10 Jumada al-Ula 1448Wed, 21 October 2026

கேள்வி எண் 1

ஸலஃபுகளின் வழியில் மார்க்கக் கல்வியை எவ்வாறு பெறுவது?

கேள்வி

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

எங்கள் பகுதியில் சில சலஃபி மக்கள் இருக்கிறார்கள். இருப்பினும், இந்த மன்ஹஜைப் பற்றி முறையாக விளக்கிக் கற்றுக்கொடுக்கவும், சரியான மார்க்கக் கல்வியை வழங்கவும் ஆசிரியர்கள் எங்களிடம் இல்லை.

எனவே, நாங்களும் எங்களுடைய பிள்ளைகளும் குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில், ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறையில் மார்க்கத்தைக் கற்றுக்கொண்டு வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

ஆனால், நாங்கள் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும், எப்படி மார்க்கக் கல்வியைப் பெற வேண்டும் என்று தெரியவில்லை.

நாங்களும் எங்களுடைய பிள்ளைகளும் சரியான மார்க்கக் கல்வியைக் கற்றுக்கொள்வதற்கு என்னென்ன வழிகள் உள்ளன?

மேலும், அரபு மொழியைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது? அதற்கு ஏதேனும் வழிகாட்டுதல் வழங்க முடியுமா?

جزاكم الله خيرا

பதில்

வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு.

அல்ஹம்துலில்லாஹ், நீங்களும் உங்கள் பிள்ளைகளும் ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் வழியில் மார்க்கத்தைக் கற்க ஆசைப்படுவது அல்லாஹ் தந்த பெரிய அருள். இதற்கான வழிகளைச் சுருக்கமாகத் தருகிறோம்:

கல்வி என்பது நேரடியாகக் கற்பதே

ஸலஃபுகளின் வழிமுறையில் கல்வியின் அடிப்படை, அறிஞர்களிடம் நேரடியாக அமர்ந்து கற்பதுதான். இந்த அடிப்படை இன்று பலருக்குத் தெரியாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. “YouTube-இலோ அல்லது மற்ற சமூக வலைத்தளங்களில் பார்க்கிறேன்” என்று இருந்துவிடுவது சரியான வழியல்ல.

எனவே, அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் இருக்கும் இடத்தையோ, அல்லது அறிஞர்களிடம் கற்று வந்த மாணவர்கள் பாடம் நடத்தும் இடத்தையோ தேடிச் செல்லுங்கள். உங்கள் ஊர் தொலைவில் இருந்தாலும், அறிஞர்களின் மாணவர்கள் உள்ள பள்ளிவாசலில் நடக்கும் வகுப்புகளில் அவ்வப்போதாவது குடும்பத்துடன் கலந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இவ்வாறு நேரடியாகப் பயில்வதும், அவ்வப்போது இப்படிப்பட்ட பள்ளிவாசல்களில் நடக்கும் வகுப்புகளில் கலந்து கொள்வதுமே கல்வி கற்பதில் அடிப்படையாகும்.

ஷைக் இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது:

س: هل سماع الأشرطة والدروس العلمية تغني عن الرحلة في الطلب؟

فأجاب بقوله: «سماع الأشرطة لا تغني عن الرحلة في الطلب، فالرحلة في الطلب أفضل؛ لأن الطالب يجلس إلى العالم ويتلقى منه مباشرة، وربما يحصل إشكال أو مراجعة فلا يحصل عليه فيما إذا استمع إلى الأشرطة، لكن لا شك أنه إذا استمع الأشرطة سيستفيد، فهي خير من الترك، لكن إذا ارتحل في طلب العلم فهو أفضل وأنفع، ولكن من كان في بلدٍ لا يوجد فيها علماء فتوجيهنا أن يستمع إلى أشرطة العلماء الموثوق بعلمهم من حيث سعة العلم، ومن حيث الأمانة في أدائهم.»

கேள்வி: ஒலிப்பதிவுகளையும் (ஆடியோக்களையும்) கல்விப் பாடங்களையும் செவி மடுப்பது, கல்விக்காகப் பயணம் செய்வதற்குப் பதிலாகப் போதுமானதா?

பதில்: “ஆடியோக்களை கேட்பது, கல்விக்காகப் பயணம் செய்வதற்குப் பதிலாகப் போதாது. கல்விக்காகப் பயணம் செய்வதே சிறந்தது. ஏனெனில் மாணவர் அறிஞரின் முன் அமர்ந்து, அவரிடமிருந்து நேரடியாகக் கற்கிறார். சில சமயம் ஒரு சந்தேகம் ஏற்படலாம், அல்லது திரும்பக் கேட்க வேண்டியிருக்கலாம்; ஒலிப்பதிவுகளைக் கேட்கும்போது அந்த வாய்ப்பு கிடைக்காது. ஆனாலும் ஒலிப்பதிவுகளைக் கேட்டால் பயன்பெறுவார் என்பதில் சந்தேகமில்லை; கல்வியை முழுவதுமாக விட்டுவிடுவதைவிட அது சிறந்தது. ஆனால் கல்வி தேடிப் பயணம் செய்தால், அதுவே சிறந்ததும் அதிகப் பயனுள்ளதுமாகும். எனினும், அறிஞர்கள் இல்லாத ஊரில் இருப்பவருக்கு நாங்கள் கூறும் வழிகாட்டல்: கல்வியின் விசாலத்திலும், அதை எடுத்துரைப்பதில் உள்ள நம்பகத்தன்மையிலும் நம்பப்படும் அறிஞர்களின் ஒலிப்பதிவுகளை அவர் கேட்கட்டும்.”

மஜ்மூஉ ஃபதாவா வ ரஸாஇல் இப்னு உஸைமீன், 26/144

இன்று உயிருடன் இருக்கும் நம்பகமான அறிஞர்களான அஷ்ஷைக் அல்-அல்லாமா ஸாலிஹ் அல்ஃபவ்ஸான், அஷ்ஷைக் அல்-அல்லாமா அப்துல் முஹ்ஸின் அல்-அப்பாத், அஷ்ஷைக் அல்-அல்லாமா அப்துல்லாஹ் அல்-புகாரீ, அஷ்ஷைக் அரஃபாத் அல்-முஹம்மதீ, அஷ்ஷைக் அப்துல்லாஹ் அத்-துஃபைரீ, அஷ்ஷய்க் காலித் அத்-துஃபைரீ, அஷ்ஷய்க் அப்துல் இலாஹ் அல்-ஜுஹனீ, அஷ்ஷய்க் முஹம்மத் பின் காலிப் அல்-உம்ரீ போன்ற மற்றும் இன்னும் பிற அறிஞர்களின் பாடங்களின் நம்பகமான மொழிபெயர்ப்புகளைக் கேளுங்கள், படியுங்கள். அதுபோலவே, மார்க்க பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற அல்லது மர்கஸ்களில் அறிஞர்களிடம் நேரடியாகக் கற்ற மாணவர்கள் நடத்தும் பாடங்களைப் படியுங்கள்.

கேட்பதோடு எழுதவும் செய்யுங்கள்

பாடங்களைக் கேட்பது மட்டும் போதாது. ஒரு குறிப்பேட்டை (நோட்டுப் புத்தகம்) வைத்துக்கொண்டு, கற்பதை எழுதி, திரும்பத் திரும்பப் படிப்பதே ஒருவரைக் கல்வியைத் தேடும் உண்மையான மாணவராக்குகிறது. எழுதப்படாத கல்வி விரைவில் மறந்து போகும்.

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் மகன் ஸாலிஹ் கூறுகிறார்கள்:

«رأى رجل مع أَبي مِحْبَرَة، فقال له: يا أَبا عبد الله، أَنت قد بلغت هذا المبلغ، وأَنت إِمامُ المسلمين. فقال: مع المِحبرة إلى المَقْبرة.»

“என் தந்தையிடம் ஒரு எழுதுவதற்கான மை பேனா (மிஹ்பரா) இருப்பதை ஒருவர் கண்டார். அவர், ‘அபூ அப்தில்லாஹ்வே! (இமாம் அஹ்மதே) நீங்கள் இந்த உயர்ந்த நிலையை அடைந்துவிட்டீர்கள்; நீங்கள் முஸ்லிம்களின் இமாமாக இருக்கிறீர்கள்!’ என்று கூறினார். அதற்கு அவர்கள், ‘மைப் பேனாவுடனே கப்று வரை (செல்வேன்)’ என்று கூறினார்கள்.”

இப்னுல் ஜவ்ஸீ, மனாகிபுல் இமாம் அஹ்மத், பக்கம் 37

எதிலிருந்து தொடங்குவது?

எதிலிருந்து தொடங்க வேண்டும், எந்த நூல்களை எந்த வரிசையில் கற்க வேண்டும் என்பதற்கு, எங்கள் தளத்தின் “இங்கே தொடங்குங்கள்” பக்கங்களைப் பாருங்கள்:

நம்பகமான தளங்களிலிருந்து மட்டும் பயன்பெறுங்கள்

நம்பகமான மார்க்கத் வலைதளங்களிலும். அறிஞர்களுடன் உறுதியான தொடர்புள்ள தளங்களிலும் உள்ள பாடங்களையும் பயன்களையும் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம். இதில் எச்சரிக்கை மிக அவசியம். ஏனெனில் இன்று சலஃப் மன்ஹஜிற்கு முரணானவர்கள் பலரும் “ஸலஃபிய்யா” என்ற பெயரிலேயே உலா வருகிறார்கள்.

அரபு மொழி, படிப்படியாக

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:

«وأيضًا فإن نفس اللغة العربية من الدين، ومعرفتها فرض واجب؛ فإن فهم الكتاب والسنة فرض، ولا يفهم إلا بفهم اللغة العربية، وما لا يتم الواجب إلا به فهو واجب، ثم منها ما هو واجب على الأعيان، ومنها ما هو واجب على الكفاية.»

“மேலும், அரபு மொழியே மார்க்கத்தின் ஒரு பகுதியாகும்; அதை அறிவது கடமையாகும். ஏனெனில் குர்ஆனையும் சுன்னாவையும் விளங்குவது கடமை; அரபு மொழியை விளங்காமல் அவற்றை விளங்க முடியாது. ஒரு கடமை எதைக் கொண்டே தவிர நிறைவேறாதோ, அதுவும் கடமையாகும். பிறகு, அரபு மொழியில் ஒரு பகுதியைக் கற்பது ஒவ்வொரு தனி நபர் மீதும் கடமையாகும் (ஃபர்து ஐன்). இன்னொரு பகுதியைக் கற்பது சமூகத்தின் மீதான கூட்டுக் கடமையாகும் (ஃபர்து கிஃபாயா). அதாவது, சமூகத்தில் போதுமான அளவு சிலர் அதைக் கற்றுவிட்டால், மற்றவர்கள் மீது குற்றம் இல்லை.”

இக்திதாஉஸ் ஸிராதில் முஸ்தகீம், 1/527

மேலே சொன்னவற்றோடு சேர்த்து, அரபு மொழியையும் படிப்படியாகக் கற்கத் தொடங்குங்கள்.

அல்லாஹ் நாடினால் மார்க்க கல்வியை முக்கியமாக கொள்கையை கனிசமாக கற்றவர்களுக்கு அரபி ஆன்லைன் வகுப்புகள் விரைவில் நடைபெறவிருக்கிறது இன் ஷா அல்லாஹ்.

தொடர்பில் இருங்கள்

முடிந்தால் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது அஹ்லுஸ் ஸூன்னா மார்க்கக் கல்வி நடைபெறும் பள்ளிவாசல்களுக்கு வாருங்கள். தொடர் வகுப்புகளிலும் (தவ்ராக்கள்), ரமதான் வகுப்புகளிலும் கலந்துகொள்ளுங்கள். முஸ்லிம் சகோதரர்களும் சகோதரிகளும் ஒருவரையொருவர் சந்தித்து, அல்லாஹ்வுக்காக நேசம் கொள்வது உங்கள் ஈமானை உறுதிப்படுத்தும்.

சகோதரிகளுக்கும் பெண் பிள்ளைகளுக்கும்

விரைவில், இன் ஷா அல்லாஹ், சகோதரிகளுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் தொலைதூர (ஆன்லைன்) குர்ஆன் வகுப்புகளை ஆரம்பிக்கவிருக்கிறோம். இணைந்து பயன்பெறுங்கள்.

அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பயனுள்ள கல்வியையும் நல்ல அமலையும் தந்தருள்வானாக.

அல்லாஹுவே மிக்க அறிந்தவன்.

Read this answer in English →
இந்தப் பதிலைப் பகிருங்கள்
WhatsAppTelegram