடுவதிலும் ஈடுபட வேண்டும். ஐவேளைத் தொழுகைகளை ஜமாஅத்தோடு பேணித் தொழ வேண்டும். பிறருக்குச் சிரமம் கொடுக்காமல் நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும்.

முடிவுரை

இதுவரை ஹஜ்ஜுக்குச் செல்பவர் பயணத்திற்கு முன்னும் பயணத்தின் போதும் பேண வேண்டிய ஒழுக்கங்களைப் பார்த்தோம். இன்ஷா அல்லாஹ், அடுத்த வகுப்பில் ஹஜ் செய்பவர் ‘மீக்காத்’ எனும் எல்லையை அடைந்ததும் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம். அல்லாஹ் நாம் கேட்கும் நல்ல விஷயங்களின்படி செயல்படும் பாக்கியத்தைத் தந்தருள்வானாக! அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.


AUDIO – SOUNDCLOUD
ஆடியோ வடிவில் கேட்க
VIDEO – YOUTUBE
வீடியோ வடிவில் பார்க்க

If this article benefited you, please share it.