8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Knowledge & scholars

Scholars Are Lamps of Truth, and the Truth Never Goes Outஅறிஞர்கள் சத்தியத்தின் ஒளிவிளக்குகள்; ஆனால் சத்தியமோ என்றும் அணையாச் சுடர் – அஷ்ஷய்க் அப்துல்லாஹ் இப்னு அப்துர் ரஹீம் அல்-புகாரி

This article is in Tamil.


அஷ்ஷய்க் அப்துல்லாஹ் இப்னு அப்துர் ரஹீம் அல்-புகாரி (அல்லாஹ் அவரைப் பாதுகாக்கட்டும்) அவர்கள் கூறினார்கள்:

யார் பாதுகாப்பு, வெற்றி மற்றும் மகிழ்ச்சியை நாடுகிறாரோ, அவர் இந்த வசியத்தை (உபதேசத்தை) உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். அதாவது, அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் தன் தோழர்களுக்கும், தனக்குப் பின்னாலுள்ள சமூகத்திற்கும் உபதேசித்த வசியத்தை உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். இது இர்பாத் இப்னு சாரியா (அல்லாஹ் அவரை பொருந்திக்கொள்வானாக) அவர்களின் ஹதீஸில் இடம்பெற்றுள்ள பிரபல்யமான வஸியத்தாகும்.

அல்-இர்பாத் இப்னு சாரியா (அல்லாஹ் அவரை பொருந்திக்கொள்வானாக) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்தார்கள். அதனால் எங்கள் உள்ளங்கள் நடுங்கின, கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. நாங்கள் கூறினோம்: “அல்லாஹ்வின் தூதரே! இது ஒரு பிரியாவிடை உபதேசம் போல் தெரிகிறது. எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள்!” அதற்கு அவர்கள் (ﷺ) கூறினார்கள்:

“நான் உங்களுக்கு அல்லாஹ்வை அஞ்சும்படியும், (உங்கள் ஆட்சியாளருக்கு) செவியேற்று கீழ்ப்படியுமாறும் நான் உங்களுக்கு உபதேசிக்கிறேன். அது ஒரு ஹபஷி அடிமையாக இருந்தாலும் சரி. நிச்சயமாக உங்களில் எனக்குப் பிறகு வாழ்பவர்கள் பெரும் வேறுபாடுகளை (ஒற்றுமை இல்லாமையை) காண்பார்கள். எனவே, நீங்கள் எனது சுன்னாவையும், நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் சுன்னாவையும் உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள். அதனைக் கடைவாய்ப் பற்களால் கவ்விப் பிடித்துக்கொள்ளுங்கள். (மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்ட காரியங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், ஒவ்வொரு புதுமையான காரியமும் (பித்அத்) வழிகேடாகும்.[1] இந்த ஹதீஸ்:
1. அபூ தாவூத் (4607),
2. திர்மிதி (2676),
3. இப்னு மாஜா (42),
4. அஹ்மத் (17142) ஆகிய நூல்களில் காணப்படுகிறது,
இமாம் திர்மதீ இந்த ஹதீஸை ‘ஹஸன் ஸஹீஹ்’ என்று தரப்படுத்தியுள்ளார்கள்.
“

இதனால்தான், தூய்மையான சுன்னாவின் அறிஞர்களில் ஒருவர் மரணமடையும் போது நீங்கள் துக்கப்பட வேண்டாம். ஆம், சந்தேகமே இல்லை, இது உள்ளத்திற்கு வேதனையளிக்கும்; ஆன்மாவிற்குப் பாரமாக இருக்கும்; இஸ்லாத்திற்கு ஒரு பெரும் இழப்பாக இருக்கும். ஆனால் சத்தியம் நிலைத்திருக்கும். நான் மறுபடியும் சொல்கிறேன்: சத்தியம் நிலைத்திருக்கும். அதை எப்படிப்பட்ட கூட்டம் சுமக்கும்? வெற்றி பெற்ற கூட்டம் சுமக்கும்.

ஆகவே, நபர்கள் வருவார்கள், செல்வார்கள், ஆனால் சத்தியம் எப்படி இருக்கும்? அழியாது நிலைத்திருக்கும்.

وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا

“மேலும், ‘உண்மை வந்தது; பொய் மறைந்தது. நிச்சயமாக, பொய் மறையக்கூடியதே’ என்று கூறுவீராக! “

[அல் இஸ்ரா 17:81]

இந்த வசனத்தைத்தான் நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் மக்காவில் உள்ள சிலைகளை உடைத்துக் கொண்டிருந்தபோது திரும்பத் திரும்ப ஓதினார்கள்.

ஆகவே, அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும், அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் தங்கள் தோழர்களுக்கு சத்தியத்தைப் பற்றிக்கொள்ளவும், அதனுடன் நிலைத்திருக்கவும், அதைப் பலமாகப் பிடித்துக்கொள்ளவும் பயிற்சி அளித்தார்கள்.

அறிஞர்கள் மற்றும் இமாம்களில் நிச்சயமாக இந்த சத்தியத்தை சுமப்பவர்கள் உண்டு என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், ஒரு அறிஞர் அல்லது ஒரு இமாம் மரணமடைந்தால், மார்க்க அழைப்பும் மரணித்துவிடுமா? அவர் சென்று விட்டால், சத்தியமும் அவருடன் சென்றுவிடுமா? ஒருபோதும் இல்லை. ஒருபோதும் இல்லை.
யார் அல்லாஹ்வை வணங்கினாரோ, நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிருடன் இருப்பவன், அவன் மரணிப்பதில்லை. யார் முஹம்மது ﷺ அவர்களை வணங்கினாரோ, நிச்சயமாக முஹம்மது ﷺ அவர்கள் மரணித்துவிட்டார்கள்.1

ஆகவே, நாம் இந்த அடிப்படை விதியை உணர்ந்து கொள்ள வேண்டும். சுன்னாவின் அறிஞர்கள், மக்களுக்கு சத்தியத்தைத் தெளிவுபடுத்தும் வழிகாட்டிகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர்கள் மறைந்து விடுவது – அதாவது, அவர்கள் மரணிப்பது – சத்தியத்திற்கு மரணம் என்று அர்த்தமல்ல.

இக்கட்டுரையின் மூலம்

அஷ்-ஷய்க் அப்துல்லாஹ் இப்னு அப்துர் ரஹீம் அல்-புகாரி அவர்களின் வெள்ளிக்கிழமை சந்திப்புகள் (லிகாஆத் அல்-ஜுமுஆ) தொடர் 8-ல் இருந்து எடுக்கப்பட்டது.

கேள்விகளுக்கு: [email protected]

🌎 தொடர்ந்திருங்கள் நம்மோடு:


If this article benefited you, please share it.